Ad

திங்கள், 1 மார்ச், 2021

கரூர்: தொடரும் கந்துவட்டி கொடுமை?! - கொடூரமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி

கரூரில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகிய பெண் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே பகுதியைச் சேர்ந்த கூலிதொழிலாளி ஒருவர், கந்துவட்டிகாரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகிச்சையில் பழனிசாமி

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கந்துவட்டி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கந்துவட்டி கும்பலால், அப்பாவிகள் பாதிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு கந்துவட்டி கொடுத்தவர், அந்த பெண்ணின் வீட்டை மிரட்டி எழுதி வாங்கியதால், மனம் உடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் கந்துவட்டி கொடுமையால் கூலித்தொழிலாளி ஒருவர் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிகிச்சையில் பழனிசாமி

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே இருக்கிறது ஆத்தூர் சமுத்திரம். இந்தப் பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி (வயது 60). கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லோகேஷ் என்ற மகனும், பேபி என்ற மகளும் உள்ளனர். பழனிசாமி மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகி, அவர்கள் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், பணத்துக்கு சிரமப்பட்ட லோகேஷ், அதே பகுதியைச் சேர்ந்த விக்கியிடம் ரூ. 3000 கடனாக வாங்கியுள்ளார் அதற்கு, நூற்றுக்கு பத்து ரூபாய் வீதம் வட்டி வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் டெர்மினல் பாயின்ட் அருகே, தனது மகனுடன் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது, அங்கே வந்த விக்கி, லோகேஸ் வாகனத்தை மறித்திருக்கிறார். லோகேஷிடம் பெற்ற கடனை திருப்பிக் கேட்டு, சட்டையை பிடித்து விக்கி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட பழனிசாமி மற்றும் அவரது மகன் லோகேஷை சம்பவ இடத்திலேயே விக்கி தாக்கியதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்து தப்பித்து தனது வீட்டுக்குச் சென்ற பழனிசாமி, தனது மைத்துனர் முனியப்பனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், சம்பவ இடத்திற்கு வந்த முனியப்பன் கண்முன்னேயே, விக்கி பத்து அடியாட்களுடன் வந்து, பழனிசாமியையும், அவரது வீட்டில் இருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கியதாகவும் சொல்கிறார்கள். மேலும், பழனிசாமி, லோகேஷூக்கு ஆதரவாக பேச வந்த, பழனிசாமியின் மைத்துனர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டியதால், முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.

Also Read: கரூர்: `கடனைக் கட்டலைன்னா, கொன்னுருவேன்!'- தற்கொலை செய்துகொண்ட பெண்; சர்ச்சையில் தி.மு.க பிரமுகர்

தொடர்ந்து, பழனிசாமியை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் தூக்கி வைத்து கடத்திச் சென்ற விக்கி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கரூர் - ஈரோடு சாலையில் உள்ள பாலிடெக்னிக் பகுதியில் சாலையோரமாக பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. படுகாயங்களுடன் கிடந்த பழனிசாமியை அப்பகுதியில் உள்ள சிலர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பழனிசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தார் பழனிசாமியை தேடிவந்த நிலையில், சாலையோரமாக படுகாயங்களுடன் பழனிசாமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தகவல் தெரிந்துள்ளது. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்கள் கடந்தும், இன்னமும் முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்யாமல் போலீஸார் புகாரை பெற்றுக் கொள்ள மறுப்பதாக அவரது மனைவி ராமாயி குற்றம்சாட்டுகிறார்.

இதுகுறித்து, பழனிசாமியின் மனைவி ராமாயிடம் பேசினோம்.

ராமாயி

"நாங்க ஏழ்மைப்பட்டவங்க. கொரோனா வந்ததில் இருந்து என் கணவருக்கோ, மகனுக்கோ சரிவர வேலை கிடைக்கலை. இதனால், வருமானமில்லாமல் தவிக்கிறோம். இந்தநிலையில், கொரோனோ ஊரடங்கு காலத்தில் ரூ. 3000 த்தை எனது மகன் லோகேஷ், ஆத்தூர் பகுதியில் உள்ள விக்கி என்ற நபரிடம் நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டி கந்து வட்டி வாங்கினான். விக்கி பத்தி தெரிஞ்சதால, நான் வாங்க வேண்டாம்னு சொன்னேன். ஆனா, குடும்ப கஷ்டத்துக்காக வாங்கினான் .வேலையில்லாத சூழ்நிலையில், ஆறு மாதம் எனது மகனால் வட்டியும், அசலும் கட்ட முடியவில்லை. இதனால், விக்கி என் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அன்னைக்கு என் மகன் லோகேஷ் சட்டையை பிடித்து பொது இடத்தில் விக்கி தாக்கியிருக்கான். அதை தட்டிக்கேட்ட எனது கணவரை தாக்கியதுடன், மீண்டும் பின்தொடர்ந்து வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டனர்.

என் கணவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் தூக்கி சென்று இரவு முழுவதும் வைத்து தாக்கி விட்டு ரோட்டில் வீசி சென்றுள்ளனர். எனது கணவரின் கால் கட்டவிரல் பகுதியை கத்தியால் காயப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர். இரும்பு கம்பியை கொண்டு தலை மற்றும் உடம்பின் மார்பு வயிறு பகுதிகளில் தாக்கியுள்ளனர். இதனால், எனது கணவர் உயிருக்காக போராடி வருகிறார். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என் மகனையும், கணவரையும் கொடூரமாக தாக்கிய விக்கி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

கரூர் மருத்துவக் கல்லூரி

இதுகுறித்து, விக்கியிடம் பேச முயன்றோம். முடியவில்லை. வாங்கல் காவல் நிலையத்தில் பேசினோம்.

"விசாரணை போய்கிட்டு இருக்கு. விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மட்டும் சொன்னார்கள். 'கரூர் மாவட்ட காவல்துறை, கந்துவட்டிகாரர்களால் அப்பாவிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க, கந்துவட்டி கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/karur-daily-labor-attacked-in-financial-issue-police-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக