Ad

திங்கள், 12 செப்டம்பர், 2022

``இவர்கள்தான் காந்தியைக் கொன்றார்கள்" - ஆர்.எஸ்.எஸ் மீது சத்தீஸ்கர் முதல்வர் தாக்கு

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கப்பட்ட நாள்முதலே, பா.ஜ.க அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸை விமர்சித்த வண்ணமே இருக்கின்றனர். இதற்கிடையில் காங்கிரஸைச் சாடிய, ஆர்.எஸ்.எஸ்-ஸின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, ``மக்களை அவர்கள் வெறுப்பின் மூலம் இணைக்க விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் நீண்ட காலமாக எங்கள் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் வளர்த்துவருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்

அவர்களின் முந்தைய தலைமுறையினரும் ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தடுக்க முயன்றனர், ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்ததால், நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்" என விமர்சித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முதல்வருமான பூபேஷ் பாகேல், காந்தியைக் கொன்றவர்கள் இவர்கள் தான் என ஆர்.எஸ்.எஸ்-ஸை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகேல், ``அவர்களின்(ஆர்.எஸ்.எஸ்) இந்துத்துவா எங்கிருந்து வருகிறது... எந்தப் பிரிவை அவர்கள் பின்பற்றுகிறார்கள்... எந்தக் கடவுளை அவர்கள் நம்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை தோன்றி இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை. 1925-ல் அவை வந்தன. ஏன் அதற்கு முன் இந்துக்களே இல்லையா... இந்த வன்முறையும், போக்கிரித்தனமும் நம்முடைய கலாசாரமல்ல. அதுமட்டுமல்லாமல், மனிதர்களை விலங்குகளுக்குக் கீழே வைத்தவர்களும் இவர்கள்தான், காந்தியைக் கொன்றவர்களும் இவர்கள்தான்" எனக் கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எரியும் காக்கி ஷார்ட்ஸின் புகைப்படத்தைப் பதிவிட்டு, `தேசத்தை வெறுப்பின் கட்டுகளிலிருந்து விடுவிக்கவும், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் செய்த சேதத்தை அகற்றவும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது' என ட்வீட் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/those-who-killed-mahatma-gandhi-chhattisgarh-cm-bhupesh-baghel-slams-on-rss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக