இந்திய அளவில் பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டின் 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் 253 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீஸுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். இதன்படி, ஏற்கனவே 86 கட்சிகளின் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், இந்துஸ்தான் தேசிய கட்சி, விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் செயலற்ற கட்சிகளாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/253-political-parties-canceled-in-india-do-you-know-which-parties-are-from-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக