Ad

திங்கள், 10 அக்டோபர், 2022

``ராஜராஜன் காலத்தில்... இதுதான் இப்போது பிரச்னையா?” - காட்டமான அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம், திண்டிவனம் அருகே உள்ள மயிலம் மாந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்திலேயே அதிக குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வியில் கடைசி வரிசையில் இருக்கின்ற மாவட்டம் விழுப்புரம். ஆனால், டாஸ்மாக் விற்பனையில் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டம். இதையெல்லாம் பார்த்தால், இந்த மாவட்டம் வளர்ச்சி பெற நீண்ட காலம் ஆகும். எனவே, முதலமைச்சர் இந்த மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தென்பெண்ணை ஆற்றிலிருந்து 30 டி.எம்.சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, ஒவ்வொரு 10 கி.மீ தூரத்திற்கும் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். அதே போல, நீண்ட கால கோரிக்கையாக இருப்பது நந்தன் கால்வாய் திட்டம். திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் திட்டம் அது. கருணாநிதி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றோர் தொடர்ந்து பலமுறை அந்தத் திட்டத்தை அறிவித்தார்கள். இன்னும் அது அறிவிப்பில் தான் இருக்கிறது..! இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முலாயம் சிங் யாதவ் அவர்களின் இழப்பானது சமூகநீதிக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. அவருடைய மகன் அகிலேஷ் சிங் யாதவ், அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் காலநிலை அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும். உலகம் முழுவதும் பருவநிலை, காலநிலை மாற்றத்தால் இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகின்ற மிகப்பெரிய சோதனை இந்த காலநிலை மாற்றம் தான். எனவே, நாம் அதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் - மயிலம்

நம் தலைமுறையில் தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மாறாக இந்தப் பிரச்னையை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டால், இயற்கையை மீட்டெடுக்க முடியாது. இன்னும் அதன் தீவிரத் தன்மை நமக்கு புரியாமல் இருக்கிறது.

'ராஜராஜன் காலத்தில் இந்துமதம் இல்லை?' என்பதுதான் இப்போது பிரச்னையா? என் மக்களுக்கு சோறு இல்லைய்யா..! எங்க மக்களுக்கு வேலை கொடுங்க..! அதையெல்லாம் விட்டு விட்டு ராஜராஜன் காலத்துல இந்துவா, தமிழனா என்று... இதெல்லாம் ஒரு பிரச்னையா?

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று நேற்று ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது, ஆபத்தானது. இது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும். இப்போது பாஜக அரசில்... இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம், இதை கடுமையாக எதிர்ப்போம். இந்தியாவில் தேசிய மொழி எதுவும் கிடையாது. அலுவல் மொழி மட்டும்தான். இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. இப்போது அந்த நிலைக்குழு, ஆங்கிலத்தை எடுத்துவிட்டு அங்கு இந்தியை திணிக்க வேண்டும் என பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

அனைத்து மாநிலத்திற்கும் முதன்மையான அடையாளமாக இருப்பது அப்பகுதியில் பேசப்படும் மொழிதான். ஆனால், அந்த அடையாளத்தையே அழித்துவிட்டு அவர்களது அடையாளத்தை திணிக்க பார்க்கிறார்கள். இதை கடுமையாக எதிர்ப்போம். அந்தக் காலகட்டத்தை விட பெரிய போராட்டம் நடக்கும்.

சென்னையில் மழை நீர் வடிகால் 50% கூட முழுமை அடையவில்லை. ஆனால், 95% முடிந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் 10 நாள்களில் வடகிழக்கு பருவமழை வர உள்ளது. அது வந்துவிட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். எங்கு மழை பொழிந்தாலும், வடிகால் பகுதியாக இருப்பது கடலூர் மாவட்டம் தான். எனவே, இருக்கிற நீர்நிலைகளை தூர்வார வேண்டும். வெள்ளம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தை பார்த்தால்... வரும் காலங்களில் வெள்ளத்தை சாபமாக பார்க்காமல், வரமாக பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடி - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும், புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும்" என்றவரிடம், தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி அமைக்குமா? என்று செய்தியாளர் முன்வைத்த கேள்விக்கு, "எங்கள் நோக்கம், 2026-ல் பா.ம.க ஆட்சி தமிழகத்தில் நடக்கும். அதற்கு ஏற்றார் போல வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க அமைக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/anbumani-ramadoss-spoke-about-the-imposition-of-hindi-rajaraja-chozhan-isues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக