திரைத்துறையில் அழகுக்கு இலக்கணம் வகுத்த எவர்கிரீன் நாயகிகளில் முக்கியமானவர் நதியா. 1980-களில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக ஜொலித்தவர், குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விலகினார். இரண்டாவது இன்னிங்ஸில் செலக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது மீண்டும் பிஸியாகியிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து நடித்துவருபவர், மலையாளத்தில் பெரும் ஹிட்டாகியுள்ள `த்ரிஷ்யம் 2' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.
தெலுங்கு `த்ரிஷ்யம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், இரண்டாம் பாகத்திலும் அதே ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும் அனுபவம் முதல் பர்சனல் வரை பல்வேறு விஷயங்கள் குறித்தும் நதியாவிடம் பேசினோம்.
``80'ஸ்ல வெறும் நாலு வருஷங்கள் மட்டுமே சினிமாவில் நடிச்சேன். அந்த இடைப்பட்ட காலத்துலயே ரசிகர்கள் என் மேல அளவுகடந்த அன்பைக் காட்டினாங்க. சினிமாவில் தொடர்ந்து நடிக்கணும் புகழ்பெறணும்னு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்ல. அப்போ காதலிச்சுகிட்டும் இருந்தேன். சினிமாவா, கல்யாண வாழ்க்கையானு வந்தபோது காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். உடனே கல்யாணம், அமெரிக்கா வாழ்க்கைனு வருஷங்கள் ஓடிடுச்சு. அந்த 16 வருஷ வாழ்க்கையை அவ்ளோ ரசிச்சு அனுபவிச்சேன்.
Also Read: ``ஓடாதுன்னு சொன்ன சிலபேர்; எக்ஸ்ட்ரா 50 நாள் ஓடும்னு சொன்ன அவர்..!" - மோகன் ராஜா #15YearsOfMKumaran
இந்த நிலையிலதான் இயக்குநர் மோகன் ராஜா என்னைச் சந்திச்சார். அப்போ நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. அவர் பார்வையில நான் ரொம்பவே இளமையா தெரிஞ்சிருக்கேன் போல. `நதியா மேடத்தோட தங்கையா நீங்க? அவங்கள மாதிரியே இருக்கீங்க'ன்னு கேட்டார். ரொம்ப நேரம் சிரிச்சேன். பின்னர், `எம்.குமரன்' படத்துல என்னை நடிக்க வைக்க ரொம்பவே போராடினார். ஜெயம் ரவிக்கும் எனக்குமான அம்மா - புள்ளை கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு. அந்தப் படத்துக்குக் கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்து, செலக்ட்டிவ்வா மட்டும் நடிக்கிறேன்.
கடவுள் புண்ணியத்துல நல்ல கணவர், மகள்கள், குடும்ப வாழ்க்கைனு சந்தோஷமா இருக்கேன். அதனால, கிடைக்கிற ஓய்வு நேரத்துல மனசுக்குப் பிடிச்ச படங்கள்ல மட்டும் நடிக்கிற முடிவுல இப்ப வரை உறுதியா இருக்கேன். பணம், புகழ் சம்பாதிக்கிறதுல எனக்குப் பெரிசா விருப்பம் இல்ல. அந்த வகையில, கடந்த சில வருஷங்களாவே தெலுங்குல நல்ல கதைகள் வரவே அதுல மட்டும் நடிச்சுகிட்டு இருக்கேன். நான் நடிச்ச `அந்தரன்டிகி தாரேதி' தெலுங்குப் படத்துல என்னோட நடிப்பைப் பார்த்துதான், `த்ரிஷ்யம்' தெலுங்குப் படக்குழுவினர் அந்தப் படத்துல என்னை கமிட் செய்தாங்க.
அப்போதான் `த்ரிஷ்யம்' மலையாளப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படமும் பெண் போலீஸ் அதிகாரி ரோலும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. உடனே நடிக்க சம்மதம் சொல்லிட்டேன். இதுவரை நான் நடிச்சதுலயே, அந்த போலீஸ் ரோல்தான் கொஞ்சம் நெகட்டிவ்வா தோணும். ஆனா, அந்த அம்மா ரோல்ல இருந்து பார்த்தா, மகனோட மரணத்துக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் தாயின் பாசப் போராட்டமா இருக்கும். எனவேதான், அந்த வித்தியாசமான ரோல்ல உற்சாகமா நடிச்சேன்.
என் கரியர்ல பெண் இயக்குநர் படத்துல நடிச்சதில்லை. அந்த ஆசையும் நிறைவேறுச்சு. சினிமா துறையில நடிகை ஶ்ரீப்ரியா மேடம் எனக்கு சீனியரா இருந்தாலும், அவங்க கூட அதுக்கு முன்பு பழக வாய்ப்பு கிடைக்கல. அந்தப் படத்தோட இயக்குநரான ஶ்ரீப்ரியா மேடம் என்கூட ஃபிரெண்ட்லியா பழகினாங்க. எல்லாக் கலைஞர்கள்கிட்டயும் அழகா வேலை வாங்கினாங்க. அந்தப் படம் பெரிய ஹிட்டாகி எனக்கு நிறைவைக் கொடுத்தது" என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், `த்ரிஷ்யம் 2' அனுபவங்களைப் பகிர்ந்தார்.
``வெற்றியடைஞ்ச ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சவாலானது. அந்தப் பொறுப்பை `த்ரிஷ்யம் 2' படக்குழுவினர் நேர்த்தியா செஞ்சிருக்கிறாங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இரண்டாம் பாகம் சரியா பூர்த்தி செஞ்சிருக்கு. கதையும் திரைக்கதையும்தான் இந்த ரெண்டு பாகங்களின் வெற்றிக்குக் காரணம். ரெண்டாம் பாகம் ஓ.டி.டி தளத்துல ரிலீஸ் ஆன நாளே நானும் ஆவலுடன் படத்தைப் பார்த்தேன். எனக்கும் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. ஆனா, இந்தப் படத்தின் ரெண்டாம் பாகம் தெலுங்கிலும் தயாராகும்னு நான் எதிர்பார்க்கவேயில்ல. அது மிக விரைவாகவே நடந்திருக்கு.
`த்ரிஷ்யம்' தெலுங்குப் படத்துல நடிச்ச நடிகர்களேதான், இரண்டாம் பாகத்துலயும் நடிக்கிறோம். ஸ்பெஷல் மென்ஷனா, மலையாளத்துல முதல் இரண்டு பாகங்களை இயக்கின ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரெண்டாம் பாகத்தையும் இயக்குறார். இவர்கூட நான் முதல் முறையா வேலை செய்றேன். அவருக்கும் எனக்கும் கேரளாதான் பூர்வீகம்ங்கிறதால, மலையாளத்துலயே பேசிக்கிறோம். ஷூட்டிங் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்தான் ஆகுது. சிறப்பான முறையில வேலைகள் நடக்குது. மக்களைப் போலவே நானும் இந்தப் படத்தை ஸ்கிரீன்ல பார்க்க ஆவலா இருக்கேன்.
இதுபோன்ற நல்ல கதையம்சம் கொண்ட வெவ்வேறு மொழி படங்கள்ல நடிக்க ரொம்பவே ஆசையுண்டு. எனக்குத் தமிழ்நாட்டுலதான் அதிக ரசிகர்கள் இருக்காங்க. தமிழ்ல மீண்டும் நடிக்க ஆசை இருந்தாலும், பத்து வருஷங்களுக்கு மேல அந்த எண்ணம் நிறைவேறல. நல்ல கதைகள் வந்தால் நிச்சயமா தமிழ் சினிமாவிலும் நடிப்பேன். இன்றைய காலகட்டத்துல கன்டென்ட்தான் ரொம்ப முக்கியம். அதன்படி நல்ல வாய்ப்புகள் வந்தா, உடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பத்தி எந்த ஆட்சேபனையும் எனக்கில்ல" என்கிற நதியாவிடம், பியூட்டி சீக்ரெட் கேட்காமல் பேட்டியை நிறைவு செய்ய முடியுமா?
அந்தக் கேள்விக்கும் புன்னகையுடன் பதிலளித்தவர், ``உண்மையான அழகுங்கிற மனசைப் பொறுத்தது. என் கணவர் நல்லா சம்பாதிக்கிறார். எதிர்கால வாழ்க்கைக்கு ஓரளவுக்குச் சேமிச்சு வெச்சிருக்கிறதால, நாளைக்கான வாழ்க்கை பத்தி இன்னைக்கு யோசிக்க மாட்டேன். ஒவ்வொரு நாளும் என்ன நடந்தாலும் அதை ஏத்துப்பேன். எதிர்காலம் பத்தின கவலைகள் இல்லைனாலே, மனசுல எந்தக் கவலையும் இருக்காது. இது எல்லோர் வாழ்க்கைக்கும் ஒத்து வராதுன்னாலும், முடிஞ்ச வரைக்கும் எல்லோருமே கவலைகள் இன்றி வாழப் பழகுவோம். தவிர, மத்தவங்க வாழ்க்கையில நடக்கிற பர்சனல் விஷயங்களை நான் கண்டுக்கவே மாட்டேன். என் பெற்றோரின் மரபணு, நேரத்துக்குச் சரியான சாப்பாடு, உடற்பயிற்சி, பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்துற ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கிய காரணங்கள்.
Also Read: ``நைனிகா ரொம்பவே வளர்ந்துட்டா; அவளுக்கான நேரம் போகத்தான் நடிப்பேன்!" - நடிகை மீனா ஷேரிங்ஸ்
இதுபோன்ற நல்ல விஷயங்கள்தான் என்னோட பியூட்டிக்கு காரணம்னு நினைக்கிறேன். கூடவே, வயசுக்கு ஏத்த முதிர்ச்சியை நான் ஃபீல் பண்றேன். மத்தவங்க பார்வைக்கு நான் இளமையா தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷம். நடிப்பு என்னோட பார்ட் டைம் வேலை மாதிரிதான். இல்லத்தரசி, மனைவி, அம்மாங்கிற ரோல்கள்தான் எனக்கு முதன்மையானவை. என்னோட பெரிய பொண்ணு சனம் படிப்பு முடிஞ்சு அமெரிக்காவுல வேலை செய்யுறா. அங்கயே ரெண்டாவது பொண்ணு ஜனா காலேஜ் படிக்கிறா. அவங்களுக்கு சினிமா துறைமேல ஆர்வம் இல்ல. அவங்களுக்குப் பிடிச்ச துறையில வேலை செய்ய நானும் என் கணவரும் ஊக்கம் கொடுப்போம்" என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-nadhiya-speaks-about-drishyam-2-movie-and-her-future-plans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக