Ad

திங்கள், 15 மார்ச், 2021

சென்னை: நில அபகரிப்பு; நடவடிக்கை எடுக்காத போலீஸ் - உயிரிழந்த ஆடிட்டர்!

சென்னை பெசன்ட்நகர், 31-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் ஆடிட்டராகப் பணியாற்றிவந்தார். அவருடைய மகன் ஸ்ரீவத்சன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை செம்மஞ்சேரி போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் கூறியிருப்பதாவது, ``நான் பெசன்ட் நகரில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய தந்தை ஸ்ரீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் கிராமம் , கலைஞர் கருணாநிதி சாலை அருகேயுள்ள 27 சென்ட் காலி இடத்தை 1.02 கோடி ரூபாய்க்கு வாங்கினார். பின்னர் ஆகஸ்ட் மாதம் 2019-ம் தேதி என்னுடைய தந்தை ஸ்ரீனிவாசன் அந்த இடத்தை பார்க்கச் சென்றார். அப்போது அந்த இடத்தில் தற்காலிகக் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

கலைஞர் கருணாநிதி சாலை

அது தொடர்பாக விசாரித்தபோது, அந்த இடத்தை கிரானைட் நிறுவன உரிமையாளர் ஆனந்தகுமரன் என்பவர் கார்த்திக் என்பவரிடம் வாடகை ஒப்பந்தம் செய்திருக்கும் தகவல் தெரியவந்தது. அதன் பிறகு இடம் தொடர்பான ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரைச் சந்தித்து என்னுடைய தந்தை ஸ்ரீனிவாசன் புகாரளித்தார். பின்னர் ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் 20.2.2021-ல் கார்த்திக், அவரின் தந்தை திருநாவுக்கரசு, ஆனந்தகுமரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 34, 120 பி, 420, 465, 467, 447, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்தும் இதுவரை யாரையும் போலீஸார் கைதுசெய்யவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், முன்ஜாமீன் கேட்டு கார்த்திக், திருநாவுக்கரசு, ஆனந்தகுமரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கின்றனர். போலீஸாரும் ஸ்ரீனிவாசனின் மகன் ஸ்ரீவத்சனும் முன்ஜாமீனுக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் அவர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

எஃப்.ஐ.ஆர்

இது குறித்து செம்மஞ்சேரி போலீஸார் கூறுகையில், ``ஸ்ரீவத்சன் அளித்த புகாரின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் கார்த்திக், அவரின் தந்தை திருநாவுக்கரசு, ஆனந்தகுமரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். 2012-ம் ஆண்டு சோழிங்கநல்லூர், கே.கே.சாலையில் கிரானைட் குடோன் வைப்பதற்காக கார்த்திக், அவரின் தந்தை திருநாவுக்கரசு ஆகியோர் ஆனந்தகுமரனுக்கு வாடகைக்கு இடத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

10.8.2020-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கார்த்திக் கூடுதலாக புல எண் 193 பார்ட்டை சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக ஆனந்தகுமரனிடமும் விசாரணை நடத்தியபோது அவரும் இடத்தை காலி செய்வதாகத் தெரிவித்தார். ஆனால் இடத்தை அவர் காலி செய்யவில்லை. இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கார்த்திக், திருநாவுக்கரசு ஆகியோரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இடம் தொடர்பான ஆவணங்களைச் சமர்பிக்கும்படி கார்த்திக்கிடமும் திருநாவுக்கரசுவிடமும் கேட்டிருக்கிறோம்" என்றனர்.

ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவு

Also Read: `கண்மாயில் 37 ஏக்கர் ஆக்கிரமிப்பு; 30 ஆண்டுகள்!' புதுக்கோட்டை அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

இதற்கிடையில் கார்த்திக், திருநாவுக்கரசு, ஆனந்தகுமரனுக்கு ஆதரவாக கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரும் காவல்துறை உயரதிகாரியிடம் பேசியிருக்கின்றனர். அதன் பிறகே விசாரணை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த இடப் பிரச்னை காரணமாக ஸ்ரீனிவாசன்18.8.2020-ல் போலீஸிடம் புகாரளித்திருக்கிறார். புகாரளித்த ஏழாவது நாளான 25.8.2020-ல் உயிரிழந்திருக்கிறார். தற்போது ஆடிட்டர் ஸ்ரீனிவாசனின் குடும்பம் சட்டரீதியான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

இது குறித்து ஆனந்தகுமரன், கார்த்திக் ஆகியோரின் விளக்கம் கேட்க அவர்களின் செல்போன் நம்பருக்கு பல தடவை பேச முயன்றோம். அவர்களின் போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/news/crime/chennai-land-grabbing-leads-to-death-of-auditor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக