சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி தினமும் ஒரு ஆளுமையின் பரிந்துரைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இன்று எழுத்தாளர் பாவண்ணன் பரிந்துரைத்த 5 புத்தகங்கள் இதோ:
ஹரிலால் - த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - தன்னறம் பதிப்பகம்
இந்த புத்தகத்தை எழுதிய கலைச்செல்வி திருச்சியை சேர்ந்தவர். மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது அவர் செய்த சத்தியாகிரக போராட்டம் பற்றியும் , மகாத்மா காந்தி மற்றும் அவரின் மூத்த மகனான ஹரிலால் அவர்களுக்கும் இடையான உறவு நிலைகள் பற்றியுமாக இரண்டு கிளைகளாக இந்த நாவல் பின்னப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் இளைய காந்தி என்று மக்களால் அழைக்கப்படும் அளவுக்கு போராட்டங்களில் சிறை சென்றவராக இருக்கிறார் ஹரிலால்.
பிற்பாடு மனமாற்றம் அடைந்து அதில் இருந்து விலகி இருக்கும் நபராக உருமாறுகிறார். அதுபோலவே ஆரம்பத்தில் தந்தை மகன் உறவு சுமூகமாக இருக்க, பின்னர் அதில் பிளவு ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தை மிகச் செறிவாக அழகாக ஒரு கட்டிடம் கட்டுவது போல படைத்திருக்கிறார் கலைச்செல்வி. இந்த நாவல் வெறும் காந்தியடிகளும் அவரின் மகனுக்குமான உறவைப் பற்றி பேசுகிறது என்னும் நிலையைத் தாண்டி சாதாரண தந்தை மகனுக்குமான உறவுகளை பற்றிப் பேசுகிறது. ஆகவே இந்நாவலை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
நொய்யல் - தேவிபாரதி - தன்னறம் பதிப்பகம்
இரண்டவது நான் சொல்ல விருப்பும் நாவல் நொய்யல் இதனையும் தன்னறம் பதிப்பகமே வெளியிட்டுள்ளது. இந்நாவல் நொய்யல் நதிக்கரையோரம் வாழ்ந்த பல மனிதர்களின் 150 வருட கால வாழ்வினை பதிவு செய்கிறது. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் போல மேலே இருப்பவர் கீழே செல்வதும் கீழே இருப்பவர் மேலே செல்வதுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆக வாழ்க்கை எனும் சக்கரத்திற்கு இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் சக்தி இருக்குறதே தவிர அதற்கு கருணையோ இரக்கமோ ஒரு போதும் இருந்தது கிடையாது என்பதை வெவ்வேறு மனிதர்களின் கதைகளின் மூலம் சொல்லியிருக்கிறார் தேவிபாரதி.
அகிலம் - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம்
அடுத்ததாக மூத்த எழுத்தாளரான வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகிலம் என்கிற சிறுகதை தொகுப்பு. நான் வழக்கமாக வண்ணதாசனின் எழுத்துக்களை மனதைப் படிக்கின்ற எழுத்துக்கள் என்று தான் சொல்லுவேன். அவருடைய எழுத்தாளுமையை மனதை மதிப்பிடும் கலை என்று நான் வகுத்துக்கொள்வேன். ஆண்கள், பெண்கள் மனதை வெவ்வேறு கோணங்களில் வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள், அதே போன்று பெண்களும் ஆண்களின் மனதைத் தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பகுப்பையும் தொகுப்பையும் அவர் வெவ்வேறு மாறுபட்ட கோணங்களில் பார்த்துக்கொண்டே வருகிறார்.
இதில் குறிப்பாக அகிலம் எனும் சிறுகதை மிக முக்கியமான சிறுகதை அந்த கதையில் வரக்கூடிய மனிதன் ஒரு புறம் தன் மனைவியையும் இன்னொரு புறம் முன்பு திருமணம் செய்யக்கூடியவளாக இருந்த பெண்ணையும் பார்க்கிறான். ஒருவள் தனது கருவில் இருக்கும் குழந்தையை இழந்து அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். இன்னொருவள் ஒரு பெரிய கடையின் முதலாளியாக இருந்து, வாழ்வில் எற்பட்ட சிக்கல்களின் காரணமாக இப்போது அதே கடையில் பணிப்பெண்ணாக இருக்கிறாள், இருந்தும் அவள் அதிலிருந்து மீண்டு வர பல முயற்சி செய்து போராடிக் கொண்டிருக்கிறாள். இப்படி நேர்மறையும் எதிர்மறையுமாக இந்த அகிலத்தை கட்டமைக்கிறார் வண்ணதாசன். ஏற்கெனவே சொன்னது போல மனதைப் படிக்கின்ற எழுத்துக்களால் இந்த தொகுப்பிலுள்ள அனைத்து சிறுகதைகளையுமே செய்துள்ளார் வண்ணதாசன்.
மழைக்கண் - செந்தில் ஜெகன்நாதன் - வம்சி பதிப்பகம்
இன்னொரு முக்கியமான சிறுகதை தொகுப்பாக நான் பார்ப்பது, இளைய எழுத்தாளனான செந்தில் ஜெகன்நாதன் எழுதிய மழைக்கண் என்கிற சிறுகதை தொகுப்பு. இந்த மழைக்கண் தொகுப்பு முழுக்க முழுக்க விவசாயக்குடிகளின் வாழ்க்கையைக் காட்டுகிறது.
வழக்கமாக விவசாயிகள் என்றாலே அவர்கள் பயிர் வைப்பதிலே இருக்கும் சிரமங்கள், விளைவித்த பயிரை விற்பனை செய்வதில் இருக்கும் சிரமங்கள் என்று மேலோட்டமாக காட்சிப்படுத்துகிற கதைகளைத் தான் நாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால் விவசாயிகளின் அகவுலகம் எவ்வாறு இருக்கிறது என்பதனை செந்தில் ஜெகன்நாதன் காட்டுகின்றார். இதில் மொத்தமாக 9 சிறுகதைகள் உள்ளன. அதில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண் விவசாயிகளின் மனவுலகத்தையும் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார். வாசகர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டியத் தொகுப்பாக இதனைக் கூறுவேன்.
கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - திருக்குமரன் கணேசன் - காலச்சுவடு பதிப்பகம்
திருக்குமரன் கணேசன் என்கிற 35 வயது நிரம்பிய ஒரு இளைஞனின் சுயசரிதை இது. இளவயதானாலும் வலிமையான அனுபவுலகம் அவரிடையே உள்ளது. கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் என்னும் அவரது நூலினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மிக சிறு வயதிலே வகுப்பாசிரியர் தன்னை நடத்தும் விதத்திற்கும் பிற மாணவர்களை நடத்தும் விதத்திற்கும் இருக்கும் நுட்பமான வேறுபாட்டை உணர்ந்த சிறுவனாக திருக்குமரன் இருந்திருக்கிறார். சாதி அடையாளம் சார்ந்து ஒரு சிறுவன் தான் சந்திக்கிற இழிவுகளை அல்லது சங்கடங்களைத் தொகுத்து, தனது 30 வயதிற்கு பின் பார்க்கும் போது அதில் ஏற்படும் உணர்வுகள் தான் இந்த கட்டுரைகள். அதில் சரி தவறென்று ஏதுமில்லை. ஆனால் ஏன் இந்த சமூகம் இப்படி இருக்கிறது ? என்கிற கேள்வியை மிக பக்குவமாக சமூகத்தின் முன் வைத்துள்ளார்.
source https://www.vikatan.com/literature/arts/books-recommended-by-writer-paavannan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக