Ad

புதன், 24 மார்ச், 2021

ரிஷப் பன்ட் - ரவிச்சந்திரன் அஷ்வின்... டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகப்போவது யார்?! #Pant

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்-ல் கோப்பையை வெல்லும் முனைப்போடு ஆடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியவர் ஷ்ரேயாஸ் ஐயர். மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருவதோடு, கேப்டனாகவும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருக்கிறார் ஷ்ரேயாஸ்.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் கட்டப்போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், காயத்துக்கு அறுவைசிகிச்சை செய்யப்படலாம் என்பதால் இந்தத்தொடர் முழுக்கவே அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்கிறார்கள். இதனால், 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்குத் தலைமையேற்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டன் ரிஷப் பன்ட்தான் அணியின் உரிமையாளர்களின் ஒருமித்த சாய்ஸாக இருக்கிறாராம். ''ரிஷப் பன்ட்தான் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இங்கிலாந்து தொடர் வரை இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அதனால் அவரையே கேப்டனாக நியமிக்கலாம்'' என்பது உரிமையாளர்களின் முடிவாக இருக்கிறது. ஆனால், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கியா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் என அணிக்குள் நான்கு சூப்பர் சீனியர்கள் இருக்கிறார்கள்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

இதில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் ஏற்கெனவே ஐபிஎல் அணிகளைத் தலைமைதாங்கிய அனுபவம் இருக்கிறது. அதனால் ரிக்கி பான்ட்டிங் எடுக்கப்போகும் முடிவே இறுதியானதாக இருக்கும் என்கிறார்கள். ரிக்கி பான்ட்டிங், அனுபவம் காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க விரும்புவதாகத் தெரிகிறது.

இன்று அல்லது அடுத்தடுத்த நாட்களில் டெல்லி அணியின் புதிய கேப்டன் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



source https://sports.vikatan.com/ipl/ricky-ponting-to-decide-the-captainship-of-delhi-capitals-between-rishab-pant-and-ravichandran-ashwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக