Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

'' ’கத்தி’ பட சம்பளத்தைக் கேட்டதுக்காக ‘மாஸ்டர்’ல நடிக்க விடல'' - ஆதங்கப்படும் கண்ணதாசன் மகன்

‘’ 'இவன் வேற மாதிரி’ படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் அப்பாவாக நடித்தவர் கோபி கண்ணதாசன். கவியரசு கண்ணதாசனின் மகன். விஜய்யின் ’கத்தி’ உள்ளிட்ட சில முக்கியமானப் படங்களிலும் நடித்திருக்கிறார். த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ராங்கி’ படத்திலும் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார்.

‘'காலங்காலமாக சினிமாவில் இப்படித்தான் நடக்குதுனு சொல்றாங்க. ஆனா எனக்குத் தப்புனு படற ஒரு விஷயத்தை நான் பேச விரும்பறேன்'’ என்று நம்மைத் தொடர்புகொண்ட கோபி கண்ணதாசனிடம் தொடர்ந்து பேசினோம்.

’’கனடாவுல சில வருடங்கள் இருந்துட்டு இங்க வந்த நான் விளம்பரப் படங்கள்ல கேமராமேனா வொர்க் பண்ணிட்டிருந்தேன். அப்ப நடிகரான என் நண்பர் ஒருத்தரோட சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டை வேடிக்கை பார்க்கப் போனவனை, அங்கிருந்த இயக்குநர் பார்த்துட்டு, ‘ பார்க்க ஆக்டர் மாதிரி இருக்கீங்களே... ஒரு கேரக்டர் இருக்கு பண்றீங்களா’னு கேட்டார். முதன்முதலா ஸ்க்ரீன்ல என் முகம் வந்த அந்த சீரியல் விகடன் டெலிவிஸ்டாஸின் ‘திருமதி செல்வம்’. எம்.எல்.ஏ கேரக்டர் தந்தாங்க.

தொடர்ந்து சினிமாக்காரங்க சிலர் கண்ணுல பட, 'இவன் வேற மாதிரி’ படத்துல சான்ஸ் கிடைச்சது. அப்ப இருந்து இப்ப வரை கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திட்டு வர்றேன்.

அப்படித்தான் விஜய்யின் ‘கத்தி’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சுற்றுச்சூழல் மேலாண்மை வாரியத்தின் தலைவரா அதாவது நீதிபதி கேரக்டர்ல நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல நடிக்கிறதுக்காக எனக்குப் பேசிய சம்பளத்துல பாதியை மட்டுமே தந்தாங்க. மீதி இந்த நாள் வரைக்கும் வரலை. தயாரிப்பாளர்கிட்ட கேட்டா, 'ப்ரொடக்‌ஷன் மேனஜர்கிட்ட உங்க சம்பளம் முழுசையும் கொடுத்தாச்சு. அங்க வாங்கிக்கோங்க'னு சொல்றாங்க. அவர்கிட்ட ரெண்டு தடவை போனேன். மூணாவது முறை, ‘என்னங்க பணத்துக்கு இவ்ளோ பிரச்னை பண்ணிட்டிருக்கீங்க’னு கேட்டார்.

அமெரிக்கா, கனடாவுலலாம் இருந்துட்டு வந்த எனக்கு இது தப்பா பட்டுச்சு. நாம வேலை செஞ்ச சம்பளத்தைக் கேட்டா, பிரச்னை செய்றீங்களானு கேட்டா என்ன அர்த்தம்? ஆனாலும் இவ்ளோ பிரச்னைக்குப் பிறகும் அதே லைகா தயாரிப்புல அடுத்த படமான ‘ராங்கி’ படத்துலயும் கமிட் ஆகியிருந்தேன்.

கோபி கண்ணதாசன்

ஆனா, என்னைக்கு நான் சம்பளத்தைக் கேக்க ஆரம்பிச்சேனோ, அப்ப இருந்து தயாரிப்பு நிர்வாகிகள் ஒண்ணு சேர்ந்து எனக்கு எதிரா செயல்பட ஆரம்பிச்சிட்டாங்க. திட்டமிட்டு சில வேலைகளைச் செஞ்சாங்க.

எப்படின்னா, ‘மாஸ்டர்’ படத்துக்கு கமிட் ஆகியிருந்தேன். சரியா, அந்த ஷூட்டிங் நாட்களைத் தெரிஞ்சிக்கிட்டு, அதே நாட்கள்ல ‘ராங்கி’ ஷூட்டிங் உஸ்பெகிஸ்தான்ல இருக்குனு சொன்னாங்க. முன்னாடியே கமிட் ஆன படம்கிறதால வேற வழியில்லாம, நானும் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பை விட்டேன். அதேபோல ’இந்தியன் -2’ படத்துல நான் நடிக்க வேண்டிய வாய்ப்பையும் கெடுத்தாங்க. ஷூட்டிங் இருக்குனு சொல்வாங்க. அந்த இன்னொரு பட வாய்ப்பு என்கிட்ட இருந்து போயிடுச்சுனு தெரிஞ்சதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி இந்தப்படம் தள்ளிப் போயிருச்சுனு சொல்வாங்க. இப்படியே பண்ணிட்டிருந்தாங்க.

அதுக்குப் பிறகுதான் இது திட்டமிட்டு சிலர் பண்ணுற வேலைனு எனக்குத் தெரியவர, நான் உஷார் ஆனேன். திரும்பவும் ‘பொன்னியின் செல்வன்’ பட ஷூட்டிங் கிளம்பிட்டிருக்கிறப்ப பேசினாங்க. ‘என்ன உஸ்பெகிஸ்தான் ஷூட்டிங்கா? எத்தனை தடவை சார் பொய் சொல்வீங்க’னு கேட்டதோட நடந்ததைச் சுருக்கமா முகநூல்ல எழுதி சம்பந்தப்பட்டவருக்கே லின்க் அனுப்பிவெச்சேன். உடனே உஷார் ஆனவர், ’இல்ல... நீங்க ‘பொன்னியின் செல்வன்’ முடிச்சிட்டே வாங்க’னு சொல்லிட்டார்.

ஆனா, இந்தப் பிரச்னையை இப்படியே விடக்கூடாதுனு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்துக்குப் பேசினேன். என் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டவங்க, ’புகாரை எழுதி அனுப்புங்க... பார்க்கறோம்’னு சொன்னாங்க. சரின்னு விரிவா எழுதி அனுப்பினா, இப்ப அந்தத் தபாலை வாங்க மறுத்து எனக்கே திருப்பி அனுப்பியிருக்காங்க. அடுத்து இதுல சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யணும்னு இருக்கேன்’’ என்றவர், ’'கண்ணதாசன் மகனான எனக்கே இதுதான் நிலைமைங்கிற போது சினிமாவைத் தேடி கனவோடு வர்ற புதுப் புதுக் கலைஞர்களின் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வெச்சே ஆகணும்'' என்றார்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/kannadasan-son-gopi-kannadasan-shares-his-salary-issues-with-tamil-cinema-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக