Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

மீண்டும் லாக்டெளன் பயன் தராது; தடுப்பூசிதான் வழி - எஸ்.பி.ஐ ஆராய்ச்சி அறிக்கை

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொரோனாவின் தாக்கம், ஒருநாளுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி இருக்கிறது. அதிக அளவில் மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வங்கியின் தலைமை பொருளாதார ஆராய்ச்சி நிபுணர் டாக்டர்.செளம்யா கன்டி கோஷ் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையில், கொரோனாவின் இரண்டாவது அலை ஃபிப்ரவரி 15-ம் தேதியே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

'கொரோனா தொற்றின் இரண்டாவது அலை' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில், இரண்டாவது அலையின் வேகம் ஏப்ரல் மாத மத்தியில் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசியால் மட்டுமே தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``நாட்டில் இதுவரை 5.31 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், கேரளா, உத்தரகாண்ட், ஹரியானா மாநிலங்களில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமான முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. ஆனால் பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. இம்மாநிலங்களில் தடுப்பூசி போடப்படுவதை விரைவுபடுத்தவேண்டியது அவசியம். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 40-45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், நாடு முழுவதும் நான்கு மாதங்களில் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும்.

Also Read: கொரோனா 2வது அலை... எதிர்கொள்ள கைகொடுக்கும் இயற்கை... மீண்டும் இந்த வழிகளைக் கையிலெடுப்போமா?

உள்ளூரில் கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கம் அல்லது கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட முடியாது. தடுப்பூசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு பொதுமுடக்கம் கொண்டு வரப்பட்டால் அதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம், பசி போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் சிலி போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/lockdown-will-not-help-contain-corona-second-wave-sbi-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக