Ad

செவ்வாய், 23 மார்ச், 2021

30 பந்துகளில் 60 ரன்கள்... ஷெஃபாலி வெர்மா எனும் 17 வயது சூறாவளி!

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 போட்டியில் 30 பந்துகளில் 60 ரன்கள் அடித்து மிரட்டியிருக்கிறார் இளம் இந்திய வீராங்கனை ஷெஃபாலி வெர்மா. 7 பவுண்டரி, 5 சிக்ஸர் என தென்னாப்பிரிக்க பௌலர்களை அடித்து விளாசியிருக்கிறது இந்த 17 வயது சூறாவளி! இப்போது உலகின் நம்பர் டி-20 பேட்ஸ்வுமனாகவும் மாறியிருக்கிறார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் டி-20 தொடரின் முதல் 2 போட்டிகளையும் வென்றிருந்தது தென்னாப்பிரிக்கா. மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையோடு இறங்கிய இந்திய வீராங்கனைகள் தென்னாப்பிரிக்க அணியை 112 ரன்களுக்குள் சுருட்டினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஷெஃபாலியின் வெறித்தன ஆட்டத்தால் 11 ஓவர்கள் முடிவிலேயே வெற்றி பெற்றுவிட்டது.

shafali verma

முதல் ஓவரின் முதல் பந்தையே சேவாக் போல் பவுண்டரிக்குப் பறக்கவிட்டுத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார் ஷெஃபாலி. அடுத்த பந்தில் சிக்ஸர். அதுபோக, இன்னும் 2 பவுண்டரிகள் என முதல் ஓவரிலேயே 18 ரன்கள் விளாசினார். அதற்கடுத்தும் தன் ருத்ரதாண்டவத்தைத் தொடர்ந்த அவர், 25 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.

ஷப்னம் இஸ்மாய்ல், நதீன் டி கிளர்க் போன்ற அனுபவ பௌலர்களைப் பந்தாடினார். சங்கீஸி, ஷேகுகுனே போன்ற இளம் பௌலர்களையும் பொளந்து கட்டினார். சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பொழிந்துகொண்டே இருந்தன. இறுதியில் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழிந்தார். 11-வது ஓவரிலேயே வெற்றி பெற்றது இந்திய அணி. 3 போட்டிகளில் 130 ரன்கள் குவித்த ஷெஃபாலி தொடரின் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது இந்த இன்னிங்ஸை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழ்ந்துகொண்டிருக்கிறது. “ஷெஃபாலியின் இந்த அற்புத இன்னிங்ஸை தவறவிட்டுவிட்டேனே” என்று ட்வீட் செய்திருக்கிறார் ஹர்ஷா போக்ளே. “இந்த அட்டகாசமான ஃபார்மைத் தொடருங்கள். மகளிர் ஐ.பி.எல் போட்டிகளின்போது உங்களைக் காண ஆர்வமாக இருக்கிறேன்” என்று பாராட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் லீசா ஸ்தாலேகர். இவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் அணியிலும் இவருக்கு இடம் தரப்படவேண்டும் என்று கூறுகிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

17 வயதான ஷெஃபாலி வெர்மா ஹரியானாவைச் சேர்ந்தவர். 2019-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 15 தான். இதன்மூலம் இந்திய அணிக்கு இளம் வயதில் அறிமுகம் ஆனவர் என்ற சாதனையைப் படைத்தார். சில மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்து, இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். 2020 மகளிர் டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்ததும் இவர்தான். பெண்கள் ஐ.பி.எல் தொடரில் வெலாசிடி அணிக்காக விளையாடிவருகிறார்.



source https://sports.vikatan.com/cricket/shafali-vermas-quickfire-50-sunk-south-africa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக