Ad

புதன், 17 மார்ச், 2021

அமைச்சர்களின் ஆதிக்கம்.. வேட்பாளர் பட்டியல் குளறுபடி.. கொங்கு மண்டலத்தில் சரியும் அ.தி.மு.க?

"மேற்கு மண்டலம் எல்லாம் வேலுமணி கன்ட்ரோல் அண்ணே.. கோவை மாவட்டத்துல சொன்னா உங்க அமைச்சர் கேக்க மாட்றார். நீங்க சென்னை பக்கம் வாங்க.. நான் பார்த்துக்கறேன்." கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்திடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள் இவை. அ.தி.மு.க கூட்டணியில் அமைச்சர் வேலுமணி சதியால், வால்பாறை தொகுதி கிடைக்கவில்லை என சொல்லி அவர் மீது கடுமையான விமர்சனம் வைத்த கோவை தங்கம், த.மா.கா-வில் இருந்து விலகிவிட்டார். இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டு வருகிறார். கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அ.தி.மு.க

Also Read: `உள்ளடி வேலைகளால் கலக்கம்; மொட்டை அடித்து வேண்டுதல்!’ - வேலூர் தொகுதியில் அதிமுக முந்துமா?

2016 சட்டசபை தேர்தலில் 1.1 சதவிகிதம் வித்தியாசத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைத்ததில் தொடங்கி பல விஷயங்களில் அ.தி.மு.க.வுக்கு கை கொடுத்தது கொங்குதான். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அந்த கொங்கு கோட்டையில் விரிசல்கள் விழதொடங்கிவிட்டன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தைக் கூட இங்கு கைப்பற்ற முடியவில்லை. 2021 சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது முதலே, அ.தி.மு.க-வின் கூடாரத்தில் நடுக்கம் தொடங்கிவிட்டது. காரணம், அந்தந்த அமைச்சர்களின் ஆதிக்கம்தான்.

கொங்கு மண்டலத்தில் அமைச்சர் வேலுமணி முக்கிய பவர் சென்டர் என்பது அனைவரும் அறிந்ததுதான். சட்டசபை தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அவர்தான் பொறுப்பாளர். தனது கன்ட்ரோலில் இல்லாத யாருக்கும் சீட் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து, சீனியர்களை திட்டமிட்டு புறக்கணித்திருக்கிறார் வேலுமணி என்று கொங்கு மண்டல ரத்தத்தின் ரத்தங்கள் புகார் வாசிக்கின்றனர்.

கோவை தங்கம்

கோவை மாவட்டம், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம், மீண்டும் அங்கு போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் வேலுமணி, "எனது மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட கூட்டணிக்கு விட்டுதரமாட்டேன்" என்று கறார் காட்டியுள்ளார். தங்கத்தின் சொந்தக்கட்சியான த.மா.காவும் கைவிரித்துவிட்டது. விளைவு, கோவை தங்கம் த.மா.காவில் இருந்து வெளியேறியதுடன், வேலுமணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

வால்பாறை தொகுதியில் வேலுமணி சிபாரிசுடன் வேட்பாளராக களமிறங்கியிருப்பது அமுல்கந்தசாமி. இவர் ஜெயலிலதா காலத்தில் கொலை குற்றத்துக்காக சிறை சென்றவர் என்று அ.தி.மு.க-வினரே புகார் சொல்கின்றனர். 2011-ம் ஆண்டு நடிகர் வடிவேலு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டியும் கைதாகியுள்ளார் கந்தசாமி. இப்படி கட்டப்பஞ்சயாத்து உள்ளிட்ட புகார்களால் அவர் அ.தி.மு.க-வில் டம்மியாக்கப்பட்டார். ஜெ மறைவுக்குப் பிறகு வேலுமணிக்கு விஸ்வாசமாக இருந்ததால், தற்போது கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், வால்பாறை தொகுதி வேட்பாளர் என்று பவர்புல்லாக வலம் வருகிறார் அமுல் கந்தசாமி.

வேலுமணி

கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ.க-வுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, சிட்டிங் எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் ஆதரவாளர்கள், அ.தி.மு.க அலுவலகத்தில் புரண்டு புரண்டு போராட்டம் நடத்தினர். த.மா.கா விஷயத்தில் கறாராக இருந்த வேலுமணி, சிட்டிங் எம்.எல்.ஏ எதிர்ப்பையும் மீறி தெற்கு தொகுதி பா.ஜ.க-வுக்கு கொடுக்கும் முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி சூலூர் தொகுதியில் களமிறங்க மிகுந்த ஆர்வத்தில் இருந்தார். ஆனால், கடந்த 2019 இடைத்தேர்தல், இப்போதைய தேர்தல் என்று இரண்டு முறையும் செ.ம-வுக்கு வாய்ப்பு இல்லை. அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார் என்பதற்காக கந்தசாமி என்பவருக்கு இரண்டு முறையும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், செ.ம வேலுசாமியும் அதிருப்தியில் உள்ளார்.

தொகுதிக்குள் ஓரளவுக்கு நல்ல பெயர் இருந்தும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்ராஜ் ஆகியோருக்கு சீட் வழங்கவில்லை. காரணம் அவர்கள் இருவரும் தர்மயுத்த காலக்கட்டத்தில் ஓ.பி.எஸ் அணியில் இருந்தனர். கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க வேட்பாளர் பையா கிருஷ்ணனும், ஆறுக்குட்டியும் உறவினர்கள். சீட் கிடைக்காத அதிருப்தியில் ஆறுக்குட்டி, பையாவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறாராம்.

எடப்பாடி பழனிசாமி வேலுமணி

மேலும், கவுண்டர்கள் மெஜாரட்டியாக உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில், நாயுடு சமுதாயத்தை சேர்ந்த பி.ஆர்.ஜி அருண்குமாரை நிறுத்தியது, நாயுடு சமுதாயம் மெஜாரிட்டியாக உள்ள சிங்காநல்லூர் தொகுதியில் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர். ஜெயராமனை நிறுத்தியது என்று வேட்பாளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என அ.தி.மு.கவினர் புலம்புகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலும் குன்னூர் சிட்டிங் எம்.எல்.ஏ சாந்தி ராமுவுக்கு சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக வேலுமணியின் ஆசியை பெற்ற மாவட்ட செயலாளர் வினோத் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிருப்தியடைந்த சாந்திராமு சுயேட்சையாக போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டார். பிறகு, சீனியர்கள், வேட்பாளர் வினோத் உள்ளிட்டோர் வீடு தேடி சென்று சாந்திராமுவை சமாதானப்படுத்தியுள்ளனர்.

சாந்தி ராமு

அப்படி இருந்தும் அவர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. வேலுமணியின் குட்புக்கில் இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், குணசேகரன், விஜயக்குமார் ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏ-களுக்கு சீட் கிடைத்துவிட்டது.

பல்லடம் தொகுதியில் ஓரளவு நல்ல பெயர் இருந்தும் சிட்டிங் எம்.எல்.ஏ நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அங்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் நின்ற ஆனந்தன் வெற்றி பெறவில்லை.

எம்.எஸ்.எம் ஆனந்தன்

மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார். இப்படியே சென்றால், அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என பயந்து, வேலுமணியின் சிபாரிசில் சீட் வாங்கிவிட்டார். அதேநேரத்தில் நடராஜன் அப்செட்டில் உள்ளார்.

கோவையில் வேலுமணி என்றால், ஈரோட்டில் அமைச்சர் கருப்பணனின் ஆதிக்கத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கருப்பணனுக்கு ஆகாதாவர் என்பதற்காகவே, முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான தோப்பு வெங்கடாசலத்துக்கு சீட் வழங்கப்படவில்லை. அதே தொகுதியில் கருப்பணனுக்கு வேண்டப்பட்ட ஜெயக்குமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. கண்ணீர்விட்டு அழுத தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.

தோப்பு வெங்கடாசலம்

டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்த பண்ணாரி என்பவர் பவானிசாகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இருப்பவரும் கருப்பணன்தான். மாவட்டத்தில் சீனியரான அமைச்சர் செங்கோட்டையனுக்கும் சீட் கிடைக்காமல் இருக்க கருப்பணன் முயற்சி செய்ததாகவும் புகார் கூறப்படுகிறது.

அமைச்சர் கருப்பணன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் கருப்பணணின் கை ஓங்கி கட்சியை சிதைக்கிறது என்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்பங்குக்கு ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார். கிருஷ்ணராயபுரம் சிட்டிங் எம்.எல்.ஏ கீதா, விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததால், இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்ட தானேஸ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்செட்டில் கீதா கண்ணீர்விட்டு பேட்டியளிக்க, சீட்டை நோக்கி எதிர்பார்த்திருந்த செல்வாக்குமிக்க முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் கடுப்பில் தி.மு.க-வுக்கே சென்றுவிட்டார்.

விஜயபாஸ்கர்

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி ஆதிக்கத்தாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேந்தமங்கலம் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகருக்கும் சீட் வழங்கவில்லை. ஓரளவுக்கு செல்வாக்கு இருந்தும், சீட் மறுத்துள்ளதால் சந்திரசேகரும் அப்செட் ஆகியுள்ளார்.

தங்கமணி

திருச்செங்கேடு தொகுதியில் செல்வாக்குமிக்க, முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி, பி.ஆர். சுந்தரம் சீட்டுக்காக முயற்சி செய்துள்ளார். ஆனால், வாய்ப்பளிக்காததால் அவரும் தற்போது அதிப்தியில்தான் இருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த லிஸ்டில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்திலேயே அமைச்சராக இருந்தவர் விஜயலட்சுமி. தி.மு.க வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக ஆக்டிவாக இருந்ததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலகட்டத்தில் விஜயலட்சுமி அல்லது அவரது குடும்பத்தினருக்கு சீட் வழங்கிவிடுவர். வெற்றி பெற்றால் அமைச்சரவையிலும் இடம் உண்டு. தற்போது, விஜயலட்சுமியின் சகோதரி மனோன்மணி சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

இந்தமுறை விஜயலட்சுமி குடும்பத்தில் ஒருவருக்கும் சீட் வழங்கவில்லை. கடுப்பில் குமுறிக் கொண்டிருக்கின்றனர் விஜயலட்சுமி குடும்பத்தினர். மேலும், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் மேட்டூர் சிட்டிங் எம்.எல்.ஏ செம்மலைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனது தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர்களின் வாக்கை கவர்வதற்காக பா.ம.க-வினருடன் கூட்டணியை உறுதிப்படுத்தவும் தவறில்லை.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது யாருமே எதிர்பாராதவிதமாக, கட்சிக்கு உழைத்த தீவிர விசுவாசிக்கு சீட் கிடைக்கும். அப்படி ஒரு அதிசயம் இனி நடக்குமா? என தெரியவில்லை. ஆனால், இந்தத் தேர்தல் நிச்சயம் இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்" என்று அ.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.


source https://www.vikatan.com/news/tamilnadu/in-2021-election-is-admk-losing-the-kongu-belt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக