ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளிலும் வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக விற்கப்படுகிறது வெள்ளரிப் பிஞ்சு. வெயிலுக்கு இதமாகச் சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த வெள்ளரிப் பிஞ்சு, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகிறது.
கோடைக்காலத்தை நம்பியே இந்தப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் நாட்டு வெள்ளரி மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் ஜெர்கின் வெள்ளரி (Gherkin Cucumber) என்றழைக்கப்படும் சீமை வெள்ளரியை வாங்க தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றன.
தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஜெர்கின் வெள்ளரி வளர்ப்புக்குத் தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி வருகின்றன. மேலும், வெள்ளரிப் பிஞ்சுகளை நேரடியாக விவசாயியின் நிலத்துக்கே சென்று வாங்கிக் கொள்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் பரவலாக வெள்ளரி ஒப்பந்த பண்ணைச் சாகுபடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஜல்லூத்துப்பட்டியில் உள்ள விவசாயி நடராஜ் பேசியபோது,
``சீமை வெள்ளரி பயிர் செய்துட்டு வர்றேன். இது வெளிநாடுகளுக்கு நிறைய ஏற்றுமதியாகுது. அங்கே வெள்ளரி ஊறுகாய், சாலட்னு பயன்படுத்துறாங்க. என்னுடைய அண்ணன் மகனோட நண்பர் ஒருவர் ஜெர்கின் வெள்ளரியைப் பயிர் செஞ்சிட்டு வர்றார். அவர் `உங்க பகுதியில ஜெர்கின் வெள்ளரி நல்லா விளையும். இதை நிறுவனங்களே நேரிடையாக வந்து எடுத்துக்கொள்ளும். பயிர் செஞ்சு பாருங்க. உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும்’ என்றார்.
கடந்த ஆண்டு ஆடிப் பட்டத்தில் ஜெர்கின் வெள்ளரியை நடவு செய்து அறுவடை செய்தேன். இப்பவும் விதைச்சிருக்கோம்.
கம்பெனியோட சார்பில் மேற்பார்வையாளர் ஒருவர் ஒவ்வொரு வாரமும் வயலைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார். மேலும், ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலையும் வழங்கி விடுவார். உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, கொடி கட்டுவதற்கான கம்பி, சணல் நூல் என சகலத்தையும் கொடுத்திடுறாங்க. செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், எட்டு அடிக்கு ஒரு கொம்பு நட்டு கொடி ஏற்றும்பணியை மட்டும் நாம் செய்ய வேண்டும்.
30-வது நாளிலேயே பூக்கள் பூக்க ஆரம்பிச்சிடும். 35-வது நாள்ல அறுவடை செய்ய ஆரம்பிச்சிடலாம். ஆரம்பத்துல கொஞ்சமா பிஞ்சு அறுவடையாகும். 50-வது நாள்ல இருந்து 70-வது நாள் வரைக்கும் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாங்க ஒவ்வொரு நாளும் 140 கிலோ வெள்ளரி பிஞ்சு வரை அறுவடை செய்திருக்கிறோம்.
கம்பெனி கொடுக்குற ஒவ்வொரு விதை பாக்கெட்டிலும் ஆயிரம் விதைகள் இருக்கும். 1,000 விதைகள ஊன்றினால் குறைந்தது 750 கிலோ விளைச்சல் கிடைக்கும். நாங்க இந்தத் தைப்பட்டத்தில 4,000 விதைகள ஊன்றி இருக்கிறோம். இதுவரை 2,000 கிலோ வரை அறுவடை செய்திருக்கிறோம். சுண்டு விரலைவிட சிறிய அளவில் இருந்தால் கிலோவுக்கு 34 ரூபாயும் அதைவிட கொஞ்சம் பெரியதாக இருந்தால் 22 ரூபாயும், அதற்கு அடுத்து 15 ரூபாய், 10 ரூபாய் எனத் தரம் வாரியாக விலை கிடைக்குது.
நாங்க நாற்பது சென்ட் அளவுக்கு சீமை வெள்ளரி போட்டிருக்கிறோம். இதுவரை 40,000 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கு. இதில் நிறுவனம் வழங்கும் உரம், பூச்சி மருந்து, விதைக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகை நமக்குக் கொடுத்திடுறாங்க. பூச்சி மருந்து, விதை, உரம் போன்றவற்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். எரு, உழவு செலவு கணக்கிட்டால் பத்தாயிரம் ரூபாய் செலவாகும். மொத்தமாக 20,000 ரூபாய் செலவு போக 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். லாபம் குறைவுன்னாலும் பயிர் செய்றதுக்கான முதலீடு, போக்குவரத்து வசதிகள கம்பெனிகளே கொடுக்கிறதால, ஒப்பந்த சாகுபடி செஞ்சுட்டு வர்றேன்” என்றார் நடராஜ்.
நாட்டு வெள்ளரி- சீமை வெள்ளரி ஒப்பீடு:
நாட்டு வெள்ளரிக்கும் சீமை வெள்ளரிக்கும் நடவு முறையிலேயே வேறுபாடு உண்டு. நாட்டு வெள்ளரி தரையிலேயே படரும் கொடி வகை. சீமை வெள்ளரிக்குக் கண்டிப்பாகக் கொடிக்கட்ட வேண்டும். நாட்டு வெள்ளரியை இரண்டு நாள்கள் அறுக்காமல் விட்டாலும் பிரச்னை இல்லை. ஆனால், ஜெர்கின் வெள்ளரியைத் தினமும் அறுவடை செய்ய வேண்டும். சீமை வெள்ளரி ரகத்துக்கு எவ்வளவு விலை கொடுப்பீங்க முன்கூட்டியே பேசி விட வேண்டும். நாட்டு வெள்ளரி ரகத்தை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துவிடலாம். சீமை வெள்ளரியை உள்ளூர் சந்தையில் அவ்வளவு எளிதாக விற்பனை செய்ய முடியாது.
source https://www.vikatan.com/news/agriculture/salem-farmers-get-good-profit-from-contract-farming-in-cucumber-cultivation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக