இராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``ஜெயக்குமாரின் கருத்து சிரிக்கும்படியாக இருக்கிறது. ஜெயலலிதாவும் சசிகலாவும் எந்தப் பின்புலத்திலிருந்து கட்சிக்கு வந்தவர்கள் என்பதை அவர் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.சினிமாவில் நடிகை என்ற ஒரே காரணத்துக்காகவே ஜெயலலிதாவுக்குப் பதவி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக சசிகலாவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரசிகர் மன்றத்திலிருந்து வந்த ஜெயக்குமாருக்கு தி.மு.க-வின் ஜனநாயகத்தைப் பற்றியும், திராவிடப் பின்புலம் குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ‘அம்மா வாழ்க’ நாமம் மட்டுமே. தி.மு.க-போல உறுப்பினர் தேர்தலில்கூட இட ஒதுக்கீடு செய்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தும் கட்சியை வேறு எங்குமே காண முடியாது. தி.மு.க-வில் உண்மையாக உழைத்தால், உரிய இடம் வழங்கப்படும். இதெல்லாம் காலைப் பிடித்தே பொறுப்புக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பல முக்கியத் தலைவர்கள் இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்கள். அ.தி.மு.க என்ற கட்சியை பா.ஜ.க-விடம் அடகுவைத்துவிட்டு தலைமைக்குப் போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு தி.மு.க-வைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?’’
பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க
``மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வில் ஒரு சாதாரண கிளைச் செயலாளர் தொடங்கி, கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்கள், 1,000 மேடைகளில் பேசியவர்கள் எனப் பலரும் இன்றுவரை எந்த உயரிய பொறுப்புக்கும் வர முடிந்ததில்லை. இது தி.மு.க-வின் மாபெரும் சாபக்கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒரு குறுநில மன்னராக இருந்துகொண்டு தனக்குக் கீழ் யாரையும் வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தால் ஓர் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம். இதற்குச் சிறந்த உதாரணம், சேலத்தின் ஓர் ஓரத்தில் கிளைக் கழகச் செயலாளராகப் பணியைத் தொடங்கிய எடப்பாடியார், மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். ஆனால், தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களைப் புறம்தள்ளி, தன்னைத் தலைவராக முன்னிறுத்திக்கொண்டவர் கருணாநிதி. தனக்குப் பின்னும், கட்சிக்காக ஆண்டுக்கணக்கில் உழைத்த பலரையும் விட்டுவிட்டு தனது மகனைப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார். அதனால்தான் இன்று மூத்த அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்குப் பல்லக்குத் தூக்குவதைப் பார்க்க முடிகிறது. குடும்பக் கட்சி நடத்தும் இவர்களுக்கு அ.தி.மு.க குறித்துப் பேச யோக்யதையே கிடையாது.’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-jayakumar-statement-about-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக