Ad

புதன், 3 மார்ச், 2021

நிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ காந்தியின் மகன்கள் - கொதிக்கும் ராணிப்பேட்டை தி.மு.க நிர்வாகிகள்!

தமிழகத்தில் உள்ள மிகப் பழைமையான சட்டபேரவைத் தொகுதிகளில் ராணிப்பேட்டையும் ஒன்று. இந்த தொகுதி 1951-லிருந்து தேர்தல்களைச் சந்தித்துவருகிறது. தொழில் வளர்ச்சி நிறைந்த இந்த ஊரை தலைநகராகக் கொண்டுதான் புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பாலாறும்-பொன்னியாறும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை ஒரு காலத்தில் வளமான விவசாய பூமியாகவும் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாகப் பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும், நீர்நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டையின் சூழல் சீரழிந்து வருகிறது.

ஸ்டாலினுடன் காந்தி, மகன் வினோத்

இந்த அவல நிலையிலிருந்து ராணிப்பேட்டையை மீட்டெடுக்க மக்கள் பிரநிதிகளும், ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொகுதி மக்களின் பகிரங்க குற்றச்சாட்டு. ராணிப்பேட்டை தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறது. தி.மு.க மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி தொடர்ந்து ஐந்து முறை போட்டியிட்டு மூன்றாவது முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ-வான காந்தி மீது அதிருப்தியும், சர்ச்சையும் நிலவுகிறது. தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக மாறியிருந்தாலும், தி.மு.க-வின் கட்டமைப்பும் வலுவாக இருப்பதால், களத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

காந்தி, இந்த முறை அமைச்சர் கனவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க-வில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் அதிகார மிக்கவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்திருந்த காந்தியின் ஆசைக்கு முட்டுக்கட்டைப் போட்டவர் இப்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் என்கிறார்கள். காந்திக்கு வினோத், சந்தோஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் சர்வதேச பள்ளி ஒன்றின் இயக்குநர்களாக உள்ளனர். ‘துரைமுருகனின் மகன் அரசியலுக்கு வந்து எம்.பி ஆன நிலையில், தன்னையும் எம்.எல்.ஏ ஆக்கிவிடு’ என்று காந்தியிடம் மூத்த மகன் வினோத் மல்லுக்கட்டுவதாகவும் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

துரைமுருகன்

நேரடி அரசியலுக்குள் காந்தியின் மகன்கள் இன்னும் வரவில்லை. இருந்தாலும், அவர்கள் இருவரும்தான் ராணிப்பேட்டையின் நிழல் எம்.எல்.ஏ-வாகவும், தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராகவும் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பல்வேறு விவகாரங்களில் மகன்கள் தலையிடுவதால் காந்தி மீது தி.மு.க நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில், தி.மு.க-வின் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் காந்தியின் வீட்டில் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில், காந்தியின் மனைவி கமலா, மகன்கள் வினோத், சந்தோஷ், மூத்த மருமகள் ஷீலா ஆகியோர் தலைமை தாங்கி, ‘தேர்தலில் பணியாற்றுவது எப்படி?’ என்று பாடம் எடுத்துள்ளனர். பொதுவாகவே, பல்வேறு சமயங்களில் காந்திக்குப் பதிலாக அவரது மகன்கள்தான் கட்சி நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குகிறார்கள்.

காந்திக்குக் கிடைக்கிற அதே மரியாதை வரவேற்புகளை இரு மகன்களும் கேட்டுப் பெறுகிறார்களாம். வரவேற்பு தடபுடலாக இல்லையெனில் அவர்களின் கண் சிவந்துவிடுகிறது என்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தனியாக அழைத்து திட்டித் தீர்த்துவிடுவதாகவும் சொல்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். அதுமட்டுமின்றி, ராணிப்பேட்டை தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களிலும் காந்தியின் மகன்களைப் பாராட்டியே புகழ் பாடப்படுகிறது. கட்சிப் பொறுப்பில் இல்லாதவர்கள் குறித்து தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிடுவதன் பின்னணியும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதெல்லாம், தி.மு.க மூத்த நிர்வாகிகளைக் கடுப்படையச் செய்திருக்கிறது.

காந்தியின் குடும்பம்

‘காந்தியின் குடும்பச் சொத்தா ராணிப்பேட்டை தி.மு.க?’ என்று கொந்தளிக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். தொகுதியின் வளர்ச்சிக்குப் பெரிதாக எதையும் செய்யாதபோதும், தன் பெயருக்கு முன்னாள் ‘சாதனைச் செம்மல்’ என்று போட்டுக்கொண்டு பெருமைப்படுகிறார் காந்தி என்றும் விமர்சிக்கிறது அ.தி.மு.க தரப்பு. பல்வேறு விமர்சனங்கள் வாசிக்கப்பட்டாலும் மீண்டும் சீட் கேட்டு தலைமையில் பிடிவாதம் காட்டுகிறாராம் காந்தி.



source https://www.vikatan.com/news/politics/senior-members-upset-with-ranipet-dmk-mla-ganthi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக