Ad

வியாழன், 6 அக்டோபர், 2022

ஈரோடு: கிராம வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் மாயமான மேலாளர்! - அச்சத்தில் மக்கள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை அடுத்துள்ள டி.ஜி.புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள். இந்த நிலையில், வங்கியின் மேலாளராக இருந்த மணிகண்டன், வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1,800 கிராம் தங்க நகைகளுடன் மாயமாகி விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் வங்கி நிர்வாகத் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும், வங்கியின் உயரதிகாரிகளும் நகைகளின் இருப்பை சரிபார்த்தனர். அப்போது, ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளுடன் மேலாளர் மணிகண்டன்  மாயமாகி விட்டது தெரியவந்தது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதையடுத்து வங்கியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வங்கியை முற்றுகையிட்ட மக்கள்

உழைத்து, கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், நகைகள் மீண்டும் கிடைக்குமா எனக் கேட்டு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்த பங்களாபுதூர் போலீஸார் மறியலில் ஈடுபட விடாமல் விரட்டியடித்தனர்.  

நடராஜ்

முற்றுகையில் ஈடுபட்ட நடராஜ், ``இந்த பேங்க்குல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க நகைகளை அடமானம் வச்சு கடன் வாங்கி விவசாயத் தொழில் செய்து வர்றாங்க. இதை ஒரேநாளில் தூக்கிட்டு போயிட்டதைக் கேட்ட ஜனங்க, நம்ம நகைங்க மறுபடியும் கிடைக்குமா, இல்லையான்ற சந்தேகத்துல பேங்க்கை முற்றுகையிட்டிருக்கோம். எல்லா நகைகளும் திரும்பக் கிடைச்சுரும்னு வங்கியின் உயரதிகாரிங்க உத்தரவாதம் அளிச்சிருக்காங்க" என்றார்.

அருக்காணி

விவசாயத் தொழிலாளி அருக்காணி கூறுகையில், ``நாயாட்டம் பாடுபட்டு, பேயாட்டம் நகைக்கு வட்டி கட்டிட்டு வந்தோம். கூடிய சீக்கிரத்துல நகைகளை மீட்டுறலாம்னு இருந்தப்ப எங்க நகைங்கள தூக்கிட்டு ஓடிட்டதா சொல்றாங்க. எந்த சேதாரமும் இல்லாம நகைகளை மீட்டு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார்

இது குறித்து கிராம வங்கிகளின் மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமாரிடம் கேட்ட போது, ``இங்கு மேலாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன், வங்கியில் வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்டிருந்த 14 பேருக்குச் சொந்தமான 1,932 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 1,700 கிராம் தங்க நகைகளை (இதன் மதிப்பு ரூ.1 கோடி) எடுத்து வேறு இடத்தில் அடமானம் வைத்து பணத்தை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கண்டுபிடித்து நகைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
இது 100 சதவிகிதம் அரசு வங்கி. நகைகளுக்கு காப்பீடும் செய்யப்பட்டுள்ளதால் ஒரு குண்டுமணி தங்கம்கூட வீணாகாமல் திரும்பப் பெற முடியும். எனவே பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இந்த நகைகள் அனைத்தையும் ஒரேநாளில் மீட்க முடியாது என்பதால்... வாரத்தில் படிப்படியாக அனைத்து நகைகளையும் மீட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bank-manager-absconded-with-1-crore-valued-jewels-at-erode

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக