இந்திய ஊடகங்களில் கதை திருட்டு, இசை திருட்டு, கருத்து திருட்டு எனப் பேச்சுக்கள் எழுவது வழக்கமாகி விட்ட நிலையில் கடந்த வாரம் தீபிகா படுகோன் நடித்து வெளியான சர்வதேச ஆடை நிறுவனமான லிவீஸ் விளம்பரம் புதிய ரக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான 'யே பேலட்' (Yeh Ballet) திரைப்படத்தின் இயக்குநர் சோனி டாரபொரேவலா (Sooni Taraporevala). இவர் தீபிகாவின் லீவிஸ் விளம்பரத்தில் காட்டப்படும் நடன அரங்கம் தனது படத்தில் இருந்து திருடப்பட்டது என இன்ஸ்டாகிராமில் குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "லிவீஸ் விளம்பரத்தில் எங்களது நடன அரங்கின் அமைப்பைப் பார்த்தது அதிர்ச்சியளிக்கிறது. மும்பையில் எங்கும் அம்மாதிரியான நடன அரங்கங்கள் இல்லாத நிலையில் எங்கள் தயாரிப்பு வடிவமைப்பாளர் (Production Designer) சைலஜா ஷர்மா தனது சொந்த முயற்சியில் அந்த வடிவத்தை உருவாக்கினார்" எனக் கூறியுள்ளார்.
லீவிஸ் விளம்பரத்தில் வரும் 80-களில் வெளியான இந்தி டிஸ்கோ பாடலுக்கு தீபிகா நடனமாடுவது போன்ற காட்சிகளில் அவர் பின்னால் இருக்கும் அரங்கின் வடிவமே இந்தச் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. வெளியாகி 10 நாட்களிலேயே இந்த விளம்பரத்தை 56 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இன்ஸ்டாவிலேயே 'யே பேலட்' படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் விளம்பரத்தில் வரும் நடன அரங்கின் ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை பகிர்ந்துள்ள சோனு, "விளம்பர பட இயக்குநர் நதியா எங்கள் 'யே பேலட்' படத்தைப் பார்த்துவிட்டு அதன் நடன அரங்கின் வடிவமைப்பை திருடி துல்லியமாக எல்லா விவரங்களையும் நகலெடுத்துள்ளார்" என அவரை டேக் செய்து சாடியுள்ளார்.
வைரலாக பரவிவரும் இந்த லிவீஸ் விளம்பரத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் ரூபின் சுசக், இந்தச் சர்ச்சைக் குறித்து சமூக வலைதளத்தில் பேசியுள்ளார். "எங்கள் இயக்குநர் 'யே பேலட்' படத்தில் வரும் வடிவமைப்பை விரும்பினார். எனவே நாங்கள் அதனை மறுஉருவாக்கம் செய்தோம்" என காப்பி அடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். செட் டிசைன் திருடப்பட்டதை அழுத்தமாக பதிவிட்டுள்ள இயக்குநர் சோனு, "லிவீஸ் நிறுவனமோ அல்லது அந்த விளம்பரப்பட இயக்குநரோ மேலை நாடுகளில் இது போன்று அடுத்தவரின் ஐடியாக்களை திருடத் துணிவார்களா? இவர்கள் தங்கள் மனதில் என்ன நினைத்து இதை செய்தனர்?" என்றும் காரசாரமாகக் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பரவலாக இருக்கும் இந்த அறிவுசார் திருட்டுகள் (Copycat culture) முடிவுக்கு வரவேண்டும் என அவர் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.
source https://cinema.vikatan.com/bollywood/is-deepika-padukones-viral-levis-ad-copied-full-details
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக