தெரிந்த இடம்... ஆனால், யாரும் பார்க்காத இடங்கள், பயணிக்காத பாதைகள், அனுபவிக்காத ஆனந்தம்... இதுதான் எங்கள் பயணத்தின் நோக்கம்... ஊட்டிக்குத்தான் போனோம். ஆனால், எப்படிப் போனோம் என்பதை சொல்கிறேன்.
"நான்கு சக்கர வாகனம் உங்கள் உடலை இடம்மாற்றும். ஆனால், இருசக்கர வாகனம் உங்கள் ஆன்மாவையே இடம் மாற்றும்'' என்பார்கள். அதனால் நானும், என் நண்பனும் உள்ளத்தை இடம்மாற்றும் இருசக்கர வாகனத்தையே இந்தப் பயணத்துக்கு தேர்ந்தெடுத்தோம். ஆன்மாவை அழைத்துச்சென்றது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்.
டாஸ்மாக், பார்களில் கூட்டம் கட்டியேறத் தொடங்கும் வெள்ளிக்கிழமை மாலை பெருங்களத்தூரில் இருந்து தொடங்கியது எங்கள் பயணம். ஊட்டிக்குக் கோவை போய் போகலாம், கிருஷ்ணகிரி போயும் போகலாம். ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்தது சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஊட்டி ரூட். #BikeRide
இதுபோன்ற நீண்ட தூரப் பயணங்களில் ஆங்காங்கே சிறு ஓய்வு பைக்கிற்கும், நம் உடலுக்கும் தேவை. அதனால், கிட்டத்தட்ட இரவு 7 மணிவாக்கில் திண்டிவனத்தில் 20 நிமிட பிரேக்கில் ஒரு கறுந்தேநீர் அருந்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.
அடுத்து இரவு உணவுக்காக ஒரு பிரேக் போடவேண்டும். "சோறு நல்லாயிருந்தா எங்க வேணா சாப்பிடலாம்" வகையறாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் சேலத்தில் இரவு உணவு எனத் திட்டம். குளிர் உடலுக்குள் உதறல்களைத் தர ஆரம்பிக்க, தெர்மல் ஜெர்க்கினை எடுத்து அணிந்துகொண்டு போர்வீரர்கள் போன்று பயணத்தைத் தொடர்ந்தோம்.
சேலத்தை நெருங்கும் நேரம்... எங்கள் வயிறு பசிக்கும் முன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. பெட்ரோலை ஃபுல் டாங்க் நிரப்பிவிட்டு, சேலத்தில் ஹோட்டல் நிலாச்சோறுக்குள் பைக்கை நிறுத்தினோம். ஓப்பன் கார்டன் டைப் தாபா உணவகம் இது.
பெப்பர் சூப், சிக்கன் பார்பிக்யூ, பரோட்டா, சிக்கன் கிரேவி, பள்ளிப்பாளையம் சிக்கன், லெமன் ஜூஸ் என ஃபுல்கோர்ஸ் டின்னர் முடிந்தது. விலையும் அதிகம் இல்லை என்பதால் உணவுக்குப்பிறகான 'ஓவராதான் சாப்டோமோ' என்கிற நெஞ்செரிச்சலும் இல்லை.
சேலத்தில் இருந்து கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம். காட்டுக்குள் பயணம். யானைகள் கிராஸிங், புலிகள் பாதை என்கிற பெயர்பலகைகளைக் கடக்கும்போதே மனம் திக் திக் பயணத்துக்குத் தயாரானது. காட்டுக்குள் 1 மணி நேரம் பயணித்து மேட்டுப்பாளையம் வந்து நள்ளிரவில் ஊட்டி போய் சேர்ந்தோம்.
ஊட்டியில் தமிழ்நாடு ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம். இது ஊட்டி ஏரிக்குப் பின்பக்கம் இருக்கிறது. இங்கு தங்க ஆன்லைனில் புக் செய்யமுடியாது. தெரிந்தவர்கள் மூலம் சொல்லித்தான் புக் செய்யவேண்டும். இரண்டு பேர் தங்குவதற்கான கட்டணம் 1200 ரூபாய். இந்த விலைக்கு தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது நாங்கள் தங்கியிருந்த அறை. இந்த கெஸ்ட் ஹவுஸை மரங்கள் மட்டுமே சூழ்ந்திருந்தன. அருகில் வீடுகளையோ, சாலைகளையோ பார்க்க முடியவில்லை. மனம் மரங்களின் அமைதியில் இளைப்பாறியது.
இரவு தூக்கத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை காலை மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். அவலாஞ்சி எமரால்டு ஏரிதான் சனிக்கிழமை பயணத்துக்கான ரூட். இந்தப் பாதை மிகவும் அழகான, செழிப்பான பகுதிகளைக் கொண்டது. இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே எமரால்டு டேம் பகுதியை அடைந்தோம். இங்கே சூரியன் மறையும் நேரம்... அற்புதக் காட்சிகள் ஓவர்லோடட். கொஞ்ச நேரம் அங்கேயிருந்துவிட்டு மீண்டும் ஊட்டிக்குத் திரும்பினோம்.
கெஸ்ட் ஹவுஸில் உணவு முன்கூட்டியே சொல்லி ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதால், போகும்போதே இரவு உணவை வாங்கிக்கொண்டு போய்விட்டோம்.
இதுவரையிலான பயணம் எல்லோரும் மேற்கொள்வதுதான். அடுத்துதான் பேரானந்ததுக்கான தேடல் தொடங்கியது. எங்களிடம் இருப்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான். ஒரேநாளில் போகாத இடங்களுக்குள் எல்லாம் பயணிக்க வேண்டும். எங்கே போகலாம், எப்படிப் போகலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோதே ஊட்டியில் இருந்த நண்பரிடம் இருந்து அழைப்பு. "நீங்க வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்" என்கிற அன்புத்தொல்லைகள். தமிழ்நாடு ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காலை 9 மணிக்கு செக் அவுட் செய்துவிட்டு அவர் வீட்டுக்கு பைக்கைக் கிளப்பினோம்.
வீட்டுக்குள் நுழைந்தால் ஊட்டி குளிரை சமப்படுத்த சுடுச்சுட இட்லி, காரசாரமான பெப்பர் சிக்கன் குழம்பு என வயிற்றுக்குள் எல்லாம் இதமாக இறங்கிக்கொண்டிருந்தபோது, "இப்ப ஊட்டியில இருந்து நாங்க சென்னைப் போகணும். ஆனா வேற ரூட்ல, வேற ஃபீல்ல" என்றேன். அவர் நண்பர் அல்லவா, எங்களையும், எங்கள் தேடலையும் உடனே புரிந்துகொண்டார்.
"இருசக்கர வாகனப் பயணம்... இயற்கை எழில் கொஞ்சும் பாதைகள்... அதானே!" என்றவர், ''நீங்கள் மாஞ்சூர், பிக்கெட்டி, மேல்குந்தா, கிண்ணக்கோரை வழியாகப்போய் அப்படியே மீண்டும் மாஞ்சூர் வந்து, காரமடை, அவினாசி, ஈரோடு வழியாகச் சென்னை போய்விடலாம். ரூட்டு செம ட்ரீட்டா இருக்கும்" என்றார்.
கிண்ணக்கோரையை நோக்கி டீ எஸ்டேட்களின் வாசத்துக்கு இடையே பயணம் தொடங்கியது. இயற்கையின் எழில் கொஞ்சும் மலைகள், தேயிலைத்தோட்டங்கள், வழியெங்கும் எளிய மனிதர்களால் நிரம்பியிருந்த குட்டி குட்டி கிராமங்கள் என எல்லாவற்றையும் ரசித்தபடி, சில பல இளையராஜா, ரஹ்மான் பாடல்களை முணுமுணுத்தபடியே பயணம் தொடர்ந்தது.
போட்டோ எடுக்க எல்லாமே செம லொக்கேஷன் என்பதால் அடிக்கடி பைக் பிரேக் போட்டது. இடையிடையே மெகா சைஸில் காட்டெருமைகளும் "இது எங்க ஏரியா" என அட்டெண்டன்ஸ் போட, அவற்றை எந்தத் தொந்தரவும் செய்யாமல் கடந்துபோனோம்.
அழகான மலைகள், சுத்தமான காற்று, போட்டோ எடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டதுபோன்ற இடங்கள் என கிண்ணக்கோரை எங்கள் மனங்களை கொண்டாட்ட மூடுக்கு மாற்றியது. அங்கே ஓரு வியூ பாயின்ட். கெட்டை அணைக்கட்டு, வாட்டர்ஃபால்ஸ், பவர்ஹவுஸ் என இடமே செம மெர்சலாக இருந்தது. அதில் இருந்து ஒரு வின்ச். இதை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என யோசித்தால், 'முள்ளும் மலரும்' படத்தில் சரத்பாபுவை ரஜினி வெச்சு செய்யும் இடம். ஒரு மலையின் உச்சியில் இருந்து இன்னொரு மலையின் உச்சியைப் பார்ப்பது எவ்வளவு பெரிய பேரானந்தம்.
கெட்டை அணையில் இருந்து கெட்அவுட் ஆகி திரும்பி மாஞ்சூர் வந்து, பெட்ரோலை நிரப்பிவிட்டு, ஒரு சின்னக்கடையில் மதிய உணவையும் முடித்துவிட்டு கீழே இறங்கினோம். வழியெங்கும் யானைகளின் சாணம். வழிப்போக்கர்களிடம் கேட்டபோது யானைகள் இந்த வழியாகத்தான் போய் கீழே இருக்கும் அணைகட்டில் தண்ணீர் அருந்தும் என்றார்கள். புதிதாக சாலைகள் போட்டிருக்கிறார்கள். இது தமிழ்நாடு ரிசர்வ் வனப்பகுதி என்பதால் முன் அனுமதி வாங்கவேண்டுமாம். அது தெரியாமல் கீழே இறங்க செக்போஸ்ட்டில் கேள்வி மேல் கேள்வி. "எங்கயிருந்து வர்றீங்க?", "ஏன் இப்படி வர்றீங்க?", "யானைகள் நடமாடும் வழியில் நீங்க ஏன் வந்தீங்க?" எனப் பல கேள்விகள். வாய் உள்ள பிள்ளை தப்பிப் பிழைக்கும் என்பதால் என்னென்னவோ சொல்லி அவர்களின் கேட்டைக் கடந்தோம்.
அப்படியே சேலம் கடந்து, கள்ளக்குறிச்சியில் இரவு உணவை முடித்துவிட்டு உளுந்தூர்பேட்டை வழியாகச் சென்னை வந்தோம். மனதிற்கு ஏதோ ஒரு நிம்மதி கிடைத்த ஒரு ஃபீல்... அந்த ஃபீலிங்கிற்காகத்தானே இந்தப் பயணங்கள்!
பயணச்செலவு!
பெட்ரோல்: ரூ. 3500 (ஒரு பைக்கிற்கு)
தமிழ்நாடு ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்: ரூ. 1200
ஒருநாளுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், தின்பண்டங்கள்: ரூ. 2000
source https://www.vikatan.com/lifestyle/travel/bike-ride-to-ooty-kinnakorai-kilkundha-melkundah-geddai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக