Ad

வெள்ளி, 12 மார்ச், 2021

குமரி: பத்மநாபபுரம் தொகுதியை கேட்கும் அர்ஜுன் சம்பத்... அ.தி.மு.க இழுபறிக்கு மூன்று காரணங்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதில் இழுபறி நீடிபதற்கு மூன்று காரணம் சொல்கிறார்கள்.

அங்கு ஓ.பி.எஸும், இ.பி.எஸும் தங்கள் ஆதரவாளரை வேட்பாளராக போடவேண்டும் என முயல்வதால் ஏற்படும் பிரச்னை என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் நீலகிரி தொகுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், பத்மநாபபுரத்தை எங்களுக்கு ஒதுக்குங்கள் என பா.ஜ.க தரப்பு அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பது மற்றொரு காரணம் என்கிறார்கள்.

ஆனால் இந்த இழுபறிகளுக்கு இடையில் புகுந்து தனக்கு சீட் வேண்டும் என அ.தி.மு.க தலைமைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரஷர் கொடுப்பது மூன்றாவது காரணம் என புதுத்தகவல் கிளம்பியிருக்கிறது. பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட அர்ஜுன் சம்பத் முயல்வதாகவும், அதற்காக அ.தி.மு.க தலைமையிடம் பேசுவதாகவும் தொகுதி முழுக்க பேச்சு ஒடுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை

இதுபற்றி அர்ஜுன் சம்பத்திடமே பேசினோம், "நாங்கள் ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் இந்து மக்கள் கட்சிக்கு ஐந்து சீட்டுகள் கேட்டிருந்தோம். ஆனால் எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனவே ஒரு சீட்டாவது கொடுங்கள். அதுவும் பத்மநாபபுரம் தொகுதியை கொடுங்கள் என அ.தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறேன். அங்கு அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

பத்மநாபபுரம் தொகுதி தமிழகத்தில் பா.ஜ.க முதலில் கால் பதித்த தொகுதிதான். ஆனாலும் பா.ஜ.க போட்டியிடுவதற்கு முன்பே இந்து இயக்கங்கள் சார்பில் வை.பாலச்சந்தர் என்பவர் 1984-ல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது அங்குள்ள 40 சதவீத இந்துக்களில் 25 சதவீதம் இருக்கும் கிருஷ்ண வகை சமுதாய மக்களும், இந்து நாடார் மக்களும் என் மீது எப்போதும் அன்புகொண்டவர்கள்.

ஒ.பி.எஸ் - எடப்பாடி

எனவேத்தான் நான் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க தலைமையில் சீட் கேட்கிறேன்" என்றார். பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று மதியத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பா.ஜ.க-வுக்கு போகுமா, அர்ஜுன் சம்பத்துக்கு போகுமா அல்லது அ.தி.மு.க போட்டியிடுமா என்ற குழப்பத்துக்கு முடிவு தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/arjun-sampath-asking-for-padmanabapuram-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக