காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், பா.ஜ.க எதிர்ப்பு உள்ளிட்ட சில பிரச்னைகளில் கொள்கை அடிப்படையில் தி.மு.க-வுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்றன. மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள், மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்கள், திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளன.
மத்திய பா.ஜ.க அரசையும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசையும் எதிர்ப்பதில் இந்தக் கட்சிகள் மிகவும் உறுதியாக இருந்துவந்துள்ளன. அந்த உறுதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பல சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன.
வெறும் ஆறு தொகுதிகளைக் கொடுத்து வி.சி.க-விடம் தொகுதிப் பங்கீடு கணக்கை தி.மு.க முடித்திருக்கிறது. 2016-ல் மக்கள் நலக்கூட்டணியில் 25 தொகுதிகளில் வி.சி.க போட்டியிட்டது. அதைக்கூட கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. ஆனால், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்கப்பட்டன. அன்றைய தி.மு.க தலைவர் கருணாநிதி 10 இடங்களை வி.சி.க-வுக்கு வழங்கினார்.
இன்றைக்கு வெறும் ஆறு இடங்களே வி.சி.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையை ஏற்கக்கூடாது என்று வி.சி.க தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருக்கிறது. வி.சி.க தொண்டர்கள் போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். சனாதன சக்திகளை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்பதற்காக குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் விளக்கம் கூறியிருக்கிறார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தற்போது இந்தக் கட்சிக்கும் 6 தொகுதிகளைக் கொடுத்து கதையை முடித்திருக்கிறது தி.மு.க. ‘எண்ணிக்கையா, லட்சியமா என்று கேட்டால், எண்ணிக்கையைவிட லட்சியம்தான் பெரிது’ என்று விளக்கம் சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன்.
ஆனால், 6 தொகுதிகளுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களுக்கு லட்சியமும் முக்கியம் எண்ணிக்கையும் முக்கியம் என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.
வி.சி.க., சி.பி.ஐ ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆறு ஆறு தொகுதிகளைக் கொடுத்து உடன்பாடு கையெழுத்திடப்பட்டுவிட்டது. அடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது, நான்கு தொகுதிகளைத் தாண்டி தி.மு.க நகரவே இல்லையாம். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு அறிவாலயத்திலிருந்து வெளியே வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம், தொகுதி எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நாங்கள் ஒரு எண்ணிக்கையைச் சொன்னோம். தி.மு.க-வில் ஒரு எண்ணிக்கையைச் சொல்லியிருக்கிறார்கள். அது போதுமானதல்ல என்று இன்னொரு எண்ணிக்கையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்’ என்று மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதில் சொன்னார்.
குறைந்த எண்ணிக்கையை தி.மு.க தரப்பில் குறிப்பிட்டதால் தங்கள் கட்சியின் மாநிலச்செயற்குழுவில் கலந்துபேசிவிட்டு வருவதாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் தி.மு.க-விடம் கூறியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் நிலையும் தொங்கலில் இருக்கிறது. தாங்கள் எதிர்பார்ப்பதைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையை தி.மு.க சொல்வதால் காங்கிரஸ் தரப்பு மிகவும் நொந்துபோயிருக்கிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர்விட்டதாகக்கூட செய்திகள் வெளியாகின.
தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் தலையீடு அதிகமாக இருப்பது தெரிகிறது. ஐபேக் என்ன சொல்கிறதோ அதை அப்படியே தி.மு.க குழுவினர் செயல்படுத்துகிறார்கள். தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு மிகவும் கறார் தன்மையுடன் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
‘நாங்கள் வைத்திருப்பது கொள்கைக் கூட்டணி அல்ல. இது வெறும் தேர்தல் கூட்டணிதான். ஆனால், கொள்கைக் கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்த தி.மு.க கூட்டணியின் நிலையைப் பாருங்கள்’ என்று அ.தி.மு.க-வினர் ஏகடியம் பேசும் அளவுக்கு தி.மு.க முகாமின் தற்போதைய நிலை இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து கேட்டோம். மூத்த ஊடகவியலாளர் ஜென்ராமிடம் பேசியபோது...
“தொகுதிப் பங்கீடு தொடர்பான அணுகுமுறையில் கருணாநிதியின் அணுகுமுறைக்கும் ஸ்டாலினின் அணுகுமுறைக்கும் வேறுபாடு தெரிகிறது. அதாவது, கடந்த காலத்தில் அ.தி.மு.க-வின் அணுகுமுறை எப்படி இருந்ததோ, அதுபோலவே தி.மு.க-வின் அணுகுமுறை இப்போது இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அல்லாமல், தங்கள் கட்சியின் வெற்றியை மட்டுமே ஸ்டாலின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தி.மு.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஐபேக், கடந்த காலங்களில் ஆம் ஆத்மிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐபேக் நிறுவனத்தினர் ஒருவிதமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். அது, பா.ஜ.க-வின் அணுகுமுறையை பிரதிபலிப்பதாய் உள்ளது. தலித் ஆதரவு வெளியே தெரியக் கூடாது, சிறுபான்மை ஆதரவு வெளியே தெரியக் கூடாது என்ற ஆலோசனையை ஐபேக் கொடுக்கிறது.
இந்து பிற்படுத்தப்பட்டோர் உளவியல் மட்டுமே தெரிய வேண்டும் என்று ஐபேக் சொல்கிறது. இந்தத் தன்மையை ஐபேக் ஆலோசனை வழங்கியுள்ள எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. ஐபேக் சொல்லி இந்த அணுகுமுறையை ஆம் ஆத்மி செயல்படுத்தியது. அப்போது, பா.ஜ.க-வின் அடியொற்றி ஆம் ஆத்மி நடப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக விமர்சனம் கிளம்பியது. அதே மாதிரியான ஆலோசனைகளைத்தான் தி.மு.க-வுக்கு ஐபேக் வழங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்றார் ஜென்ராம்.
எதன் அடிப்படையில் இந்த விமர்சனத்தை வைக்கிறீர்கள் என்று ஜென்ராமிடம் கேட்டபோது, “இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க கையாண்ட அணுகுமுறையின் அடிப்படையில் பார்ப்போம். சிறுபான்மையினர் புறக்கணிப்பு, இடதுசாரி நிராகரிப்பு, விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினரை சமமாக நடத்த மறுத்தல் என்கிற மூன்று தன்மைகளும் அதில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதே நேரத்தில், தமிழக மக்களின் மனநிலை என்பது பா.ஜ.க-வுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக இருப்பதால், தி.மு.க-வின் வெற்றியை, தொகுதிப் பங்கீட்டில் அதுகாட்டும் அணுகுமுறை பாதித்துவிடாது என்று நினைக்கிறேன். அதை உணர்ந்த காரணத்தால்தான், தி.மு.க இப்படி அணுகுகிறது. தி.மு.க-வுக்கு சாதகமாக சூழல் தமிழகத்தில் இருக்கிறது என்பது உண்மை என்றாலும்கூட, அதற்காக அதன் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து நின்றால் நிலைமை மாறிவிடும்.
பா.ஜ.க எதிர்ப்பு உணர்வும், தி.மு.க-வுக்கு சாதகமான சூழலும் ஏற்படுவதற்கு காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அளித்துள்ள பங்களிப்பது அளப்பரியது என்பதை தி.மு.க மறந்துவிடக்கூடாது. இந்தப் பொறுப்பை உணர்ந்து, தன் சித்தாந்த மரபுகளில் நின்று இந்தத் தேர்தலை தி.மு.க அணுக வேண்டும் என்றும், அதுதான் சரியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.
சில உத்திகளை மட்டுமே ஐபேக்கிடமிருந்து பெற வேண்டும். ஆனால், தேர்தல் முழுக்க ஐபேக்கின் ஆலோசனை இருப்பதாகவே தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இதையெல்லாம் பார்க்க முடிகிறது. இந்த நிலையிலேயே தி.மு.க செயல்படுமானால், தேர்தல் முடிந்த பிறகு தி.மு.க வெற்றிபெற்றிருக்கும். அதன் கூட்டணியும் வெற்றிபெற்றிருக்கும்.
ஆனால், கூடவே பா.ஜ.க-வின் அணுகுமுறைக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கும். அதாவது, சிறுபான்மையினரை ஒதுக்கிவைப்பது, தலித்களை ஒதுக்கிவைப்பது, இடதுசாரிகளைப் புறக்கணிப்பது என்ற தன்மை ஓங்கியிருக்கும். இது தமிழகத்துக்கு நல்லது அல்ல. தி.மு.க-வுக்கும் நல்லது அல்ல. இப்படியான வெற்றியை ஒரு வெற்றியாகவும் கருத முடியாது” என்றார் ஜென்ராம்.
மூத்த ஊடகவியலாளர் வீரபாண்டியனிடம் பேசினோம்:
“2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், வெறும் எட்டு தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸுக்கு அதிகமான தொகுதிகளைக் கொடுத்ததால்தான் நாம் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தோம் என்ற வருத்தம் தி.மு.க-வினரிடம் இருந்தது, இன்றும் இருக்கிறது. அன்றைக்கு 32 தொகுதிகளை காங்கிரஸ் இழந்ததற்கு தி.மு.க-வின் உள்துரோகம் காரணம் என்று அப்போது காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மையும் இருக்கலாம்.
தற்போதும் நடக்கும் தொகுதிப் பங்கீடு விவகாரத்தைப் பொறுத்தவரையில், தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில் பெரியண்ணன் மனோபாவம் வந்துவிட்டதாகத் தெரிகிறது. நாம்தான் ஜெயிக்கப்போகிறோம், நாம்தான் ஆட்சியமைக்கப்போகிறோம், நம்மைவிட்டால் கூட்டணிக் கட்சியினருக்கு வேறு வழியில்லை என்ற எண்ணம் தி.மு.க-வுக்கு இருப்பது தெரிகிறது. நாங்கள் பார்த்துக் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு போங்கள் என்று தி.மு.க நினைக்கிறது.
Also Read: ``விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு... பா.ஜ.க-வைத் தோற்கடியுங்கள்!“ - தேர்தல் களத்தில் விவசாயிகள்
தற்போது தி.மு.க அணி வலுவாக இருக்கிறது. இதை சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காப்பாற்ற வேண்டிய கடமை திமுக-வுக்கு உண்டு என்று பார்க்கிறேன். தி.மு.க கொஞ்சம் நெகிழ்ந்துகொடுத்து பலமான அணியை உறுதிசெய்யாவிட்டால், தி.மு.க-வால் பா.ஜ.க-வை எதிர்கொள்ளவே முடியாது. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மத்தியில் அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-விடம் பணபலம் இருக்கிறது. காவல்துறை உள்பட எல்லோரும் சேர்ந்து செயல்படப்போகிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒன்றிரண்டு இடங்களைக் கூடுதலாகக் கொடுத்து ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் தி.மு.க நடந்துகொள்வது நல்லது.
தி.மு.க-வுக்கு மதச்சார்பற்ற அணி என்ற இமேஜ் வர வேண்டுமென்றால், அதில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்களும் வி.சி.க-வும் இருக்க வேண்டும். வி.சி.க-வுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறைந்தபட்சம் எட்டு இடங்களையாவது கொடுத்திருக்கலாம். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரிய இடங்களை ஒதுக்க வேண்டும். அப்போதுதான், நியாயமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றுவிட்டோம் என்ற உற்சாகத்துடன் அந்தக் கட்சியின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் தி.மு.க அணியின் வெற்றிக்காக வேலை செய்வார்கள்” என்றார் வீரபாண்டியன்.
ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க தலைமையில் இடம்பெறும் கூட்டணிக் கட்சிகள் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தையை சசிகலாவிடம்தான் பேசுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. வேறொருவரை வைத்துப் பேசும் இதேபோன்ற அணுகுமுறை இந்தமுறை தி.மு.க-விலும் இருப்பதாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், மறைமுகமாக ஊடகங்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/policies/is-dmk-showing-big-brother-attitude-in-seat-sharing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக