திருநங்கைகள் பலரும் பலவிதமாக தொழில்களை செய்துவரும் காலம் இது. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகள் விற்பனையில் ஈடுப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறார் திருநங்கை ஜெம்சா ராணி. அதிக விலைமதிப்புள்ள வெளிநாட்டு செல்லப் பறவைகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளைப் பராமரித்து, நன்கு வளர்ந்தவற்றை விற்று லாபம் ஈட்டுகிறார். இதுபற்றி ஜெம்சா ராணியிடம் பேசினோம்.
''ஒரு ஜோடி பறவைகளை வளர்க்க கூண்டின் அளவு குறைந்தபட்சம் 3 அடி நீளம் மற்றும் 2 அடி அகலம் இருக்க வேண்டும். பறவைகள் நன்றாக வளர அந்த அளவுக்கு இருந்தால்தான் நல்லது. சிறிய கூண்டுகளில் பறவைகளை வளர்த்தால் அவை ஆரோக்கியமாக இருக்காது.
பறவைகளுக்கு நோய்கள் வந்தால் கொடுக்கவேண்டிய டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் தருவேன். பறவைகளின் ரகத்திற்கு மற்றும் நிறங்களுக்கேற்ப விலை நிர்ணயிக்கிறேன்.
நான் வளர்க்கும் ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் 350 ரூபாய், ஜாவா 500 ரூபாய் முதல் 2000 ரூபாய், காக்டெயில் மற்றும் ஆப்பிரிக்கா பறவைகள் 3,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் விற்கிறேன்.
ஒரு பறவையின் குஞ்சு பருவம் முதல் பெரியதாகும் வரை சுமார் 300 முதல் 500 ரூபாய் செலவாகும். ஆனால், குஞ்சுகளை காப்பாற்றுவது சவாலான வேலை. வானிலை மாற்றம் மற்றும் சீற்றத்தால் சில பறவைகள் இறக்க நேரிடலாம். அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பறவைகளின் பண்பறிந்து கண்காணிப்போடு பராமரித்தால் பொதுவாக லாபகரமாக இந்த தொழிலை செய்யலாம்.
பல திருநங்கைகள் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் சமூகத்தில் எங்களுக்கு இடமளிக்க மறுக்கின்றனர். இதை மாற்றி நாங்களும் சமமான மனிதர்கள்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் " என்றார்.
''நான் வளர்க்கும் பறவைகள் என் குழந்தைகள் போல'' என்கிறபடி பறவைகளுக்குடன் கொஞ்சிக் குலவி அவற்றை வளர்க்கிறார் ஜெம்சா ராணி.
source https://www.vikatan.com/literature/animals/karaikal-transgender-as-an-entrepreneur-amazing-in-the-business-of-birds
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக