மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கடந்த மாத இறுதியில் கார் ஒன்று கண்டுபிடிக்கபட்டது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த சதிச் செயலில் தொடர்புடையவராக கூறப்படும் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சச்சினிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் மும்பை பப்கள்,பார்கள் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் 100 கோடி ரூபாய் லஞ்சத்தை வசூலித்து கொடுக்க வற்புறுத்தியதாக, பணியிட மாற்றம் செய்யப்பட மும்பை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதினார். இதைக் காரணம் காட்டி மகாராஷடிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது.
5 ஸ்டார் ஹோட்டலில் ரகசிய பிளான்
வெடிகுண்டு நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டதற்கு சில நாள்களுகு முன் போலீஸ் அதிகாரி சச்சின், தெற்கு மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் ஐந்து நாட்கள் தங்கி இருந்து திட்டம் தீட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். அந்த பெண் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. சச்சின் அந்த பெண் குறித்த தகவலை கூற மறுப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகளில் பெண்ணின் முகம் சரியாக பதிவாகவில்லை. ஆனால் அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அவரைப் பிடிக்கும் பணியில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக இருக்கிறது.
ஹோட்டலில் அறை முன்பதிவு செய்வதற்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அடிக்கடி சச்சின் தனது மொபைல் நம்பர்களை மாற்றிக்கொண்டே இருந்ததும் தெரியவந்திருக்கிறது.
கையில் இருந்த 5 பேக்குகள்:
ஹோட்டலுக்கு வரும்போது சச்சின் தன்னுடன் ஐந்து பேக்குகளை எடுத்துச் சென்றுள்ளார். அதில் என்ன இருந்தது, அந்த பேக்குகள் இப்போது எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. முகேஷ் அம்பானி இல்லத்திற்கு வெளியில் நின்ற கார் தானேவைச் சேர்ந்த மன்ஷுக் ஹெய்ரன் என்பவருக்கு சொந்தமானது. வெடிகுண்டுகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்ட சில நாட்களில் ஹெய்ரன் கடலில் பிணமாக செத்து மிதந்தார். அவரது கொலையிலும் போலீஸ் அதிகாரி சச்சினுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஹெய்ரன் தனது காரை காணவில்லை என்று போலீசில் புகார் செய்திருக்கிறார். இது நடந்த மறுநாள்தான் சச்சின் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருக்கிறார். அந்த ஐந்து நாட்களில் சச்சினை சிலர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர் என்பதும் சி.சி.டி.வி-யில் பதிவாகியிருக்கிறது.
Also Read: மகாராஷ்டிரா: அரசுக்கு எதிராகத் திரும்பிய அடுத்த போலீஸ் அதிகாரி - கடும் நெருக்கடியில் சிவசேனா அரசு!
இதற்கிடைய சச்சினை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தன் மீது வீண்ப்பழி சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், சச்சின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி, போலீஸ் காவலை நீட்டிக் வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு நீத்மன்றத்திடம் கோரியது. அதனை ஏற்று வரும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சச்சினை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை முன்னாள் கமிஷ்னர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ள ரூ100 கோடி லஞ்சப் புகாரில், அனில் தேஷ்முக்குக்கு எதிராக சச்சினிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வாக்குமூலம் பெற முயன்று வருகின்றனர். ஆனால், சச்சின் அவ்வாறு வாக்குமூலம் கொடுக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பரம்பீர் சிங் வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன்பாக சச்சினிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதில் அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/politics/sachin-vaze-stayed-with-women-in-5-star-hotel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக