மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் 'கர்ணன்' படத்தின் 2 நிமிட டீஸர் நேற்று வெளியானது. நேற்றிரவு டீஸர் யூடியூபில் வந்துவிழந்ததில் இருந்தே ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருக்க, இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
'கர்ணணின் புறப்பாடு' என்கிற தலைப்போடு தொடங்கும் 'கர்ணன்' டீஸர் உணர்த்துவது என்ன?!
டீஸரில் படத்துக்கான நான்கு முக்கிய குறியீடுகள் இருக்கின்றன. முதலாவது பேச்சிபாட்டி, இரண்டாவது குதிரை, மூன்றாவது வாள், நான்காவது நாட்டார் தெய்வங்கள்.
தலையில்லாத சமண - பெளத்த வடிவ சிலையோடு தொடங்குகிறது டீஸர். தலையற்ற சிலை, அடுத்த காட்சி வாள், அதற்கடுத்து குதிரையின் மீது அமர்ந்திருக்கும் நாட்டார் தெய்வம், குதிரையை அழைத்துவரும் பெண் நாட்டார் தெய்வம், கடைசியாகப் பல்வேறு நாட்டார் தெய்வங்கள் எழுந்துவர மாரி செல்வராஜின் பெயரோடு டீஸரின் முதல் வசனம் தொடங்குகிறது.
பேச்சி பாட்டி பருந்தைப் பார்த்து, "நான் சொல்லியும் என் கோழிக் குஞ்சியை நீ தூக்கிட்டுப்போயிட்டல்ல... உன் காலை ஒடிச்சி, உன் சிறவை முறிக்க ஒருத்தன் வருவான் பார்" என்கிற ஒரு தலைவன் வரப்போகிறான் என்பதற்கான அறைகூவலோடு தொடங்குகிறது டீஸர். இறுதியில் பேச்சிப்பாட்டியே, "ஒருத்தரையும் விடாத... அடிச்சுத் துரத்து கர்ணா... அடிச்சுத் துரத்து கர்ணா" என சொல்வதோடு டீஸர் முடிகிறது. ஊருக்குள் யாரோ வருகிறார்கள், அவர்கள் ஊருக்குள் இருக்கும் ஒழுங்கைக் கெடுக்கிறார்கள், அவர்கள் அடித்து விரட்டப்படவேண்டியவர்கள், 'கர்ணன்' அவர்களை எப்படி விரட்டப்போகிறான் என்பதற்கான ஒன்லைனை இந்த வசனங்கள் சொல்லிவிடுகின்றன.
ஊருக்குள் நுழைபவர்கள் யார் என்பதைத்தான் கிருஷ்ணப்பருந்து, தலையற்ற சிலை என்பதன் வழியாக உணர்த்துகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். கிருஷ்ணப் பருந்துதான் வில்லன் கூட்டத்துக்கான குறியீடு என்பதாகவே தெரிகிறது. கோழிக்குஞ்சுகள் அந்தக் கிராமத்தில் இருக்கும் எளிய மக்கள் என எடுத்துக்கொள்ளலாம். மக்கள் கூட்டத்தில் இருந்து வில்லன் கும்பல் யாரையோ பறித்துக்கொண்டுபோகிறார்கள், அவர்கள் யாரைக் கொண்டுபோகிறார்கள் என்பதுதான் படத்தின் முக்கிய கருவாக இருக்கும் எனத்தெரிகிறது. மக்களை மீட்க வருகிறார் 'கர்ணன்'.
டீஸரில் மிக முக்கியமாக நிறைந்திருப்பது நாட்டார் தெய்வங்கள். குறிப்பாக பெண் நாட்டார்தெய்வம். டீஸரின் இறுதியில் தனுஷின் கையில் பிடித்திருக்கும் உருவமாக பெண் நாட்டார் தெய்வமே இருக்கிறது. நாட்டார் தெய்வங்கள் குறிப்பாக மக்களோடு வாழ்ந்து இறந்தவர்களாகவே இருப்பார்கள். இங்கே காட்டப்படுவது பெண் தெய்வம் என்பதால் அந்தப் பெண் யார், எப்படி இறந்தார், ஏன் தெய்வமானார், தனுஷுக்கு அவர் யார், அந்த ஊரைக் காப்பாற்றுவதில் அவரது பங்கு என்ன என்பதில் கதை அடங்கியிருக்கும் என்றே தெரிகிறது.
Also Read: கர்ணன் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? | Karnan Teaser Decoding
வாள், அரிவாள், வேல் கம்பு என ஆயுதங்கள் அதிக அளவில் படத்தில் காட்டப்படுகின்றன. மக்கள் ஆயுதங்களை ஏந்திப்போராடும் காட்சிகள் வருகின்றன. கேட்டு கேட்டு எதுவும் கிடைக்காதவர்கள், இறுதியில் எப்படிப்பட்டவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கான குறியீடாகவும் இந்த வாள் இருக்கலாம்.
இறுதியாக குதிரை. குதிரைமேல் ஏறிவருவது என்பது அதிகாரத்தின் குறியீடு. ஆற்றலின் குறியீடு. குதிரை மீது ஏறி அதிகாரத்துக்கு வரும் எளியவனின் கதை என்பதையும் 'கர்ணன்' டீஸர் உணர்த்துகிறது.
டீஸர் முழுக்கவே குறியீடுகளைக் கலைத்துப்போட்டு, எதையும் நேரடியாகச் சொல்லாமல், பார்வையாளர்கள் என்னவாகப் புரிந்துகொள்கிறார்களோ அப்படியே புரிந்துகொள்ளட்டும் என்பதாக முழுக்க முழுக்க காட்சிகளின் வழியாகவே கதை சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
கிருஷ்ணப்பருந்து, பேச்சிப்பாட்டி, தலையற்ற சிலை, வாள், குதிரை, நாட்டார் தெய்வங்கள் என இதற்குள்தான் படத்தின் கதை ஒளிந்திருக்கிறது. ஏப்ரல் 9 வரை முழுமையானப் படத்தைக் காண காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/decoding-dhanush-starrer-karnan-teaser
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக