Ad

வியாழன், 18 மார்ச், 2021

மித்தாலி ராஜ்... மகளிர் கிரிக்கெட்டின் ராஜமாதா... ரன் மெஷின்... இன்ஸ்பிரேஷன்!

மித்தாலி ராஜ்... இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகி. 1999-ல் தடதடக்கத் தொடங்கிய இந்த ரன் மெஷினின் ரெகார்ட்டுகள் இன்னமும் அப்டேட் ஆகிக்கொண்டேயிருக்கிறது. மகளிர் சர்வதேசக் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீராங்கனை, இந்தியாவின் முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் மித்தாலி.

மித்தாலிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்டரான சார்லோட் எட்வர்டு, இந்தச் சாதனையை முதலில் படைத்திருந்தார். அவருக்கு இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் பெண் மித்தாலிதான். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். உலக அளவில் இந்தச் சாதனை படைத்த ஒரே பெண் கிரிக்கெட்டர் மித்தாலி மட்டுமே.

பாண்டிச்சேரியைப் பூர்வீகத்தைக்கொண்ட தமிழரான மித்தாலி ஜோத்பூரில் பிறந்தவர். சிறுவயதில் பரதநாட்டியம், சிவில் சர்வீஸ் தேர்வின் மீதும்தான் அவரது விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால், தந்தை துரைராஜின் தூண்டுதலால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவருக்கு, நாட்கள் நகர நகர, கிரிக்கெட் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகமானது. முழுநேரக் கிரிக்கெட்டராக, உள்ளூர் கிரிக்கெட்டில் ரெயில்வேஸுக்காக ஆடத் தொடங்கினார், அதுவும் மிகச் சிறப்பாக!

மித்தாலி ராஜ்

97-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பையில் விளையாடும் உத்தேச அணியில், அவரது பெயர் இடம் பெற்ற போது, அவருக்கு வயது வெறும் 14-தான். எனினும், இறுதியாக உறுதி செய்யப்பட்ட அணியில், அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அவர் காத்திருத்த அந்தத் தருணம், 1999-ம் ஆண்டு ஐயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கிடைக்க, அறிமுகப் போட்டியையே சதத்தோடுதான் ஆரம்பித்தார் மித்தாலி. பதினாறே வயதில், 114 ரன்களை, அதிலும் அறிமுகப் போட்டியிலேயே அடித்த, மித்தாலியின் மீதுதான் எல்லாக் கண்களும் இருந்தன.

2001-ல் தென்னிந்திய ரயில்வேயில் பணியில் அமர்ந்த பின்பு, பயிற்சியாளர் சம்பத் அவர்களது நேரடிப் பயிற்சியின் கீழ் ஆடத் தொடங்கிய மித்தாலி, அதன்பின், ரயில்வேஸ் அணியின் பிரத்யேகப் பயிற்சியாளர், ஆர்எஸ்ஆர் மூர்த்தி அவர்களது வழிகாட்டுதலுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். 20 ஆண்டுகளாக பயிற்சியாளராக, மித்தாலியுடன் பயணிக்கும் மூர்த்தி, மித்தாலியின் அர்ப்பணிப்புதான், கிரிக்கெட்டில் அவரை, பல சிகரங்களைத் தொட வைத்திருக்கிறது என்கிறார்.

கிரிக்கெட் மேலுள்ள ஆர்வம் உந்தித் தள்ள, ஒருநாள்கூட, பயிற்சியை மித்தாலி தவற விட்டதில்லை. ஐதராபாத்திலோ அல்லது என்சிஏவிலோ, ஏதோ ஓரிடத்தில் அவரது பயிற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இன்றுவரை. அந்த உத்வேகம்தான், ஓய்வில்லா வீராங்கனையாக 23 ஆண்டுகளாக 22 யார்டில், 21 நபர்களோடு தொடர்ந்து பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியக் பெண்கள் கிரிக்கெட்டில் 20 வருடங்களைக் கடந்த முதல் பெண் மித்தாலி ராஜ்தான். உலக அளவில், இந்த சாதனையை ஏற்கனவே சார்லட் எட்வர்ட்ஸ் நிகழ்த்தி இருந்தாலும், 20 வருடத்தையும் தாண்டி, ஓடிக் கொண்டிருப்பது மித்தாலி எனும் அதிவிரைவு வண்டி மட்டுமே.

மித்தாலி ராஜ்

டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான பங்கை ஆற்றி இருக்கிறார், மித்தாலி. 23 ஆண்டு பயணத்தில் பல மைல்கற்களிலும், தனது பெயரை எழுதிக் கொண்டே வந்துள்ளார். 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 214 ரன்களை எடுத்திருந்தார் மித்தாலி. வீராங்கனை ஒருவர், ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக, அது இருந்தது. இந்தச் சாதனையை நிகழ்த்தும் போது, மித்தாலியின் வயது வெறும் 19 தான். குறைந்த வயதில், அனுபவம் வாய்ந்தவர்கள் ஜொலிக்கும் டெஸ்ட்டில் சாதித்ததைப்போல சமீபத்தில் இன்னொரு சாதனையும் செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது 36-ம் வயதிலும், இளையவர்கள் சாதிக்கும் டி20-லும், மலேசியா அணிக்கு எதிரான போட்டியில், 69 பந்துகளில் 97 ரன்களைக் குவித்து, எந்த வயதிலும் தன்னால் எதுவும் முடியும் என நிரூபித்தார்.

இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள மித்தாலி, அதில் 663 ரன்களைக் குவித்துள்ளார். பத்து போட்டிகள் என்பது மிகக் குறைவான எண்ணிக்கையாகத் தோன்றலாம். பெண்கள் கிரிக்கெட் சந்திக்கும் இன்னொரு இடர்பாடு இது. பிசிசிஐ-தான் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்துகிறது. ஆனால், டிவி ரைட்ஸ், ஸ்பான்சர்ஷிப் கிடைக்காதது, பார்க்கக் கூட்டம் வருவதில்லை போன்ற தடைகள் காரணமாக பிசிசிஐ மகளிர் டெஸ்ட் போட்டிகளை நடத்த பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

சார்லோட், 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1118 ரன்களைக் குவித்துள்ளார். எனினும், அவரது பேட்டிங் சராசரி வெறும் 44. மித்தாலியுடையதோ 51. ஆட்டத்திறமை, விளையாட்டு நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள உதவும், பல்கலைக்கழகமாகத் திகழும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடித் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, இந்தியாவில், பெண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, குறைவாகவே உள்ளது.

மித்தாலி ராஜ்

அது மாற்றப்பட்டு, டெஸ்ட் கிரிக்கெட் உயிரோட்டம் உடையதாய் மாற்றப்பட வேண்டியது மிகமிக அவசியம். இந்த வருடம், அந்த நிலை மாறி, பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் நடக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொன்னபடி நடந்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அனுபவம் ஆதிக்கம் செலுத்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் பத்து போட்டிகளுக்கு மேல் தனது பேட்டைப் பேச வைக்க முடியவில்லையே தவிர, இளரத்தம் பாய்ச்சப்படும் டி20 கிரிக்கெட்டில், மித்தாலியின் வெற்றி நடை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. மொத்தம், 29 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள மித்தாலி, 2,364 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், டி20-ல் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் உலகில் முதல் நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெத் மூனேயின் பேட்டிங் சராசரி 34.33 என்றால், மித்தாலியின் பேட்டிங் சராசரியோ, 37.52. மேலும், 17 அரைச்சதங்களையும் இந்த ஃபார்மேட்டில் மித்தாலி அடித்துள்ளார். 37 வயதுவரை, டி20 போட்டிகளில் விளையாடிய மித்தாலி, 2019-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, டி20 போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார்.

Also Read: `ரன் மெஷின்' Retrieved... கிங் கோலி இஸ் பேக்!

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில், மித்தாலி சாதித்ததை விட, ஒருநாள் போட்டிகளில் சாதித்ததுதான் மிக அதிகம். தனக்குப் பிடித்த ஃபார்மேட்டாக, மித்தாலி குறிப்பிடுவதும் இதைத்தான். அனைவரும் வியக்கும்படி, 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே வீராங்கனை மித்தாலியே! கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரே நடைபெற்ற போட்டியில் 7,000 ரன்களையும் தாண்டினார். இவருக்கு அடுத்தபடியாக, ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்ட சார்லோட் 5,992 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில், தொடர்ச்சியாக, ஏழு போட்டிகளில் அரை சதமடித்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டினார், மித்தாலி. யுவராஜ், ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் அடித்தது பேசப்பட்டதைப் போல, இதுவும் அப்போது பேசுபொருளானது. மித்தாலியின் கரியரில் மிக முக்கியமான வருடமென்றால், அது 2006-ம் ஆண்டுதான்.

மித்தாலி ராஜ்

அந்த வருடம், 23 போட்டிகளில் விளையாடிய அவர், 684 ரன்களைக் குவித்தார். ஒரு ஆண்டில், அவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக இதுவே இருக்கிறது. இதுவரை 7 சதங்களையும், 54 அரை சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் விளாசியுள்ள மித்தாலி, இன்னமும் என் ஆட்டம் முடியவில்லை என தொடர்ந்து ஓடிக் கொண்டேதான் இருக்கிறார். குறைந்த முறை டக் அவுட் ஆன வீராங்கனை, டக் அவுட் ஆகாமல் தொடர்ந்து 74 போட்டிகளில் விளையாடிவர், 90 ரன்களில் அதிகமுறை ஆட்டமிழந்த வீராங்கனைகளில் ஒருவர் என, ஒருநாள் போட்டிகளில் அவரது சாதனைகள் பற்றிப் பேசத் தொடங்கினால், பக்கங்களை பத்திகளால் நிறைத்துக்கொண்டே இருக்கலாம்.

இந்திய அணியின் கேப்டனாக, 2005-ம் ஆண்டு முதல் இருந்து வரும் மித்தாலி, இதுவரை ஐந்து 50 ஓவர் உலகக் கோப்பைகளில் பங்கேற்றிருக்கிறார். அதில் 50 ஓவர் உலகக் கோப்பையில், நான்கு முறை அணியை வழிநடத்தி, அதில் இரண்டு முறை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்று, நூலிழையில் கோப்பை வாய்ப்பைத் தவற விட்டார். அடுத்த வருடம் வர இருக்கும் உலகக் கோப்பைக்காகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார், மித்தாலி.

சச்சினை தனக்குப் பிடித்த வீரராகவும், பான்டிங்கைத்தான் விரும்பும் கேப்டனாகவும் குறிப்பிடும் மித்தாலி, அவர்கள் இருவரும் படைத்த சாதனைகளைப் போன்றே, தானும் பல உயரங்களை அடைந்து கொண்டிருக்கிறார்.


source https://sports.vikatan.com/cricket/the-inspiring-journey-of-mithali-raj-and-her-astounding-records

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக