Ad

திங்கள், 15 மார்ச், 2021

மதுரை: யானை கட்டி போரடித்த வைரல் வீடியோ... உண்மை என்ன தெரியுமா?

'யானை' ஆக்ரோஷமான விலங்கு, மனிதனைத் துன்புறுத்தக் கூடியது என்றெல்லாம் தவறான நம்பிக்கைகள் நம்மிடையே பரவிக்கிடக்கின்றன. ``மனிதனின் தவறான அணுகுமுறையும், சுயநலமும்தான் யானை போன்ற சாதுவான விலங்குகளையும் கோபமுறச் செய்கிறது என்ற விழிப்புணர்வு பரவாமல் கிடக்கிறது. ஆனாலும் அதனை விடா முயற்சியாக செய்துவரும் சமூக ஆர்வலர்களையும் பார்க்கவே முடிகிறது. அப்படியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருபவர் தான் மதன் பாபு. அவரது சுட்டி யானை சுமதி மதுரையில் பிரபலமானது. பேஸ்புக், யூ-டியூப்களிலும் டிரெண்டிங்கான ஒன்று.

யானை கட்டி போரடிக்கும் விவசாயி

’பணியறிஞ்ச ஆனை’ என்று கேரளாவில் சொல்வார்கள். அப்படியான யானை தான் சுமதி. தனது சுட்டித் தனத்தை காட்டினாலும் வேலை என்று வந்து விட்டால் வெள்ளைக் காரன் என்பது போல் செய்து முடிப்பாள். பல்வேறு பணிகளும் தெரிந்த சுமதிக்கு தற்போது சூடடிக்கும் வேலையையும் முதற்கட்டமாக கற்றுக் கொண்டுள்ளது. சுமதி யானை மதுரை மேலூர் புலிப்பட்டி பகுதியில் நெற் கதிர்களை சூடடிக்கும் வீடியோ காட்சி வைரலானது. நேரில் காணக் கிடைக்காத அந்த காட்சியை பலரும் இணையத்தில் ஷேர் செய்தனர். சொன்னதை அடம்பிடிக்காமல் கேட்டு அதன்படி பணிசெய்யும் அறிவுமிக்க 'பணியறிஞ்ச' யானையாகவும் பார்க்கப்படும் சுமதி குழந்தைகளின் பேவரைட். தன்மீது அன்பும் அக்கறையும் ஆர்வமும் கொண்டு தன்னை நெருங்கும் எவருக்கும் சுமதி அடங்கிப்போகிறது. சிறுகுழந்தையின் கட்டளைகளுக்கும் செவி மடுக்கின்றது, இந்தப் பணியறிஞ்ச யானை.

கடும் வெயில் சுற்றி அடித்தாலும் குளு, குளு தென்னந்தோப்பில் டாப் அடித்துக்கொண்டிருந்தது சுமதி. யானை குறித்து மதன் பாபுவிடம் பேசினோம்.

"சுமதி எங்களது வளர்ப்பு யானை. நாங்கள் ஏறக்குறைய 4 தலைமுறையாக யானைகளை வளர்த்து வருகிறோம். புலிப்பட்டி கிராமத்தில் உள்ள எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெற் கதிர்கள் அறுவடை செய்திருந்தோம். அப்போது எங்களின் சுமதியைக் கொண்டு சோதனை முயற்சியாக நெற் கதிர்களை சூடடித்தோம். சில நிமிடங்கள் மட்டும் தான் சுமதி சுற்றிவந்தது. ஆனால் அதன் வீடியோ பலரையும் சென்றடைந்துள்ளது. மதுரையின் சங்ககால இலக்கிய காட்சியை கண் முன்னே கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று பார்த்ததின் விளைவு தான் இந்த வீடியோ. இந்த யானையை வைத்து போரடிக்கவில்லை. வெறும் முயற்சி மட்டும் தான் மேற்கொண்டோம். சுமதி மேய்ச்சலில் ஈடுபட தனி இடம் எங்களிடம் உள்ளது. சுமதிக்கு விளைக்கும் உணவுகள் மட்டும் இயற்கை முறையில் செய்கிறோம். சுமதி எங்கள் செல்லம்" என்று யனையை கொஞ்சிக் கொண்டார்.

சுமதி யானை

சமூகத்தில் விலங்குகள் குறித்த அறியாமையும், அவை குறித்த மூடநம்பிக்கைகளும் அதிகம். பூனை, பாம்பு, யானை, குரங்கு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் யானைகள் குறித்து மக்களிடம் நிலவும் பொய்யான நம்பிக்கைகளை உடைப்பதற்காகவும், யானைகள் குறித்து மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்களுக்குப் பயிற்சிமுகாம் மதன்பாபு நடத்திவருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/agriculture/the-truth-behind-the-viral-video-which-madurai-elephant-baling-on-the-paddy-field

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக