"35 வயது... மோசமான ஃபார்ம்... ரிட்டயர்ட் கேஸ்... இவரை ஏன் சிஎஸ்கே-வில் எடுக்கிறார்கள்" என சென்னை சூப்பர் கிங்ஸையும், ராபின் உத்தப்பாவையும் சில வாரங்களுக்கு முன்புவரை கலாய்த்தவர்கள்தான் இங்கே அதிகம். கிண்டல், கேலி, அருவெறுப்பான மீம்களால் அவமானப்படுத்தப்பட்டார் ராபின் உத்தப்பா. ஆனால், அதே ராபின் உத்தப்பாவை அதே ரசிகர்கள் ஒரு மாத இடைவெளியிலேயே கொண்டாடுகிறார்கள். தற்போது நடந்துகொண்டிருக்கும் விஜய் ஹசாரே தொடரில் கடந்த 5 இன்னிங்ஸ்களில் நான்கில் மட்டும் 107, 81, 100, 87 என மிரளவைத்திருக்கிறார் உத்தப்பா... இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது?!
உத்தப்பா பயணம்!
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 சீசனில் இருந்து 2021 சீசன் வரை தொடர்ந்து பயணித்து வரும் ஒரு சில வீரர்களில் முக்கியமானவர் ராபின் உத்தப்பா. மும்பை இந்தியன்ஸுடன் தொடங்கிய இவரது ஐபிஎல் பயணம், பெங்களூரு, புனே, கொல்கத்தா, ராஜஸ்தான் எனப் பல தண்டவாளங்கள் மாறி, பல ஸ்டேஷன்களில் நின்று இப்போது சென்னையை வந்து சேர்ந்திருக்கிறது. நீலம், சிவப்பு, மஞ்சள் என வருடாவருடம் பல ஜெர்ஸிக்களை மாற்றினாலும், தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவர் இருப்பதால்தான் ஒவ்வொரு அணியும் அவரைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டேயிருக்கிறது. அவர் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
ரன் வேட்டை!
ஐபிஎல் மூலம் மட்டுமே 5000 ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கும் உத்தப்பா அடித்திருக்கும் அரைச்சதங்களின் எண்ணிக்கை 24. சதங்களை இல்லையென்றாலும் இவரின் பெரும்பாலான அரைசதங்கள் வெற்றிக்கான காரணிகளாக இருந்திருக்கின்றன. 130 ஸ்ட்ரைக் ரேட்டோடு, ஐபிஎல் களத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் இவர், பல சீசன்களில் 300-ல் தொடங்கி 400 ரன்கள் வரை அடித்திருக்கிறார். 2014-ம் ஆண்டு, கொல்கத்தாவுக்காக ஆடியபோது, உச்சகட்டமாக, 660 ரன்களை எடுத்து அசத்தி இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு, மிகுந்த நம்பிக்கையுடன், ராஜஸ்தான் ராயல்ஸால், மூன்று கோடிக்கு வாங்கப்பட்ட உத்தப்பா, அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்திருந்தார். கடந்த ஐபிஎல்லில், 12 போட்டிகளில், வெறும் 196 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த உத்தப்பாவின் கிரிக்கெட் அத்தியாயம், முடிவை நெருங்குவதாகவே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதை உடைத்தெறிந்து, தனக்கான முடிவுரையை முன்னுரையாய், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் உத்தப்பா.
கர்நாடகா முதல் கேரளா வரை !
ஐபிஎல் மட்டுமல்ல ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டிலும் பல அணிகளுக்காக ஆடிய பெருமை உத்தப்பாவுக்கு உண்டு. கர்நாடகா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடிக் கொண்டிருந்த உத்தப்பா, அதன் பின் சில ஆண்டுகள் சௌராஷ்டிரா அணிக்காகவும் ஆடினார். 2019-ம் ஆண்டிலிருந்து கேரளா அணிக்காக, ஆடிக் கொண்டிருக்கிறார் உத்தப்பா. கேரளாவுக்காக தற்போது, லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கும் உத்தப்பா, ஒவ்வொரு உள்ளூர் தொடரிலும் அதிரடி ஆட்டம் ஆடிகொண்டிருக்கிறார்.
உத்தப்பாவின் ஸ்டைல்!
விளையாடுவது எந்த அணிக்காக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் 'உத்தப்பாவா உக்கிரப்பாவா' என பிரம்மிக்கும் அளவுக்கு எதிரணி பௌலர்களை நையப் புடைப்பதுதான் உத்தப்பாவின் ஆரம்பகால ஸ்டைல். அதைப்பின்நாட்களில் பிரவின் ஆம்ரேவின் பயிற்சியில் ஓரளவு மாற்றிக்கொண்டு, நிலைப்புத்தன்மையுடன் ரன் எடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார். கொல்கத்தா அணியில் பல வருடங்கள் கன்சிஸ்ட்டன்ட்டாக ரன் எடுக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். நடந்து முடிந்த சையத் முஷ்தாக் அலி டி-20 தொடரில், டெல்லிக்கு எதிரான போட்டியில், 54 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து, அனைவரது கவனத்தையும் தனது பக்கம் இழுத்த உத்தப்பா, தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே தொடரில், உச்சகட்ட ஃபார்மைத் தொட்டிருக்கிறார்.
உத்தப்பா பராக்!
இந்த வருட விஜய் ஹசாரே தொடரில், ஐந்து போட்டிகளில், 375 ரன்களை எடுத்து, 93.75 பேட்டிங் சராசரியுடன் மிரட்டி வருகிறார், உத்தப்பா. இந்த ஐந்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக, 23 சிக்ஸர்களை அடித்திருக்கும் உத்தப்பா, நடப்புத் தொடரில், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 'வயது 35 தான். ஆனால் என் பேட்டிற்கு இன்னும் வயதாகவில்லை!' என்று ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார், உத்தப்பா.
அடியா இடியா?!
ஒடிஷாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் உத்தப்பா, ஓப்பனராகக் களமிறங்கி, 85 பந்துகளில், 107 ரன்களைக் குவித்து, தொடரில் தான் விளையாடிய, முதல் போட்டியிலேயே, சதத்தை, அதுவும் குறைவான பந்துகளில் விளாசினார். அடுத்து உத்திரப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியிலும், இவரது ஆட்டம் அதிரடி வழித்தடத்திலேயே நகர்ந்தது . 55 பந்துகளில், 81 ரன்களை எடுத்து, அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். ரெயில்வேஸுக்கு எதிரான அடுத்த போட்டியிலும், சதமடித்து, போட்டியைக் களை கட்டச் செய்த உத்தப்பா, கர்நாடகாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே, ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து, கேரளாவின் நம்பிக்கையைப் பொய்யாக்கினார்.
ஆனால், விட்டதற்கும் சேர்த்துப் பிடிப்பதைப் போல, சமீபத்தில், பீகாருக்கு எதிரான போட்டியில், 32 பந்துகளில், 87 ரன்களை நம்ப முடியாத வகையில் சேர்த்தார். முதலில் விளையாடிய பீகார் 148 ரன்களை மட்டுமே எடுத்திருக்க, 8.5 ஓவர்களிலேயே, கேரளா, இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது. அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த உத்தப்பா. இந்தப் போட்டியில் மட்டும், 10 சிக்ஸர்களையும், 4 பவுண்டரிகளையும் திசைக்கொன்றாய்ச் சிதற விட்டு, விஸ்வரூபம் காட்டினார். அவரது இந்த ஆட்டத்தைப் பாராட்டிச் செய்தி வெளியிட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ், 'பீஸ்ட் மோடு' என வியந்து பாராட்டி இருந்தது.
சிஎஸ்கே-வில் என்ன செய்வார்?!
கடந்த ஆண்டில், புள்ளிப் பட்டியலின் அடிமட்டத்தைத் தொட்டுத் தடுமாறிய சென்னையின் பலவீனங்களில் ஒன்றாகச் சுட்டிக் காட்டப்பட்டது ரன்ரேட். ரன் சேர்க்கும் வேகத்தினை, அணை போட்டுத் தடுத்து நிறுத்திக்கொண்டேயிருந்தார்கள் சென்னையின் பேட்ஸ்மேன்கள். உள்ளூர்ப் போட்டிகளுக்குள் ஓர் உலகநாயகனாய், தன்னுடைய வலிமையைக் காட்டி வரும் உத்தப்பா, பலம் குன்றிக் காணப்படும் சென்னையின் பேட்டிங் லைன் அப்பில், எந்த இடத்தில் பொருந்திப் போவார் என்ற ஆவல், தற்போது சென்னை ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.
'ஓப்பனரோ, ஒன் டவுனோ... எதுவாய் இருந்தால் என்ன?' என எல்லாக் கட்டத்திலும், ரன் ஏறும் வேகத்தின் விகிதத்தினை, பலமடங்கு உயர்த்தக் கூடிய, வல்லுநரான உத்தப்பாவின் அதிரடியில் திக்குமுக்காட, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர் பட்டாளமே காத்திருக்கிறது.
source https://sports.vikatan.com/cricket/robin-uthappa-on-fire-in-vijay-hazare-trophy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக