Ad

திங்கள், 1 மார்ச், 2021

தேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்!’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்

சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஓ.பி.எஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ’‘கட்சிக்கும் ஆட்சிக்கும் பொதுமக்களிடம் நல்ல பெயர் உள்ள இத்தருணத்தில், சட்டமன்ற தேர்தல் நடைபெற‌ உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலம் உள்ளதால் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 234 தொகுதியிலும் அ.தி.மு.க’வை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்’’ என்றார்.

ஓ.பி.எஸ்

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ‘’நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சில குறைகள் இருந்தது. இந்தச் சட்டமன்ற தேர்தலில் அந்த குறையும் இருக்கக்கூடாது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ’ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என தேனி தொகுதி மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் சுறுசுறுப்பான காளை போன்று பணியாற்ற வேண்டும், நமக்குள் அடங்கிப் போகலாம் எதிர்க்கட்சிகளிடம் அடங்காத காளைகளாக, தூக்கி வீசும் காளைகளாக இருக்க வேண்டும்” என்றார்.

ஓ.பி.எஸ்

தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் ஓ.பி.எஸ். இக்கூட்டத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் மற்றும், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ’என் பெயரையோ, படத்தையோ கட்சி நிகழ்ச்சிகளில், பேனர்களில் பயன்படுத்த வேண்டாம்’ எனக் கூறி அறிக்கை விட்ட, ஓ.பி.எஸ் இளையமகன் ஜெயபிரதீப், இக்கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/ops-advised-party-executives-in-theni-regarding-2021-tn-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக