தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. நாகர்கோவில் வந்த உதயநிதி ஸ்டாலின், வடசேரி அண்ணா சிலை முன்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் சுரேஷ்ராஜனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்துக்கு கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். தமிழகத்தில் 40-க்கு 39 சீட்களில் ஜெயித்தோம். இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இயக்கம் தி.மு.க என்ற பெருமையை தேடிக்கொடுத்தீர்கள். அதனால்தான் மோடிக்கு உங்கள் மேல் கோபம். திடீர்ணு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். ஏ.டி.எம் வாசலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை நான் நியாபகார்த்தமாக வைத்திருக்கிறேன். பண மதிப்பிழப்பிற்கு மோடி சொன்ன காரணம் புதிய இந்தியா பிறக்கப்போகுறது என்றார். நான் மூன்று வருஷமாக தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவை எங்கும் காணவில்லை. நீங்க எங்கையாவது பார்த்தீங்களா... “ என்றார்.
தொடர்ந்து மத்திய அரசை விளாசிய உதயநிதி, ``பிரதமர் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் போடுவதாக சொன்னார், 15 பைசாயாவது போட்டாரா. தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி பங்குத்தொகை வரவில்லை. சென்னையில் வெள்ளம், ஒகி, கஜா புயல்களுக்கு இழப்பீடு கேட்டோம், தரவில்லை. 40 ஆயிரம் கோடி கேட்டதற்கு ஆயிரம் கோடி கொடுத்தார்கள். மதுரையில் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியதை கையோடு கொண்டுவந்துவிட்டேன். ஒரு ஒரு கல்லுதான் இருந்தது, அதையும் தூக்கிட்டு வந்துட்டேன். இப்போது மருத்துவமனையை காணோம் என தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஒரோ ஒரு கல் நாட்டிய இந்த மருத்துவமனைக்கு 72 கோடி ரூபாய் செலவு” என கலாய்த்தார்.
தொடர்ந்து, ``நம் உரிமையை விட்டுக்கொடுத்தாகிவிட்டது. கொஞ்சம் அசந்தால் தமிழ்நாட்டை விற்று விடுவார் மோடிகிட்ட. அதற்கு நாம் விட்டுவிடக்கூடாது. சுரேஷ்ராஜனை கடந்த முறை 21,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். போனமுறை நாம ஆட்சியில் இல்லை. இந்த முறை நம்ம ஆட்சிதான். எனவே இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும். நான் என் தொகுதியில் பிரசாரத்துக்கு போகல. என் வெற்றியைவிட மற்ற தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் வெற்றிதான் முக்கியம் என நான் பிரசாரத்துக்கு போய்கிட்டிருக்கிறேன்.
திமுக ஆட்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். மாணவர்களின் எதிர்காலம் கல்வி. அந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என நுழைவுத்தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி. ஜெயலலிதாவும் நுழைவுத்தேர்வை அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வை கொண்டு நுழைத்துவிட்டார்கள். அதற்கு முதல் தற்கொலை அரியலூர் அனிதா. மூணு வருஷத்தில் 14 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார். நீட் தேர்வு ரத்து செய்வது, மாணவர்களின் கல்விக்கடன் ரத்துச்செயப்படும் என தலைவர் அறிவித்திருக்கிறார்.
தி.மு.க ஆட்சியில் கியாஸ் 480 ரூபாய் விலை, இப்போது 900-க்கு மேல் விலை அதிகரித்துவிட்டது. 7,000 கோடி விவசாய கடனை ரத்துச் செய்வதாக கருணாநிதி சொன்னார். கருணாநிதி கோட்டைக்கு போகும் முன் அந்த கடனை ரத்து செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது என பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார் கலைஞர். இங்கு போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் டெப்பாசிட் வாங்கக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி. ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு இல்லை. சின்ன பொண்ணுங்களை பொள்ளாச்சியில் வன்கொடுமை செய்தார்கள். முதல் குற்றவாளி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில பட்டப்பகல்ல 13 பேரை சுட்டுக்கொன்றாங்க. நான் கலைஞரின் பேரனாக கேட்கிறேன் உதயசூரியன், கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/udhayanithi-stalin-slams-bjp-and-admk-government-in-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக