Ad

புதன், 3 மார்ச், 2021

தேனி : இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்

1978-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் உள்ள 68 சமுதாய மக்களை பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை, சீர்மரபினர் நலச்சங்கம் கையில் எடுத்து, போராட்டங்கள் மூலம் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தது. கடந்த 2019-ம் ஆண்டு, DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபினர் சமூதாய மக்கள் பெறலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

Also Read: தேனி: `மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் தாங்க..!’ - துணை முதல்வரை மறித்த அ.தி.மு.க தொண்டர்

வீடுகளில் கருப்புக் கொடி

சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இடஒதுக்கீட்டு சட்டம் தற்காலிகமானது என்றும், 6 மாதங்களுக்கு பின், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பின் தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ராமமூர்த்தி

வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அ.தி.மு.க அரசு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் ஓட்டுப் போடக் கூடாது என பிரசாரம் செய்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, “கடந்த 6 வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். அ.தி.மு.க அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. 7% உள் இடஒதுக்கீடு என கூறி, 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, மத்திய அரசின் சலுகைகளைப் பெறும் போது, தமிழக அரசு மட்டும் எங்களை வஞ்சிக்கும் விதமாக நடந்துகொள்கிறது.

Also Read: தேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்!’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்

அதனால் தான், எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் கருப்புக் கொடி கட்டியிருக்கிறோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க’வைப் புறக்கணிக்க, 68 சமுதாய மக்களும் தயாராகி வருகிறோம். வீடுவீடாகச் சென்று அ.தி.மு.க’விற்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்துவருகிறோம். தென் மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்.” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/seermarabinar-feel-unjustice-in-reservation-opposes-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக