Ad

புதன், 17 மார்ச், 2021

சுயேச்சையாகக் களமிறங்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்? - ஈரோடு அதிமுக-வில் பரபரப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் கடந்த 2011 மற்றும் 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ல் வெற்றி பெற்றபோது முதலில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2016-ல் தோப்பு வெற்றி பெற்றும் எந்த அமைச்சர் பதவியும் கொடுக்கப்படவில்லை. அதிலிருந்து அவர் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார். தோப்பு வெங்கடாசலத்தின் செயல்பாடுகள் கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகளை உருவாக்கி வைத்திருந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் பெருந்துறை ஒன்றியக் கவுன்சிலர் ஜே.கே (எ) ஜெயக்குமார் என பலரும் தோப்புவை எப்படியாவது ஓரம்கட்டிவிட நினைத்தனர்.

`தோப்பு' வெங்கடாச்சலம்

இதற்கிடையே எப்படியும் நடைபெறவிருக்கும் தேர்தலில் தனக்கு சீட் கிடைத்துவிடும் என தோப்பு பெரும் நம்பிக்கையில் இருந்தார். ஆனால், வேட்பாளர் பட்டியலில் தோப்பு வெங்கடாசலத்தின் பெயர் இல்லாமல், அவருக்கு எதிராகக் களமாடிய பெருந்துறை ஒன்றியக் கவுன்சிலர் ஜே.கே (எ) ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. இது தோப்பு வெங்கடாசலத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனையடுத்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தோப்பு ‘எதற்காக எனக்கு சீட் கொடுக்கப்படவில்லை. நான் என்ன தவறு செய்தேன். கட்சிக்கு உண்மையாக விசுவாசியாகத் தானே இருந்தேன்’ எனக் கலங்கினார். ‘அடுத்தக்கட்ட முடிவுகள் என்ன என்பதை, என்னுடைய தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்த பின்னர் அறிவிப்பேன்’ என்றும் சொல்லியிருந்தார்.

அதனையடுத்து பெருந்துறையில் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய தோப்பு, ‘நான் என்ன தவறு செய்துவிட்டேன். விசுவாசமாக இருந்த என்னை, நீங்கள் எச்சிலையை தூக்கிப் போடுவதைப் போல, போடுவது எந்த விதத்தில் நியாயம். நான் என்றைக்கும் அம்மாவுடைய விசுவாசியாக பற்றோடு இருப்பேன். நாளையே இயக்கத்திற்கு ஒரு சோதனை வந்தாலும், அதில் பங்கெடுத்துக் கொடுப்பேன். என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். என்னுடைய நிலை எந்தத் தொண்டனுக்கும் வரக்கூடாது’ எனக் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இதனைப் பார்த்து அவருடைய ஆதரவாளர்களும் குமுறி அழுதனர்.

Also Read: `ஏன் எனக்கு சீட் கொடுக்கலை!’ - கலங்கி நிற்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்!

அதனையடுத்து எப்படியாவது பெருந்துறைக்கு அறிவிக்கப்பட்ட ஜே.கே (எ) ஜெயக்குமாருக்கு பதிலாக தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென தோப்பு பல வழிகளில் முயற்சித்தும், எதுவும் பயனளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதில் கடுப்பான தோப்பு, பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவது என முடிவெடுத்திருக்கிறாராம். இன்று மதியம் 12 மணியளவில் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனு தாக்கல் செய்வார் எனச் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, சுயேச்சையாகக் களமிறங்கும் பட்சத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thoppu-venkatachalam-to-contest-independently-in-perundurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக