Ad

திங்கள், 5 செப்டம்பர், 2022

``ரேஷன் பொருள்களைப்போல பாஜக, எம்.எல்.ஏ-க்களை வாங்குகிறது" - ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலக்கரிச் சுரங்க ஊழலில் ஈடுபட்டதாக, மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊழல் காரணமாக ஹேமந்த் சோரன், முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆளுநருக்கு பா.ஜ.க கோரிக்கை வைத்துவந்தது.

பாஜக

அதையடுத்து முதல்வர் ஹேமந்த் சோரன், தங்களின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க குதிரைப் பேரம் நடத்திவருவதாக, எதிர்த்தாக்குதல் நடத்திவந்தார். பின்னர், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், மாநில விருந்தினர் மாளிகையில் ஒன்றாகத் தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முன்னதாக அறிவித்தபடி, இன்று தொடங்கிய சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

அப்போது சட்டமன்றத்தில் பேசிய ஹேமந்த் சோரன், ``எதிர்க்கட்சியான பா.ஜ.க., ஜனநாயகத்தை அழித்துவிட்டது. மேலும் பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுவருகிறது. ஆடைகள், ரேஷன் பொருள்கள், மளிகைப் பொருள்கள் போன்றவைதான் வாங்கப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பா.ஜ.க மட்டும்தான் எம்.எல்.ஏ-க்களை வாங்குகிறது. இருந்தும் எங்கள் பலம் என்னவென்பதை இங்கு நாங்கள் காட்டுவோம்" என பா.ஜ.க-வின் கோஷங்களுக்கெதிராக உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்ய, 81 பேர் கொண்ட சட்டமன்றத்தில், 48 பேர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க, பெரும்பான்மையுடன் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றார். 81 இடங்கள்கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 இடங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/only-the-bjp-is-into-buying-mlas-says-jharkhand-cm-hemant-soren

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக