Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

கடலூர்: அதிமுக வேட்பாளர் மாற்றம்; சூறையாடப்பட்ட அலுவலகம் - நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர் மகன்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான ராம.பழனிச்சாமி என்பவரை வேட்பாளராக அறிவித்தது அ.தி.மு.க தலைமை. தொடர்ந்து அந்த தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வேட்பாளராக அறிவித்தது தி.மு.க.

சூறையாடப்பட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அறை

அதையடுத்து ”மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் நின்று தோற்றுப்போன பழனிச்சாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் பன்னீர்செல்வத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது” என்று சமூக வலைத்தலங்களில் தி.மு.கவினர் பேசியது உளவுத்துறையின் மூலம் அ.தி.மு.கவின் தலைமைக்குச் சென்றது.

அதையடுத்து நேற்று மாலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பழனிச்சாமியை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தை வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை.

அடித்து நொறுக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்

இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் தன்னை மாற்றியதால் கோபமடைந்த பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் பாதிரிக்குப்பத்தில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தனது காரை நிறுத்திவிட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அலுவகத்துக்குள் சென்ற அவரது ஆதரவாளர்கள் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அதேபோல அங்கிருந்த அமைச்சரின் காரையும், அவரது தேர்தல் பிரசார வாகனத்தையும் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர்.

அமைச்சர் எம்.சி.சம்பத்

அதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் தூள்தூளானது. அதையடுத்து நேராக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அறைக்குச் சென்ற அவர்கள், அவர் இல்லாததால் அவரது இருக்கையையும், மேசையையும் அடித்து நொறுக்கினார்கள். தொடர்ந்து, “அமைச்சரின் மகன் எங்கேடா..” என்று கேட்டுக் கொண்டே முதல் தளத்தை நோக்கிச் சென்றார்கள்.

அப்போது முதல் தளத்தில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் எம்.சி.சம்பத்தின் மகன் பிரவீன்குமார். உடனே அங்கிருந்த கட்சிக்காரர்கள் சிலர் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக மேல்மாடிக்கு அழைத்துச் சென்றதால் மயிரிழையில் தப்பித்தார்.

Also Read: ``அமைச்சர் எம்.சி.சம்பத் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கிறார்!" - குற்றஞ்சாட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அமைச்சரின் ஆதரவாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல அலுவலகத்தைவிட்டு வெளியேறிய அந்தக் கும்பல், அலுவலகத்தை நோக்கி கற்களை வீசியதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து காவல்துறை வந்ததும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cuddalore-kurinjipadi-admk-office-attacked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக