Ad

புதன், 3 மார்ச், 2021

கோடிகளில் டீல்... மணல் மாஃபியாவுக்கு சீட்? - காய் நகர்த்தும் தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை. அதற்குள்ளாக தி.மு.க. விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டு, வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நடத்தி வருகிறது. ஐபேக்கும், மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பங்குக்கு ஆளுக்கொரு வேட்பாளர் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஸ்டாலின் ஒருபக்கம் தனியாக ஆய்வு செய்து வருவதோடு, விருப்ப மனு கொடுத்தவர்களிடம் எல்லாம் நேர்காணலை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின்

இதனிடையே, தெற்கு மண்டலத்தை கவனித்து வரும் `முருகப்பெருமானின் ஆயுதம்’ பெயர் கொண்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், 3 தொகுதிகளுக்கு மிகப்பெரிய டீல் ஒன்றை பேசியிருக்கிறாராம். இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், “கொரோனா பணிகளில் முக்கிய பங்கு வகித்த அமைச்சரின் சொந்த மாவட்டமான, டெல்டா மாவட்டம் ஒன்றில் ’காலா’ பெயர் கொண்ட மணல் மாஃபியா ஒருவர் இருக்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இருபக்கமும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். சமீபத்தில் அந்த தி.மு.க பிரமுகரை சந்தித்த அந்த மணல் மனிதர், ’மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள். அதில் ஒன்றில் நான் நிற்பேன், அடுத்த இரண்டிலும் நான் சொல்பவர்களை வேட்பாளர்களாக அறிவியுங்கள். கட்சிக்கு 50 சி, இந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து 50 சி, உங்களுக்கு தனியாக கவனித்து விடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். அதனோடு அந்த தி.மு.க பிரமுகரின் மகன் தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு தனியாக 25சி தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.

Also Read: நிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ காந்தியின் மகன்கள் - கொதிக்கும் ராணிப்பேட்டை தி.மு.க நிர்வாகிகள்!

மொத்தமாக 150சி வரவு வருவதால் குஷியான அந்த தி.மு.க பிரமுகர், மணல் மனிதரின் டீல் குறித்து தி.மு.க-வின் டெல்டா மாவட்ட பொறுப்பாளரிடம் பேசியிருக்கிறார். கடுப்பான அந்த பொறுப்பாளர், ‘ மாவட்டத்துக்குள் நடப்பது தெரியாமல் பேசாதீர்கள். அந்த குறிப்பிட்ட 3 தொகுதிகளும் இந்த முறை கண்டிப்பாக நாம் ஜெயிக்கக் கூடியவை. வேட்பாளரை மாற்றினால் தோற்றுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார். இவர்களின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, ‘காலா’ மணல் மனிதர், திடீர் என்ட்ரி கொடுத்தாராம். `எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தான், என்ன கூப்பிட்டீங்களா?’ என்று டென்ஷனான அந்த மாவட்ட பொறுப்பாளர் கோபத்துடன் வெளியேறியிருக்கிறார். இப்போது இந்த விவகாரம் தலைமைக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் ஸ்டாலின் கைகளில்தான் எல்லாம்!” என்றார்கள்.



source https://www.vikatan.com/news/politics/deals-in-crores-seat-for-sand-mafia-in-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக