Ad

சனி, 20 மார்ச், 2021

குறிஞ்சிப் பூ, சந்தன மரங்கள், தெருவுக்குத் தெரு அருவிகள்! – காந்தளூர் ஸ்பெஷல்! Long Drive போலாமா - 5

தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் இருந்தால், அந்த விஷயத்தைக் கண்டுகொள்ளத் தோன்றாது. ஆனால், மறையூர் அப்படியல்ல! இங்கே தேவைக்கு அதிகமாக இருப்பது என்ன தெரியுமா? சொன்னால் நம்புங்கள்... அருவி! உடுமலைப்பேட்டை தாண்டி மறையூர் வழியாக மூணார் போகும் காட்டுச் சாலையில், கால் தடுக்கி விழும் இடமெல்லாம் அருவிச் சத்தம்தான் காதுகளை இனிமையாக்கும்.

"பெயர் வைக்கப்படாத படத்தின் ஷூட்டிங் நடக்கிறது'’ என்று செய்தித் தாள்களில் நியூஸ் வரும். அதுபோல், இங்கே பெயர் வைக்கப்படாத அருவிகள் எக்கச்சக்கம் இருக்கின்றன என்பதுதான் ஸ்பெஷல். அப்படி ஒரு பெயர் தெரியாத அருவியை நோக்கித்தான் இந்த லாங் டிரைவ்! மூணாறு போகும் வழியில், காந்தளூர் எனும் இடத்தில் அந்தப் பெயரே தெரியாத அருவிக்குத்தான் கிளம்பினேன்.

திருமூர்த்தி அணை

மறையூரில் தங்குவதற்கு ஆப்ஷன்கள் நிறைய உண்டு. அதிலும் தூவானம் என்றொரு காட்டு காட்டேஜ் த்ரில்லிங் பார்ட்டிகளுக்கு சூப்பர் சாய்ஸ். எனக்கு அந்த ஐடியா இல்லை. திருப்பூர் அல்லது உடுமலைப்பேட்டை – இரண்டில் எங்கிருந்து கிளம்பினாலும் ஒரே நாளில் திரும்பிவிடலாம்.

‘‘7 மணிக்குக் கிளம்பணும்’’ என்று முடிவெடுத்து 6.59–க்கெல்லாம் திருப்பூரில் இருந்து டாடா டியாகோவை ஸ்டார்ட் செய்தபோது, ஓரளவு குளிர்.

பொள்ளாச்சி தாண்டி உடுமலைப் பேட்டையில் ஒரு வெஜ் ஹோட்டலைத்தான் எல்லோரும் தேர்ந்தெடுக்கிறார்கள்... ஆரிய பவன் எனும் அந்த ஹோட்டலில், அற்புதமான ஆறிப்போகாத அடை தோசை காலை உணவை முடித்துவிட்டுப் பறந்தால்... மறையூர் செக்போஸ்ட்.

ஆரிய பவன் சூடான டிபன்

மறையூர் வருவதற்கு முன்பு பொள்ளாச்சி வெயிலில் ஜில்லென்று குளிக்க செமையான ஆப்ஷன் உண்டு. திருமூர்த்தி அருவி மற்றும் அணை. போகும் வழியில் அணையில் செமயான போட்டோ ஷூட். அணையைப் பார்ப்பதற்கே இரண்டு கண் போதாது போல! அத்தனை பெருசு. அருவிக்கு இன்னும் கொஞ்சம் போக வேண்டும். பார்க்கிங்கில் காரை விடும்போது, ஏதோ சபரிமலைக்கோ, பழனிக்கோ வந்ததுபோல் ஒரு ஃபீலிங். எங்களைத் தவிர எல்லோருமே சாமிகளாகவே இருந்தார்கள்.

போகும் வழியெல்லாம் தண்ணீர்

என்ட்ரன்ஸிலேயே எச்சரித்தார்கள். ‘‘பார்த்துப் போங்கண்ணே... குரங்குகிட்ட கேர்ஃபுல்லா இருங்க... ஹேண்ட்பேக்கைக்கூடப் பிடுங்கிடும்’’ என்று எச்சரித்தார் டிக்கெட்டர். போகிற வழியிலேயே அவர் சொன்னது நடந்துவிட்டது. வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்த குரங்கு ஒன்று, ஒரு பெண்மணியிடம் இருந்து கைப்பையைப் பிடுங்கி பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, பையை மட்டும் கீழே போட்டது வியப்பாக இருந்தது. இப்போது குரங்கெல்லாம் பணம் திருட ஆரம்பித்துவிட்டது... அவ்வ்வ்!

திருமூர்த்தி அருவிக்கு சீஸன் உண்டு. பருவமழை நேரம் நல்ல சீஸன். மார்ச்வரை ஓரளவு தண்ணீர் வரும் என்றார்கள். பக்தர்களிடம் மாட்டி திமிறிக் கொண்டிருந்தது திருமூர்த்தி அருவி. அற்புதமான அருவிச் சத்தத்தையும், மலைப்பாதை ட்ரெக்கிங்கையும் என்ஜாய் பண்ண சாமிகளுக்கு நேரமில்லை. எங்களைப்போன்ற ஆசாமிகள்தான், ஒவ்வொரு பேக்ரவுண்டிலும் ரசித்து ரசித்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மறையூர் செக்போஸ்ட்

இலந்தை வடை, மாங்காய், கோலி சோடா என்று ஸ்நாக்ஸ் டைமை முடித்துவிட்டு, மறையூர் கிளம்பினேன். மொத்தம் 4 செக்போஸ்ட்டுகள். தமிழ்நாட்டுக்கு 2, கேரளாவுக்கு 2. வழக்கம்போல் தமிழ்நாட்டில் 50 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். கேரளாவில் ‘‘பணம் கொடுக்க வேண்டாம். அதேபோல், ப்ளாஸ்டிக் மட்டும் காட்டுக்குள்ள வேண்டாம்’’ என்று தூய தமிழில் வழியனுப்பி வைத்தார்கள் கேரள செக்போஸ்ட் அதிகாரிகள்.

இந்த கேரள செக்போஸ்ட்டைத் தாண்டித்தான் ஒரு முறை நான் எண்டேவரில் பயணித்தபோது, எண்டேவரைவிடப் பெரிய சைஸில் யானை ஒன்று க்ராஸ் செய்தது நினைவுக்கு வந்தது. அதேபோல், அதற்குச் சில மாதங்கள் முன்பு சிறுத்தையா... ஜாகுவாரா... புலியா என்று தெரியவில்லை... மின்னல் மாதிரி ஏதோ ஒன்று க்ராஸ் செய்ததைப் பார்த்ததும், சாட்சாத் இதே இடம்தான்!

அடுத்து ஒரு செக்போஸ்ட் வந்தது. ‘மறையூரில் கால் தடுக்கினா அருவியா இருக்கும்னு சொன்னாங்களே...’ என்று அருவியைத் தேடினேன். பார்த்தால்... சாரி, கேட்டால்... செக்போஸ்ட்டைத் தாண்டி ஓர் அருவிச் சத்தம்... எருமச்சாடி அருவி என்று போர்டு தெரிந்தது. ஆளே இல்லை. குளிப்பதற்கும் கட்டணம் மிகவும் குறைவாகத்தான் வசூலித்தார்கள். லெமன் நாட்டுச் சர்க்கரை டீ குடித்துவிட்டு, எருமச்சாடியில் தலை நனைக்கலாம். அல்லது தலை நனைத்துவிட்டும் லெமன் கிராஸ் டீ குடிக்கலாம்.

எருமச்சாடி அருவி

போகும் வழியில் தூரத்தில் நான் ஏற்கெனவே சொன்ன தூவானம் அருவி, லாங் ஷாட்டில் ‘ஹாய்’ சொல்லியது. தூவானத்தில் ட்ரெக்கிங் போய் காட்டுக்குள் தங்கி, அருவியில் குளிப்பது அலாதி சுகம். இங்கே கேரள அரசு வனத்துறையினரின் அனுமதியோடு, அவர்களின் கைடு உதவியோடு, வனவிலங்குகள் உலவும் காட்டுக்குள் 3 கிமீ நடந்து... அருவிக்கு ரொம்பப் பக்கமாக ஒரு கல் வீட்டில் தங்க வைப்பார்கள். தூவானம் காட்டேஜ் தங்கல் பற்றி வரும் லாங் டிரைவில் சொல்கிறேன்.

மறையூர் தாண்டி காந்தளூர். இதுதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பூக்கும் இடம். நான் இரண்டு ஆண்டுகள் தாமதமாகப் போனது தெரிந்தது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வந்தால்தான், குறிஞ்சி மலர்களுடன் காந்தளூரில் புகைப்படம் எடுக்க முடியும் என்றார்கள்.

லாங்ஷாட்டில் மறையூர் தூவானம் அருவி

காந்தளூர், மறையூர் போன்ற இடங்களில் தங்குவது அற்புதமான சாய்ஸ். திடீரென காட்டேஜ் ஜன்னலைத் திறந்தால்... ஏதாவதொரு அருவிச் சாரல் அறைக்குள் அடிக்கலாம். மறையூரின் ஸ்பெஷலே தெருவுக்குத் தெரு விழும் அருவிகள்தான். காந்தளூரைச் சுற்றிலும் மலை என்பதால், மழை நேரங்களில் அருவிகளின் ஆரவாரம் இன்னும் அதிகமாகி இனிய இம்சை கொடுக்கும். தூவானம் அரசாங்கக் காட்டு வீடு. இங்கு தங்க 3,000 ரூபாய் கட்டணம். இந்த காட்டேஜ் இல்லாமல் ஏகப்பட்ட ஹோம் ஸ்டேக்களும் உண்டு. அருவிக்குப் பக்கத்தில் காட்டேஜ் தேடிப் பிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.

காந்தளூரில் சும்மாவே காட்டும் குளிர், காலையில் இ்ன்னும் காட்டு காட்டு என காட்டித் தள்ளியது. மறையூர், அருவிகளுக்கு மட்டுமில்லை; இன்னொரு விஷயத்துக்கும் பிரபலம். கரும்பில் இருந்து எடுக்கப்படும் சுத்தமான நாட்டுச் சர்க்கரை, மறையூரில் ஸ்பெஷல். ஒரு நாட்டுச்சர்க்கரை குடிசைத் தொழிற்சாலையில் மணக்க மணக்க பாகு கிண்டிக் கொண்டிருந்தார்கள். கிலோ 80 ரூபாய்க்கு அப்படி ரா மெட்டீரியலாக நாட்டுச்சர்க்கரை பார்சல் செய்து கொண்டேன்.

காந்தளூர் போகும் வழி அங்கங்கே கொண்டை ஊசி வளைவுகளுடன் டியாகோவுக்குச் சவால் விடுத்தது. நடுநடுவே மரங்கள் ஏற்றி வந்த ஹெவிலோடு லாரிகளுக்கு இடையில் கார் ஓட்ட கொஞ்சம் தனித்திறமை வேண்டும். லாரி டிரைவர்களுக்கு அதைவிட!

சமணர் படுகை அனகோட்டா பார்க்
போகும் இடமெல்லாம் சந்தன வாசம். பார்த்தால்... வரிசையாக சந்தன மரங்கள். ‘நம் ஊரா இருந்தா திருப்பதி மாதிரி மொட்டை அடிச்சிருப்பாங்கள்ல’ என்கிற என் சந்தேகத்தைக் கேட்டேன். இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு மரத்துக்கும் சிப் வைத்திருக்கிறார்கள். மரத்துக்குச் சேதாரம் என்றால், ஃபாரஸ்ட் ஆபீஸுக்கு அலாரம் அடித்துவிடும். அடுத்த நொடி... சந்தன மரச் சட்ட விரோதம் உங்கள் மீது பாயும்.

காந்தளூரில் இன்னோரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இருக்கிறது. அனகோட்டா பார்க் எனும் இடம் அப்படியே டைம் டிராவல் செய்ய வைக்கிறது. அந்தக் காலத்தில் சமணர் படுக்கைகள் என்று சொல்லக்கூடிய கற்களால் அமைக்கப்பட்டு வீடு போன்ற சில அமைப்பு, பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. வரலாற்றுப் பிரியர்கள் அனகோட்டாவை விடாதீர்கள்.

காந்தளூர் அருவி ட்ரெக்கிங்

காந்தளூர் தாண்டி ஏதோ ஓர் இடத்தில் காரை நிறுத்தி, ‘‘இந்தப் பக்கம்தான் போகணும்’’ என்றார் என் நண்பர். பார்த்தால், நம் ஊர் முட்டுச்சந்து மாதிரிதான் இருந்தது. ‘இங்க எங்கடா அருவி இருக்கப் போகுது’ என்ற என் நினைப்பைப் பொய்யாக்கியது அந்தத் தண்ணீர் சலசலப்பு. சாலையோரத்திலேயே அருவிக்கான மூலம் தெரிந்தது.

கேரள சேட்டன்களிடம் விசாரித்தோம். ‘‘இவ்விட ஓரருவி உண்டானு. ஈ அருவின்னு நுங்களாயிட்டே ஒரு பேரு வெச்சோளின்...’’ என்றார்கள் ஊர்க்காரர்களே! அதாவது, ஊர்க்காரர்களுக்கே அருவியின் பெயர் தெரியவில்லை. ஆனால், ‘‘எப்படி இந்த அருவியைக் கண்டுபிடிச்சீங்க... கவனமா போங்க’’ என்று மட்டும் வியந்து எச்சரித்தார்கள்.

சர்றென இறங்கிய பாதையில் ஒரு திகில் ட்ரெக்கிங். பயமாகத்தான் இருந்தது. விலங்குகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் தைரிய ட்ரெக்கிங் போகலாம். ஆனால், ஊர் அடங்கி காடு மாதிரிதான் இருந்தது.

வழுக்கும் பாறைகள் கவனம்
காட்டு வசம்புச் செடிகள்

காட்டு வசம்புச் செடிகள் படர்ந்த சரிவுகளில் சரேலென இறங்கியது ஒரு கூட்டம். நாங்கள்தான் அது. போகும் வழியில் அட்டைப் பூச்சிகளிடம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், ரத்தத்தை உறிஞ்சிவிடுகின்றன. மிகவும் கவனமாக 500 மீட்டர் தாண்டியதும், ஏதோ அதிரப்பள்ளிக்குத்தான் வந்து விட்டோமோ என்கிறபடி பேரிரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்தது அந்தப் பெயரே இல்லாத அருவி. ‘‘உன் பேரே தெரியாதே..’’ என்று அருவிச்சாரலில் நனைந்தபடி போஸ் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அருவி நீரைத் தலைக்கு வாங்கியபடி, வானத்தை அண்ணாந்து பார்த்தால்... இயற்கையின் அழகு தெரிகிறது.

பெயரே தெரியாத காந்தளூரின் அருவி

மழை நேரங்களில் இந்த அருவி இன்னும் பிரமாதமாக இருக்கலாம். ஆனால், வெயிலில் குளிப்பதுதானே அருவிக்கு மரியாதை.

அதே இடத்தில் குட்டிக் குட்டியாக சில கிளை அருவிகள். தூரத்தில் செல்ஃபி எடுக்கும்போதே கேமராவை சாரல் நனைத்தது. அட்டைப் பூச்சிகள், வசம்புச் செடிகள், சின்னச் சின்ன அகழிகளில் கவனமாக இருக்க வேண்டும். மழை நேரத்தில் அருவிச்சத்தமும் சாரலும் இன்னும் அதிகமாகும் என்றார்கள். அருவி பேக்ரவுண்டில் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தால், லைக்குகள் தெறிக்கும்!



source https://www.vikatan.com/lifestyle/travel/long-drive-series-places-to-visit-in-marayoor-kanthalloor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக