கோலி கேப்டன்சியில் முதல்முறையாக ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது இந்தியா. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முடிவில், தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்து எழுந்த கேள்விகள், சந்தேகங்களுக்கெல்லாம் பதிலடியை, அதிரடியாய், நெற்றியடியாய், தன் பாணியில் ஹாட்ரிக் வெற்றி வாயிலாகச் சொல்லி இருக்கிறார் கோலி.#INDvENG
பன்ட் பற்றவைத்த நெருப்பு சுந்தரால் சுடர்விட, 89 ரன்கள் முன்னிலை, கையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் என நம்பிக்கையுடன் கம்பீரத்தையும் கலந்தெடுத்து நேற்றைய நாளைத் தொடங்கியது இந்தியா.
சுந்தர் - அக்ஸரின் இந்தக் கூட்டணிதான் இங்கிலாந்தின் ஓட்டத்தைக் கடினமாக்கப் போகிறதென்னும் அறிகுறிகளுடன் தொடங்கியது இந்தியாவின் இன்னிங்ஸ். வெற்றி மட்டுமேதான் எங்களது இலட்சியம், அதுவும் இன்றே நடக்க வேண்டும் என்னும் மன உறுதியுடனும் அதிக சிரத்தையோடு, சற்றே அவசரத்தோடு, துரிதகதியில் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர், இந்த இரட்டையர். போட்டி தொடங்கி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, 50 ரன்களைச் சேர்த்தனர்.
அரை சதத்தை நோக்கி அக்ஸர் ஆடத்தொடங்க, சதத்தைச் சேர சுந்தரும் முனைய, முதலில் யார் இலக்கைச் அடைவார் என்ற ஆவலுக்கிடையில் வந்து போனது, அவர்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப். இந்தியாவோ, 150 ரன்கள் முன்னிலை தாண்டி, தலைநிமிரத் தொடங்கும் தருணத்தில், இன்னிங்ஸ் வெற்றி கண்முன் நிழலாட, அதை தங்களது அருமையான ரன் அவுட்டினால் மாற்றி எழுத முயற்சித்தார்கள் இங்கிலாந்து வீரர்கள். சுந்தர் 96 ரன்னில் இருந்தபோது, கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க வேண்டும் என அக்ஸர் பட்டேல் ஓடிவர, சுந்தர் வேண்டாம் என்று சொல்ல அக்சர் மீண்டும் ரன்னர் கிரிஸுக்குத் திரும்பும் முன் ரன் அவுட் செய்யப்பட்டார். 43 ரன்களுடன் அரைச்சதத்தைத் தவறவிட்ட அக்ஸர் வெளியேற, சுந்தர் சதமெடுத்தபின் ஆட்டம் முடிவுக்கு வரட்டுமே என ரசிகர்களின் இதயங்கள் அடித்துத் துடித்தன.
ஆனால், இஷாந்த் ஷர்மா வந்த வேகத்தில் முதல் பாலே ஸ்டோக்ஸ் வீசிய பந்தில், எல்பிடபிள்யூவுக்கு தனது விக்கெட்டைக் கொடுத்து, ஆட்டமிழந்தார். சென்னையில் அஷ்வின் சதமடிக்கத் துணைபுரிந்த சிராஜ், இதற்கும் துணைபுரிவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, அவரை அதே ஓவரின் நான்காவது பந்தில் போல்டாக்கி ஸ்டோக்ஸ் அனுப்பி வைக்க, 96 ரன்களுடன், ஆட்டமிழக்காமல் இருந்தார் சுந்தர்.
மிகவும் அருமையாக விளையாடிய சுந்தர், சதமடிக்கும் வாய்ப்பை வெறும் நான்கு ரன்களுடன், அதுவும் மற்ற மூன்று பேட்ஸ்மேன்களின் தவறினால் தவற விட்டார். 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகெடுத்தது இந்தியா. 30 ஓவர்களுக்கு நீடித்தது சுந்தர் - அக்ஸர் கூட்டணி. ஆனால், அக்ஸரின் விக்கெட் உட்பட கடைசி மூன்று விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்துக்கு ஐந்து பந்துகளே தேவைப்பட்டன .
பன்ட், சுந்தர் உள்ளிட்ட பின்வரிசை பேட்ஸ்மேன்கள் முன்கள பேட்ஸ்மேனகளாகப் பணியாற்ற, 160 ரன்கள் முன்னிலை என்னும் வலுவான நிலையில் வந்து நின்றது இந்தியா. க்ராலி மற்றும் சிப்லியின் ஓப்பனிங்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது, இங்கிலாந்து. மூன்று ஓவர்கள் வீசப்பட்ட போது, உணவு இடைவேளை குறுக்கிட, அத்தருணத்தில், விக்கெட் இழப்பின்றி 6 ரன்களைச் சேர்த்திருந்தது இங்கிலாந்து.
இரண்டாவது செஷனில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து, ஆட்டத்தை இன்றே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியது போல ஆடத் தொடங்கியது.சிராஜை வைத்து முதல் ஓவரை ஆரம்பித்த இந்தியா, இரண்டாவது ஓவரை அக்சரை வீச வைத்தது. சிராஜ் பெயருக்கு 2 ஓவர்கள் வீசி விட்டு, "இனியெல்லாம் உங்கள் கையில்!" என அஷ்வினிடம் பந்தைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
ஆட்டத்தின் 5-வது ஓவரை வீசிய அஷ்வின், ஒரே ஓவரில், 2 விக்கெட்டுகளை, அடுத்தடுத்து வீழ்த்தி இங்கிலாந்துக்கு உயர்மின்னழுத்த அதிர்ச்சி அளித்தார். அஷ்வின் பந்தில், க்ராலி பேட் எட்ஜில் பட்டு, முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரஹானே கைகளில் தஞ்சம் புகுந்தது. அடுத்து உள்ளே வந்த பேர்ஸ்டோவுக்கு, மிடில் ஸ்டெம்ப் லைனில் வீச, லெக் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து, டக் அவுட் ஆனார். இந்தத் தொடரில் 4 இன்னிங்ஸ்களில், 3 முறை டக் அவுட் ஆகி, பலத்த ஏமாற்றத்தை இங்கிலாந்துக்குப் பரிசளித்துள்ளார் பேர்ஸ்டோ. ஹாட்ரிக் விக்கெட் விழுந்துவிடுமா என எதிர்பார்த்த நிலையில், ஜோ ரூட் அதை இலகுவாகத் தடுத்தார்.
ஹாட்ரிக் விக்கெட்டில் தப்பித்த ஜோ ரூட், அதற்கு அடுத்த ஓவரில், அக்ஸர் பட்டேல் பந்தில், பிளம்ப் முறையில், காலில் வாங்க, அம்பயர் அவுட் கொடுக்காமல் போக, ரிவ்யூ எடுக்க வேண்டாம் என்று கோலி விட்டுவிட, ரீப்ளேவில் பந்து நேராக ஸ்டெம்பைத் தாக்குவது கண்கூடாகத் தெரிந்தது.
இந்தத் தொடர் முழுவதும் தன்னம்பிக்கையின்றி ஆடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், மற்றொரு முறை, தாங்களே தங்களது விக்கெட்டுகளை, இந்திய பௌலர்களுக்கு எழுதித் தர தயாராயினர். நின்று ஆட யாருக்கும் பொறுமையில்லாதது போல், அடுத்தடுத்து ஆட்டமிழந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
அக்ஸர் பந்தில், சிப்லி மிட் விக்கெட் திசையில், ஷாட் ஆட முயல, கில் காலில் பட்டு பந்து எகிற, பன்ட் அதை லாவகமாகப் பிடித்தார். அடுத்து உள்ளே வந்த பென் ஸ்டோக்ஸ், லெக் சைடு திசையில் ஃபீல்டர் நிக்கிறார் என்று தெரிந்தும், அக்ஸர் பந்தில் ஷாட் ஆட முயல, பந்து லெக் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த கோலியின் கைகளில் தஞ்சம் புகுந்தது. தோல்விதான் உறுதியாகி விட்டதே என்பதைப் போல, கொஞ்சமும் போராடும் எண்ணமின்றி, கையைத் தூக்கி, இந்திய பௌலர்களிடம் சரணாகதி அடைந்து கொண்டிருந்தது இங்கிலாந்தின் பேட்டிங் படை.
14 ஓவர்களில், 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் போய்விட, இந்தியாவின் வெற்றி இன்றே உறுதிசெய்யப்பட்டு விடும் என்று தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோ ரூட் உடன் இணைந்த போப், 10 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆட, 15 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அக்ஸர் பந்தில் பொறுமையிழந்து, இறங்கி வந்து அடித்து ஆட முயல, பன்ட் அதை அருமையாக ஸ்டெம்பிங் செய்தார். அதற்கடுத்த ஓவரில், இங்கிலாந்து அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஜோ ரூட்டை, அஷ்வின் மறுபடியும் எல்பிடபிள்யு முறையில் வீழ்த்த, 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்க ஆரம்பித்தது, இங்கிலாந்து.
தேநீர் இடைவெளிக்கு முன், கடைசி ஓவரின் கடைசிப் பந்தில், லாரன்ஸ் பேடில் வாங்க, இந்தியா ரிவ்யூவுக்குப் போனது. ஆனால் லெக் ஸ்டெம்ப் லைனுக்கு வெளியே போனதால், தப்பித்தார் லாரன்ஸ். இங்கிலாந்து 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என தேநீர் எடுக்க சென்றது.
மூன்றாவது செஷனைத் தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஃபோக்ஸ், பெஸ் விக்கெட்டை அக்ஸர் படேல் வீழ்த்தியதோடு, மற்றொரு 5 விக்கெட் ஹாலையும் வீழ்த்தி அசத்தினார். இந்தியா சார்பில், 5வது முறையாக தொடர்ந்து 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் பௌலர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார், அக்ஸர் படேல்.
'அக்ஸர் பட்டேல் மட்டும்தான் 5 விக்கெட் எடுப்பாரா?, நானும் 5 விக்கெட் ஹால் எடுப்பேன்' என்று அஷ்வின், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, மற்றுமொரு 5 விக்கெட் ஹால் எடுத்து, இங்கிலாந்தை 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி, இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
அசத்தலாக இந்தப் போட்டியில், இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, 3/1 என தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பன்ட்டும் தொடர்நாயகனாக அஷ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலில் தோற்பதால், முற்றிலும் கோணலாகாது, தொடக்கத்தோடு முடிவும் எழுதப்படுவதில்லை எனபதை நிரூபணம் செய்யும் வகையில், முதல் போட்டியில் தோற்றாலும், போராடும் குணத்தோடு ஆஸ்திரேலியத் தொடரைக் கைப்பற்றிய அதே பாணியில், மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. அதற்கான பரிசு, லார்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தங்க நுழைவுச்சீட்டு!
source https://sports.vikatan.com/cricket/how-kohlis-team-india-defeated-england-at-the-fourth-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக