Ad

வெள்ளி, 7 அக்டோபர், 2022

"நான் சொன்னதுல என்னங்க தப்பு?"- மாணவர்கள் நலன் காக்கப் போராடும் தலைமை ஆசிரியை சக்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த 2-ம் தேதி, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்தி, ‘‘என் பள்ளியில எல்.கே.ஜி தொடங்கி எட்டாம் வகுப்பு வரைக்கும் 95 பிள்ளைகள் படிக்கிறாங்க. 5 ஆசிரியைகள் பணிபுரியுறோம். ஆனா, பள்ளியில அடிப்படை வசதி எதையுமே செஞ்சித் தரமாட்டிருக்கிங்க. குழந்தைங்க ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. மனு கொடுத்தாலும் திருப்பி என்கிட்டயே கொடுத்துடறாங்க. அரசாங்கப் பள்ளிகள்னாலே சாபக்கேடுதான். பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி நாங்களும் வருத்தப்பட்டு வேலை செய்யுறதுக்கு விருப்ப ஓய்வு வாங்கிக்கிட்டு நான் வீட்டுக்கே போய் நிம்மதியா இருந்துடலாம்’’ என்று கண்ணீர் விட்டபடி பேசினார்.

தலைமை ஆசிரியை சக்தி

உண்மையை உடைத்து அவர் பேசிய வார்த்தைகளை அங்கிருந்த மக்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த காணொலி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து, பர்கூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மதியழகன் அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ சென்ற பின்னர் சாலமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரைச் சுற்றி வளைத்து, அப்பகுதி மக்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.

இவ்வளவு களேபரத்துக்கும் காரணம் ‘அரசுப் பள்ளிகளே சாபக்கேடுதான்’ என்று மாணவர்கள் நலன் காப்பதற்காக தலைமை ஆசிரியை சக்தி வெளிப்படுத்திய ஆதங்க வார்த்தைகள்தான்.

தலைமை ஆசிரியை சக்தியிடம் இது குறித்து பேசினோம். ‘‘நான் அரசுக்கெதிராக எந்த விதமான கருத்தையும் சொல்லலை. இந்தப் பள்ளியில 2014-ல இருந்து பணிபுரியுறேன். ஆனா, இங்க அடிப்படை வசதி எதுவுமே கிடையாது. இதுக்காக பி.டி.ஓ ஆபீஸுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்க்கிட்டயும் மனுக்களைக் கொடுத்தேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

அவங்க எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்காததாலதான் அப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்துனேன். அரசுப் பள்ளிகள்னாலே இப்படித்தான் இருக்கணுமா, சாபக்கேடா, நல்லா இருக்கக்கூடாதானு அதிகாரிகளைப் பார்த்துதான் கேட்கிறேன். ஒரு மாசமாக கரன்ட் இல்லை. பி.டி.ஓ ஆபீஸ்ல மனு கொடுத்தா, அதுக்கு நாங்க பொறுப்பேற்க முடியாதுன்னு சொல்றாங்க. என் பள்ளி எப்போதுமே இருட்டாதான் இருக்கும். பவர் கட் பண்ணி வச்சிருக்கிறதுனால தண்ணீர் மோட்டாரையும் போட முடியல. தண்ணீர் இல்லாம பிள்ளைங்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இப்படியிருந்தா எப்படிங்க. நான் சொன்னதுல என்னங்க தப்பு?’’ என்கிறார் மனக் குமுறலோடு.



source https://www.vikatan.com/government-and-politics/education/government-school-principal-sakthi-talks-about-her-viral-speech-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக