Ad

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

சட்டப் போராட்டத்தில் தொடர் தோல்விகள் - ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிர்காலம் இனி என்னாகும்?!

``கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்துக்கு உரிமை கோரமுடியும்?'' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓ.பி.எஸ் தரப்பை நோக்கிக் கேள்வி எழுப்பியதும் எடப்பாடி தரப்பிடம் சாவி ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் அவரின் முகாமை ஆட்டம்காணச் செய்துள்ளது. ஏற்கெனவே பொதுக்குழு வழக்கில் பின்னடவைச் சந்தித்து, எடப்பாடியின் கை ஓங்கியிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், `ஓ.பி.எஸ்ஸுக்கு இனி அதிமுகவில் இடமில்லை, அரசியல் எதிர்காலமுமில்லை' என கொக்கரிக்கிறது எடப்பாடி தரப்பு, ஆனால், `இந்தத் தீர்ப்புகள் எல்லாம் தற்காலிமானதுதான், நிரந்தமல்ல' என பதிலடி தருகிறது ஓ.பி.எஸ் தரப்பு. அடுத்து என்ன நடக்கும்?

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழு வழக்கு பின்னடைவு ;

``அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்'' என சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தீர்ப்பளித்தார். அதாவது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது, இரு தரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், பலரைக் கட்சியைவிட்டு நீக்கியது என எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், தனிநீதிபதின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிபதிகள், சுந்தர்மோகன், துரைசாமி அமர்வில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்தநிலையில்,செப்டம்பர் 2-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வானது, புதிய பொறுப்புகள், ஓ.பி.எஸ் நீக்கியது ஆகியவை செல்லும் என்கிற நிலை ஏற்பட்டது. அதுவரை மிகவும் பரபரப்பாக இயங்கிவந்த ஓ.பி.எஸ் முகாம் சோர்வடைந்தது.

அதிமுக அலுவலக சாவி வழக்கு ;

ஜூலை 11-ம் தேதி நடந்த வன்முறையால் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவி, ஜூலை 21-ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ். இந்த வழக்கு, நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மற்றும் தமிழக அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஓ.பி.எஸ்ஸின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், `ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை ஆகும்' உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், “ஓபிஎஸ் கட்சியின் அடிப்படைஉறுப்பினராகக்கூட இல்லாதபோது, அதிமுக அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது'' என்று இ.பி.எஸ் தரப்பு முன்வைத்த வாதத்தை, நீதிபதிகளும் கேள்வியாக எழுப்பியது ஓ.பி.எஸ் தரப்பை மேலும் சோர்வடையச் செய்தது. உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம் எனவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

இந்தநிலையில், ``அலுவலகச் சாவி விவாகரத்தில் வந்த தீர்ப்பைப்போலத்தான், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொதுக்குழு வழக்கிலும் தீர்ப்பு வரும். ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிர்காலம் இனி அவ்வளவுதான். அதிமுகவுக்கும் அவருக்கும் இனி சம்மந்தமில்லை. வேண்டுமானால், சசிகலா, தினகரன்போல கட்சிக்கு வெளியில் இருந்து அறிக்கைகள் விடலாம், சுற்றுப்பயணம் செல்லலாம்'' எனக் கொக்கரிக்கிறது எடப்பாடி தரப்பு.

`ஓ.பி.எஸ்ஸுக்கு இனி சசிகலா, தினகரன் வழிதான்’

``அரசியலில் ஒரு தலைவர் நிலைத்துநிற்க தொண்டர்களின் செல்வாக்கும் மக்களின் செல்வாக்கும் நிச்சயம் தேவை. அது தனக்கு இருக்கிறது என நினைக்கும் எந்தத் தலைவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள். ஆனால், தனக்கு மக்கள் செல்வாக்கும்,தொண்டர்களின் ஆதரவும் இல்லை என்று தெரிந்ததால்தான், ஓ.பி.எஸ் தனக்கிருக்கும் கடைசி வாய்ப்பான சட்டவாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு எந்தவொரு பயனும் இல்லை எனத் தெரிந்தேதான் அவர் செய்துகொண்டிருக்கிறார். அவரின் அரசியல் வாழ்க்கை என்பது இனி கேள்விக்குறிதான். சசிகலாவும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடைசியில் என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும். இனி, தினகரனைப் போல அவர் தனிக்கட்சி தொடங்கலாம்... இல்லையென்றால் சசிகலாவுடன் இணந்து செயல்படலாம். சசிகலா, தினகரனைச் சந்திப்பேன் என அவரே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அவர்கள் சுற்றுப்பயணம் செல்வதைப்போலத்தான் இனி இவரும் சுற்றுப்பயணமாகப் போவார். ஆனால், அது அதிமுகவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிமுகவின் செயல்பாடுகளுக்கோ வளர்ச்சிக்கோ அவரின் செயல்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது'' என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி

`எடப்பாடியின் தனி கம்பெனி கனவு பலிக்காது’

ஓ.பி.எஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜிடம் இந்தக் கருத்துகளை முன்வைத்தோம்..,

``புரட்சித்தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி ஒரு தொண்டனைக்கூட இழக்க விரும்பமாட்டார்கள். `நிர்வாகிகள் நெருக்கடி தருகிறார்கள், நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன்' என ஒருமுறை தொண்டர் ஒருவர் தலைவருக்கு கடிதம் எழுதினார். புரட்சித்தலைவர் அவருடைய வீட்டுக்கே சென்று அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த காலத்தில் தன்னை மிகக் கடுமையாக விமர்சித்த, அண்ணன் காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டவர்களைக்கூட மீண்டும் அழைத்து முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து கௌரவப்படுத்தியவர் அம்மா. அதுதான் ஒரு தலைவரின் பெருந்தன்மை, அரசியல் நாகரிகம். மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த புரட்சித்தலைவரும் அம்மாவும் எல்லோரையும் அரவணைத்துதான் கழகத்தை நடத்தினார்கள். ஆனால், மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு எதுவுமே இல்லாத எடப்பாடி பழனிசாமி, அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களையும் அவருடன் இருப்பவர்களையும் அதிமுகவிலிருந்து வெளியேற்றியேதீர வேண்டும் என்கிற வெறியோடு செயல்பட்டு வருகிறார்.

கோவை செல்வராஜ்

கட்சியை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் எடப்பாடியிடம் சுத்தமாக இல்லை. மன்னிப்பு கேட்டால்கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார். அரசியலில் இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்ததாகவோ, வளர்ந்ததாகவோ எந்த வரலாறும் இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவோ, அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவோ விரும்பவில்லை. அதேவேளை, அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரைம் தேர்தல் ஆணையம்தான் அனைத்து விஷயங்களையும் இறுதியாக முடிவுசெய்யும் ஒரு அமைப்பு. அங்கு இதுவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறைதான் பதிவாகியிருக்கிறது. புதிதாக நடந்த எந்த விஷயங்களையும் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. கட்சியை எப்படியாவது கையகப்படுத்தி தனிக்கம்பெனியாக நடத்த முயற்சி செய்யும் எடப்பாடி பழனிசாமியின் எந்தத் திட்டமும் பலிக்காது. இறுதியில் நாங்களே வெற்றுபெறுவோம்'' என்கிறார் நம்பிக்கையாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/series-of-defeats-in-legal-battle-what-is-the-political-future-of-ops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக