Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா...
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் 'ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' என்று சொல்வோம். இந்த பாதிப்பானது டீன் ஏஜில் தொடங்கி, மெனோபாஸ் வரை பலருக்கும் வரக்கூடிய சகஜமான விஷயம்தான்.
குறிப்பாக இளம் பெண்கள் பலரையும் இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம். 28 முதல் 30 நாள்கள் சுழற்சியில் பீரியட்ஸ் வரும் பெண்களுக்கு, அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பலவிதமான அறிகுறிகள் ஏற்படலாம்.
உடல் உப்புசம், மார்பகங்களில் கனத்த உணர்வு, மார்பகங்களில் வலி, திடீரென எடை அதிகரித்தது போன்ற உணர்வு, எரிச்சல், மனநிலையில் தடுமாற்றங்கள்... இவை எல்லாமே அத்தகைய அறிகுறிகள்தான். அப்படி ஏற்படுவது சகஜம்தான்.
இந்த அறிகுறிகள் எல்லாம் ஹார்மோன்களின் மாற்றங்களால் ஏற்படுபவையே. இவை குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால் அதுவே இந்த அறிகுறிகள் தீவிரமாகி, கடுமையான மன அழுத்தத்துக்குள் போனால், அப்போது மருத்துவ ஆலோசனையை நாடுவதுதான் சிறந்தது.
மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள், அந்த நாள்களில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
பீரியட்ஸுக்கு முன்பான ஒரு வாரத்தில், அறிகுறிகளை உணரும்போது நடைப்பயிற்சி போன்ற ஏதேனும் ஓர் உடற்பயிற்சியைச் செய்து பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் என்றொரு ஹார்மோன் சுரக்கும். அது மனநிலையை சமன்படுத்தும்.
எனவே இந்த நாள்களில் உங்களைக் கொஞ்சம் ஆக்டிவ்வாக வைத்துக் கொண்டாலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளிலிருந்து விடுதலை கிடைப்பதை உணர்வீர்கள். மேற்குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் வயதான பெண்களுக்கும் சிரமமாக இருக்கலாம்.
அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவர்களை அணுகினால் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூல் போன்ற வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். அவை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தரும். எனவே இது உடலியல் காரணமாக ஏற்படுகிற சாதாரண பிரச்னைதான் என்பதால் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/women/facing-trouble-before-period-ways-to-avoid-them
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக