நெல்லை, மகாராஜநகர் உழவர் சந்தை பகுதியில் வசித்து வருபவர், வீரபாண்டி. 62 வயதாகும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவரின் மனைவி தங்கமும் பார்வையற்றவர். அவர்களின் மகளுக்கும், 50% பார்வைக் குறைபாடு உள்ளது. மகள் மகேஷ், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் 32 வருடங்கள் பழையதான ஆஸ்பெஸ்டாஸ் கூரையுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான தன்னார்வலர்களால் அவர்களின் நிலை இப்போது மாறியுள்ளது.
பார்வையற்ற வீரபாண்டி, பொம்மைகள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகிறார். மகள், மருமகன் இருவரும், வயரில் இருக்கைகள் பின்னுவது, கூடை தயாரிப்பது உள்ளிட்டவற்றைச் செய்து விற்பனை செய்கிறார்கள். அவர்களின் பழைய வீட்டைப் புதுப்பிக்காததால் மழைக்காலங்களில் ஒழுகியுள்ளது. ஆனாலும் தங்களுடைய வருமானத்தில் அதைச் சரிசெய்ய அவர்களுக்கு முடியவில்லை.
நெல்லை மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரான சாம்சனுக்கு, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரங்களில் ஆணி அடிப்பதைத் தவிர்க்க வலியுறுத்துவது, இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் கொண்டவர்.
அதனால், மாற்றுத்திறனாளிகளின் வீட்டைச் சொந்த செலவில் சரிசெய்து கொடுக்க முடிவெடுத்தார். அதன்படி பேரிடர் காலத்தில் தன்னார்வலர்களாகச் செயல்பட்ட பெண் வழக்கறிஞர் சீதா மற்றும் நெயினா முகமது, ஜாபர், முகமது நயினார், மானூர் அன்சாரி, குமார், ஆழ்வார் ஆகியோர் கொண்ட குழுவினருடன் தானும் களமிறங்கினார்.
ஓய்வு நேரத்தில் இந்தக் குழுவினர் வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுவினரே கூரை மீது ஏறி, ஒழுகும் இடத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன், வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்
தங்கள் வீட்டுக்கு இத்தகைய உதவி கிடைக்கும் என்று கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திருக்காத வீரபாண்டியும் அவரின் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய வீரபாண்டி, ``மழைக்காலத்துல வீட்டுல பல இடத்துலயும் ஒழுகும், தண்ணி வரும். அதனால பல நாள் குழந்தைகளோட ராத்திரி முழுக்க தூங்க முடியாம இருந்திருக்கோம். இப்போ இவங்க எல்லாரும் வந்து எங்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சியைத் தருது.
பார்க்க முடியாத எங்களுக்கு எந்தக் கலரையும் தெரியாது. ’உங்க வீட்டுக்கு வெள்ளைக் கலர் பெயின்ட் அடிக்கிறோம்’னு இன்ஸ்பெக்டர் சாம்சன் சார் சொன்னப்போ எங்க குடும்பத்தோட மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.
வீட்டை சரிசெய்து கொடுக்கும் உதவி மட்டுமல்ல... போதிய வருவாய் இல்லாம சிரமப்படும் எங்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கும் வகையில பெட்டிக்கடை வைத்துக் கொடுக்கவும் தன்னார்வக் குழுவினர் முயற்சி எடுத்து வர்றாங்க. இந்த அன்புக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என்று சொல்லும்போதே நெகிழ்ந்தார்.
இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கும் அவர் குழுவினருக்கும் பாராட்டுகள்!
source https://www.vikatan.com/news/tamilnadu/police-inspector-helps-to-repair-a-visually-challenged-person-s-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக