Ad

புதன், 24 மார்ச், 2021

``கேரள மக்களின் படிப்பறிவுதான் எங்களுக்கு பிரச்னை” - பாஜக எம்எல்ஏ ராஜகோபாலன்!

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வலுவான தடம் பதித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க கடுமையாக முயன்றுவருகிறது.

அந்த வகையில் கேரளாவில், சபரிமலை விவகாரத்தைப் பெரிய அளவில் கையில் எடுத்தது பா.ஜ.க. ஆனால், அது வாக்குவங்கியாக மாறவில்லை. எதையாவது புரட்டி எடுத்து முன்னேறிவிடலாம் என்று நினைக்கும் பா.ஜ.க-வுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. இப்போது வரை கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜகோபால்.

கேரளாவில் பா.ஜ.க-வால் வளர முடியாததற்குக் காரணம் என்ன என்று அவரிடம் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரலாகியுள்ளது.

ராஜகோபாலன் எம்.எல்.ஏ

`` கேரளா வித்தியாசமான மாநிலம். இங்கு படிப்பறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகம். 90% கேரள மக்கள் படிப்பறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்.

கேரள மக்கள் சிந்திக்கின்றனர். கருத்து தெரிவிக்கின்றனர். இவை படித்தவர்களின் குணநலன்கள். இது எங்களுக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. கேரளாவின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு 55% இந்துக்களும், 45% சிறுபான்மை மக்களும் இருக்கின்றனர். அனைத்துக் கணக்குகளிலும் இது எங்களுக்கு ஒரு சவால்தான். அதனால்தான் கேரளாவை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. இங்கிருக்கும் நிலை வேறுபட்டது. இருந்தாலும், நாங்கள் மெதுவாக வளர்ந்துவருகிறோம்” என்றார்.

மத அரசியலே பா.ஜ.க-வின் கொள்கை என்று விமர்சிக்கப்படும் நிலையில் ராஜகோபாலின் இந்தக் கருத்தை, `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சமூக ஊடகங்களில் விமர்சித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-literacy-rate-is-high-o-rajagopalan-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக