Ad

ஞாயிறு, 7 மார்ச், 2021

``ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் நிச்சயம் நிற்க மாட்டேன்" - கமல்ஹாசன் சொல்லும் காரணம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சார வேலைகளில் முனைப்புடன் களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை, அம்பத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய கமல், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதுக் கட்சி முதன் முதலாகத் தேர்தலை எதிர்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் தான். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் என்பது தற்போது காலத்தின் தேவையாக இருக்கிறது. அதற்காகத் தான் நாங்கள் களத்தில் குதித்திருக்கிறோம். அந்த அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் தமிழகத்திலிருந்து துவங்க விரும்புகிறோம். அதற்குத் தமிழக மக்களும், தயாராக இருக்கின்றனர்.

கமலஹாசன்

இந்த தேர்தலில், மக்கள் திராவிட கட்சிகளுக்குப் பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தி.மு.க என்னும் திராவிட கட்சி தோன்றியது காலத்தின் கட்டாயம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் சூழலில் அந்த கட்சியை அகற்ற வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த தேர்தலில் நீங்கள் அனைவரும் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டுக்குப் பணம் வாங்காமல் நேர்மையான முறையில் ஜனநாயக கடமையை ஆற்றி உங்கள் தலைவனை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். 5000 ரூபாய்க்கு நீங்கள் உங்களை அவர்களிடம் அடகு வைத்து விடாதீர்கள்.

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து அரசியலை வியாபாரமாக்கி விட்டனர். சுய அரசியல் லாபங்களுக்காக இரண்டு கட்சிகளும் மக்கள் குடியைக் கெடுத்தது தான் தமிழகத்தின் கடந்த கால அரசியல் வரலாறாக இருக்கிறது. இனியும் இந்த இழிநிலை வேண்டாம் நமக்கு. உங்களுக்குச் சேவைசெய்யக் கருவியாக நானிருக்கிறேன். நீங்கள் தான் என்னைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் நீதி மய்யத்தைப் பலரும் அ.தி.மு.க-வின், `பி' டீம் என்றும், தி.மு.க-வின் `பி' டீம் என்றும் விமர்சிக்கின்றனர். இந்த கமலஹாசனின் மய்யம் கட்சி `பி' டீம் தான். ஆனால், இவர்களின் `பி' டீம் அல்ல. மக்கள் நீதி மய்யம் காந்தியின் `பி' டீம்.

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசோ எல்லாவற்றிற்கும் மன்மோகன் சிங் தான் காரணம் என்று குறை கூறிக்கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உச்சத்தில் லாக் செய்து வைத்துக்கொண்டு மக்களை வதைக்கிறது.

சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் எவ்வளவு ரூபாய் உயர்ந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். விறகடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்த பெண்களுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டரை பழக்கப்படுத்தி விட்டு தற்போது விலையை இந்த அளவு உயர்த்தி வைத்திருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் வரி மேல் வரி போடுகிறார்கள். வரி மேல் வரி போட மக்களென்ன வரிக்குதிரைகளா...?, சாலை மேம்பாட்டு வரி என்று ஒன்று இருக்கும் போது அதற்கு மேல் எதற்கு ஜி.எஸ்.டி வேறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. அமித் ஷாவிற்கு அம்பானியையும், அதானியையும் விட மக்களைத் தான் அதிகமாகப் பிடித்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

கமலஹாசன்

மத்தியில் தான் இப்படி என்றால் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஆனால், வெற்றி நடை போடும் தமிழகம், என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகம் எதில் வெற்றி நடை போடுகிறது, எங்கு வெற்றி நடை போடுகிறது என்று நான் கேட்கிறேன். கொக்கியில் ஓட்டுக்குப் பணம் என்ற சிறு புழுவை மாட்டி உங்களை இரையாக்கத் துடிக்கிறார்கள். நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது . மந்திரிகள் லஞ்சம் வாங்காமலிருந்தாலே தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். அனைவரும், ஸ்டாலின் நிற்கும் இடத்தில் நின்று உங்களால் வெற்றிபெற முடியுமா என்கின்றனர். நான் ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் நிச்சயம் நிற்க மாட்டேன். நான் சுத்தமான இடத்தில் தான் நிற்பேன்.

என்னுடைய என்ட்ரியை விடவும் எக்ஸிட் பிரமாதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மய்யத்தில் சாதி, மதத்திற்கு இடமில்லை. அன்பு தான் என்னுடைய மதம். மக்களாகிய நீங்கள் தான் என்னுடைய கடவுள். எனக்கு எதன் மீதும் பக்தி இல்லை, பாசம் மட்டும் தான் இருக்கிறது. மோனார்ச்சி சிஸ்டம் வீழ்ந்து மக்களுக்கான ஜனநாயக அரசு உதயமாக வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள்.

என்னுடைய எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காக அர்ப்பணிக்க அரசியலுக்கு வந்திருக்கிறேன். தயவு செய்து என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் . இல்லத்தரசிகள் அனைவரும் அரசு ஊதியத்தைப் பெற்று தங்கள் சம்பள சீட்டை கையில் எடுத்துப் பார்ப்பார்கள். அந்த நாள் வெகு தூரமில்லை.

Also Read: ஆலந்தூரில் கமல் போட்டி... துறைமுகத்தில் பழ.கருப்பையா?! மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல்

எங்களைப் பொறுத்த வரையில், தேர்தலில் ஜெயத்துக் கோட்டையைப் பிடிப்பது வெற்றியல்ல. தமிழகத்தை மேம்படுத்தி, முன்னேற்றி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு கொண்டு செல்ல வேண்டும். அதைத் தான் நாங்கள் வெற்றியாகக் கருதுகிறோம். இந்தியாவின் அரசியல் மாற்றம் தமிழகத்திலிருந்து உதித்ததாக இருக்கட்டும். இருண்ட தமிழகத்திற்கு ஒளி பாய்ச்ச டார்ச்- லைட்டுடன் வந்திருக்கிறோம். வாய்ப்பளியுங்கள், நாளை நமதாகட்டும்" என்று உரையாற்றி முடித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பழ.கருப்பையா, பாடலாசிரியர் சிநேகன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle



source https://www.vikatan.com/news/politics/kamal-hasan-slams-central-and-state-government-in-ambattur-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக