Ad

சனி, 8 அக்டோபர், 2022

சிவசேனா: முடக்கப்பட்ட வில் அம்பு சின்னம்; இருதரப்பும் பயன்படுத்த முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி

மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்ததை காரணம் காட்டி கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்று நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 எம்.பி.க்கள் இருக்கின்றனர். உத்தவ் தாக்கரே அணியில் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனால் நிர்வாகிகள் இருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே தனது அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பட்டியலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்திருந்தார். அதோடு தங்களுக்கு உடனே வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி சமீபத்தில் தேர்தல் கமிஷனில் ஷிண்டே மனு கொடுத்திருந்தார். அவர் தனது மனுவில் மும்பையில் நடைபெறும் இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவினர் வில் அம்பு சின்னத்தை பயன்படுத்தக்கூடும் என்பதால், தங்களது மனுவை விசாரித்து எங்களுக்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரேயிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டிருந்தது. அதனை ஏற்று உத்தவ் தாக்கரேயும் தன்னிடம் இருக்கும் ஆதரவாளர்கள் பட்டியல் விபரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் உடனே தனது முடிவை அறிவித்திருக்கிறது. இதன்படி சிவசேனாவின் வில் அம்பு சின்னம் முடக்கப்படுகிறது. இரு தரப்பினரும் அதனை இனி பயன்படுத்த முடியாது. தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், இரு அணியினரும் புதிய பெயர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதோடு தேர்தல் கமிஷனில் இருக்கும் சின்னங்களில் ஒன்றை இருவரும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் முடிவு உத்தவ் தாக்கரேயிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மும்பை அந்தேரி இடைத்தேர்தலில் வில் அம்பு சின்னத்தில் போட்டியிட உத்தவ் தாக்கரே அணியினர் தயாராகி வந்த நிலையில் தேர்தல் கமிஷன் அதிர்ச்சியளிக்கும் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே இத்தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே அவருக்கு சின்னம் பறிபோனதில் பெரிய அளவில் எந்தவித கவலையும் இருக்கப்போவதில்லை.

முன்னதாக உத்தவ் தாக்கரே தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 8-ம் தேதி வரை தேர்தல் கமிஷன் கெடு விதித்திருந்தது. ஆனால் அந்த கெடு பின்னர் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி தான் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனுக்கு வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரி கடிதம் எழுதியிருந்தார். சிவசேனா ஆரம்பித்த 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அக்கட்சி தனது அடையாளத்தை இழந்திருக்கிறது.

சிவசேனா

ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகியபோது கூட சிவசேனாவிற்கு உரிமை கோரவில்லை. அவர் தனக்கான ஒரு பாதையை உருவாக்கி அந்த வழியில் செல்ல ஆரம்பித்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேயிக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித செல்வாக்கும் இல்லாத காரணத்தால் சிவசேனாவும், அக்கட்சியின் சின்னமும் இருந்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று நினைத்து அதற்கு உரிமை கோரியிருந்தார். ஆனால் இப்போது இருவரும் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு முன்பு தமிழ் நாட்டில் அதிமுக-வுக்கு ஏற்பட்ட நிலைதான் இப்போது சிவசேனாவிற்கு ஏற்பட்டு இருக்கிறது. இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அதனை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக ஆலோசித்து சிவசேனா தரப்பில் வேறு ஒரு திட்டம் கையிருப்பு இருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/shiv-senas-bow-and-arrow-symbol-disabled-both-teams-can-choose-a-new-name-and-symbol

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக