ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம், விசைத்தறி பிரதான தொழில். புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில்தான் சோளிங்கரின் அடையாளம். பேரூராட்சியாக உள்ள சோளிங்கரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காக நரசிம்மர் கோயிலில் கொண்டுவரப்பட்ட ரோப்கார் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காவேரிப்பாக்கத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதுடன், விசைத்தறி மேம்பாட்டுக்காகக் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. தொழிற்சாலைகள் இல்லாததால், படித்த இளைஞர்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர். பாணாவரம் ரயில் நிலையத்தில் பெரும்பாலான ரயில்கள் நின்று செல்வதில்லை. மலை வளங்களைப் பெரும்புள்ளிகள் சுவடே தெரியாமல் வெட்டி கொள்ளையடித்துவிட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த தொகுதியில் தி.மு.க-வும், காங்கிரஸும் அதிக முறை வெற்றிபெற்றிருக்கிறது. இருந்தாலும் சிட்டிங் எம்.எல்.ஏ வெங்குப்பட்டு சம்பத் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்.
2016 பொதுத்தேர்தலில் இந்த தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றியது. என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பார்த்திபன் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வே மீண்டும் சோளிங்கரைக் கைப்பற்றியது. வன்னியர், முதலியார் சமூக வாக்குகள்தான் சோளிங்கர் தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. இதனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ம.க சோளிங்கரை விடாப்பிடியாக கேட்டுப் பெற்றிருக்கிறது. பா.ம.க மாவட்டச் செயலாளர் அ.ம.கிருஷ்ணன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், அ.ம.மு.க சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் மீண்டும் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவரும், ஸ்ரீபாரதி பஸ் அதிபரும், பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தருமான ஏ.எம்.முனிரத்தினத்தைக் களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சாதி அரசியல்தான். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், முதலியார் சமூக மக்கள் தன் சமூக வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். முந்தைய தேர்தல்களின் நிலவரமும் அப்படித்தான் இருக்கின்றன. அ.ம.மு.க வேட்பாளர் பார்த்திபன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் களமிறக்கவுள்ள முனிரத்தினமும் முதலியார்தான். இருவரும் செல்வாக்குடையவர்கள் என்பதால் அந்த சமூக வாக்குகள் பிளவுப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன.
அதேசமயம், பா.ம.க வேட்பாளர் அ.ம.கிருஷ்ணன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அச்சமூகத்தின் வாக்குகளை அவர் எளிதில் கவர்ந்துவிடுவார். 2016 தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட்டபோதே சோளிங்கர் தொகுதியில் அந்த கட்சி ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை அள்ளியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் பா.ம.க தெம்பாக இருக்கிறது. நடுநிலை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், புது வாக்காளர்களைத் தாண்டி ரஜினி ரசிகர்களும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். சோளிங்கர் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் முப்பதாயிரம் வாக்குகள் ரஜினி மக்கள் மன்றத்திடம் உள்ளது. தமிழகத்திலேயே, இந்த தொகுதியில் மட்டும்தான் ரஜினி ரசிகர்களின் வாக்கு வங்கி முக்கிய கவனம் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ரவி, சோளிங்கரைச் சேர்ந்தவர் என்பதுதான்.
ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பு இந்த தொகுதியில் மிக வலுவாக இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், டிஜிட்டல் இணையப் படையை ஏற்படுத்தி சோஷியல் மீடியாவில் தீவிரமாகக் களமாடி வந்தனர் மன்ற நிர்வாகிகள். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய தளங்களில் ரஜினி குறித்த பதிவுகளை ‘டிரெண்டிங்’ செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். கடைசிக் கட்டத்தில் ரஜினி, ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று அறிவித்தது மன்றத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழகத்திலேயே, முதன் முதலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்தான் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்தார் ரஜினி. சோளிங்கரைச் சேர்ந்த ரவிதான் முதல் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதற்கேற்ப, மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் களப்பணியும் தீவிரமாக இருந்தன. இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் மன்றத்தில் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறங்களில் பெண் நிர்வாகிளையும் நியமித்து கட்டமைப்புகளைப் பலப்படுத்தியிருந்தனர்.
தொகுதியில் 100 சதவிகிதம் பூத் கமிட்டிகளையும் அமைத்து தேர்தலுக்குத் தயாராகி வந்தனர். ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், அவர் சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கலாம். அந்த அளவுக்கு சோளிங்கர் தொகுதியை ரஜினி சென்டிமென்ட்டாகப் பார்த்ததாகவும் மன்ற நிர்வாகிகள் சொல்கிறார்கள். ரஜினியைத் தவிர்த்து மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவி சுயேட்சையாகக் களமிறங்கினாலும் பிரதான கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மக்கள் மத்தியிலும் ரவிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதை விரும்பவில்லை. மன்ற பணிகளை மட்டுமே தொடர்ந்து செய்துவருகிறார். இந்த நிலையில், ரஜினி ரசிகர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவியை அணுகி காய் நகர்த்துகிறார்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள். அதற்கு ரவி அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்களின் குடும்ப வாக்குகள் எந்தக் கட்சிக்கு என்பதுதான் சோளிங்கரில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/who-do-rajini-fans-vote-for-sholinghur-assembly-constituency-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக