பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்திய வம்சாவளி பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவை சந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்களே தொடர்ச்சியாக ராஜினாமா செய்ய, நெருக்கடிக்குள்ளான போரிஸ் வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து பிரிட்டனுக்கு புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். 'நாக்-அவுட்' முறையில் சுற்றுவாரியாக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி-க்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் இறுதியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதையடுத்து, அடுத்த பிரதமர் யார் என்பதில் இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி உருவானது. பரஸ்பரம் இருவருமே தேர்தல் பிரசாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
பலகட்டங்களாக நடைபெற்ற எம்.பி-க்கள் மத்தியிலான வாக்கெடுப்பில், ரிஷி சுனக்கே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள், அடுத்து பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு நிலவரப்படி, பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ்க்கு தான் அதிகமானோர் வாக்ளித்திருப்பதாகவும், இதனால் இந்திய வம்சாவளி பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவைச் சந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், ரிஷி சுனக்கின் பின்னடைவுக்கான பின்னணியில் முன்னாள் பிரதமரும், தற்போதைய காபந்து பிரதமராகவும் இருக்கும் போரிஸ் ஜான்சனின் சதித்திட்டம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இழக்க, நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக்தான் காரணம் என்றும், ஆகவே தேர்தலில் ரிஷி சுனக்கை ஆதரிக்கவேண்டாம் என கன்சர்வேடிவ் கட்சியினரை அவர் ரகசியமாகக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் கசிந்திருக்கின்றன.
இருப்பினும், பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், தேர்தல் பிரசாரத்தில், தான் பிரதமரானால் 'வரி குறைப்பை அமலுக்கு கொண்டு வருவதாக' லிஸ் ட்ரஸ் வாக்குறுதி அளித்ததுதான் அவருக்கு ஆதரவாக வாக்குகள் குவிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில், ரிஷியைவிட, லிஸ் ட்ரஸுக்கே ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் எது உண்மை என்பது இன்று (செப்டம்பர் 5) வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்!
source https://www.vikatan.com/government-and-politics/international/set-back-for-rishi-sunak-in-britain-pm-race
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக