விழுப்புரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய தொல்.திருமாவளவன், ``இந்தத் தேர்தல், அரசியல் அதிகாரத்துக்கான போரல்ல. `ஜனநாயகத்தின் கருத்தியல் போர்’ எனும் கொள்கை முழக்கத்தோடு தி.மு.க-வுடனான கூட்டணியில் நாங்கள் நிற்கிறோம். 'சனாதனத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்!' என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் வி.சி.க விடுக்கும் அறைகூவல். தமிழ் மண்ணில் சாதி உணர்வை வளர்த்து, மத உணர்வை தூண்டி மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலும் பா.ஜ.க-வின் உள்நோக்கத்தை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே என்னுடைய கொள்கை.
சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை தன் மூச்சாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பா.ஜ.க-வின் மூலம் பெரும்பான்மையை முன்னெடுக்கிறது மதத்தின் பெயரால். பெரும்பான்மையினர், சிறுபான்மையினராக உள்ளவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் சிறப்பம்சம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறது. இதையே தன் செயல் திட்டமாகக் கொண்டுள்ளது. அவற்றை நடத்துவதற்காகவே பா.ஜ.க இருக்கிறது.
Also Read: "குனிந்து போகும் அளவுக்கு பலவீனம் இல்லை" - 'தோழமை சுட்டுதல்' குறித்து திருமா!
இந்தியா முழுவதும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. 'மத உணர்வை வளர்க்க வேண்டுமானால், சாதி உணர்வை ஊட்ட வேண்டும்' என்பது அவர்களுடைய யுத்திகளில் ஒன்று. சாதியின் அடிப்படையில் இந்து சமூகத்தை பிளவு படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இந்திய சமூகத்தையே பிளவுபடுத்துகிறார்கள்!. இதுதான் அவர்களுடைய உயிர்மூச்சு.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களால் தமிழகத்தினுள் வர முடியவில்லை. காரணம் கலைஞர் மற்றும் ஜெயலலிதா எனும் இரு செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் இரு துருவங்களாக இருந்ததுதான். இன்று அவர்கள் இருவரும் இல்லாததால் அ.தி.மு.க முதுகில் ஏறி சவாரி செய்து, மதவாத அரசியலை நிலைநாட்டி விடலாம் என்று களமிறங்கியுள்ளனர். மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை என்பதே தி.மு.க அணியில் உள்ள கட்சிகளின் நோக்கம். பா.ஜ.க ஒட்டுமொத்த நாட்டையே தனியார் மயமாக்க முடிவெடுத்துள்ளது. அதன் பினாமி அ.தி.மு.க, அந்த அணிக்கு தலைமை தாங்குகிறது. அ.தி.மு.க-வை வீழ்த்துவது முதன்மையான சவால் அல்ல. பா.ஜ.க-வை ஒரு சக்தியாக இங்கு அணிதிரள விடக்கூடாதென்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு சவால்" என்றார்.
பின், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த தொல்.திருமாவளவன்,``அ.தி.மு.க-வின் கூட்டணி ஒட்டுமொத்த தமிழ் தேசத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி. இது முறியடிக்கப்பட வேண்டுமென மக்களிடம் கேட்கிறோம். பா.ஜ.க-வை முன்னிறுத்தி அதையே தி.மு.க கூட்டணியின் போட்டிக் கட்சி என நினைத்து இந்த தேர்தலை ஒரு கருத்தியல் யுத்தமாகவே பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தித்தரும் பணியை மட்டுமே செய்கிறது. முறைகேடுகளையோ, விதிமுறைகளுக்கு புறம்பாக நடக்கும் ஆளும் கட்சியினரை கைது செய்ய தேர்தல் ஆணையத்தால் முடியாது. அப்பாவி மக்களின் சிறு தொகையை பறிப்பதையே அவர்களின் தேர்தல் பணியென நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவே உள்ளது. அதை கட்டுப்படுத்தும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. கருத்து கணிப்புகள் எங்களுக்கு சாதகமாகவே கூறப்பட்டாலும் நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavan-speaks-about-rss-bjp-in-villupuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக