Ad

திங்கள், 15 மார்ச், 2021

ஜார்ஜ் ஃபிளாய்டாக மேகன் மார்க்கல் - நிறவெறியைக் குறிக்கும் சார்லி ஹெப்டோ கார்ட்டூனால் சர்ச்சை!

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் (Charlie Hebdo) கடந்த வாரம் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் எலிசபெத் ராணியையும், நாட்டின் முன்னாள் இளவரசியான மேகன் மார்க்கலையும், போலீஸாரால் கொடூரமாகக் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க- அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்டுடன் ஒப்பிட்டு கேலிச் சித்திரத்தினை அட்டைப் படத்தில் சார்லி ஹெப்டோ நிறுவனம் வெளியிட்டது. தற்போது இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. மேகன் மார்கல் ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேரி - மேகன்

ரகசியத்தை உடைத்த மேகன்!

கடந்த 2018ம் ஆண்டு திருமணமான ஹேரி - மேகன் மார்கல் தம்பதியர் கடந்த ஆண்டு அரச குடும்பத்திலிருந்தும், பக்கிங்ஹாம் அரண்மனையின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு கலிஃபோர்னியாவில் தங்களது குழந்தைகளுடன் குடியேறினர். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு ஹாரி - மேகன் தம்பதியர், ஆங்கிலத் தொகுப்பாளினி ஓஃப்ரா வின்ஃப்ரேவின் சிறப்புப் பேட்டியில் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் மேகன்.

மேகன் கூறியதாவது, ``அரண்மனையில் இருந்தபோது சிலர் என்னை நிறவெறி, இனவாதம் குறித்த எண்ணங்களுடன் தாக்கியுள்ளனர். அதேபோல், நான் கர்ப்பமாக இருந்தபோது அரண்மனையில் சிலர் நான் ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் எனது குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்றும், அதனால் நீங்கள் ஒதுக்கிவைக்கப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தினர். இதனால், எனக்குப் பல்வேறு முறை தற்கொலை எண்ணங்களும் தோன்றியுள்ளன" என்று கூறினார்.

ஹேரி - மேகன்

தனக்கு இருந்த சிக்கல்கள் குறித்து அரண்மனையின் முக்கிய அதிகாரிகள் சிலரிடம் கூறியும் அவர்கள் உதவ மறுத்துவிட்டனர் என்றும், இதேபோல், பல்வேறு சிக்கல்கள் எனக்கும் எனது கணவருக்கும் ஏற்பட்டதாலேயே நானும் எனது கணவரும் அரச குடும்பத்திலிருந்து வெளியேறினோம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து தனது திருமணம் குறித்த மற்றொரு ரகசியத்தையும் கூறியுள்ளார் மேகன். ஹேரிக்கும் - மேகனுக்கும் பிரிட்டனின் வின்சர் அரண்மனையில் கடந்த 2018-ம் ஆண்டு, மே 19-ம் தேதி அதிகாரபூர்வமாகத் திருமணம் நடைபெற்றது. ஆனால், அதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாகவே தங்கள் இருவருக்கும் ரகசியமாகத் திருமணம் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

மேகனின் இந்தப் பேச்சு, அரச குடும்பத்தினர் மத்தியில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில், பள்ளி விழாவொன்றில் இளவரசர் வில்லியம்ஸிடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``எங்கள் குடும்பத்தினர் யாரும் நிறவெறி எண்ணமுடையவர்கள் இல்லை” என்று முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைச் சித்திரிக்கும் விதமாகவே பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிட்ட இதழின் அட்டைப்படத்தில் மேகனை ஜார்ஜ் ஃபிளாயிடாக சித்தரித்தும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை போலீஸார் டெரிக் சாவாகவும் சித்தரித்து அட்டைப்படத்தை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2015-ல் சார்லி ஹெப்டோவில் வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு, ஜனவரி 7-ம் தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இம்மானுவேல் மேக்ரான்

அந்தச் சித்திரத்தை வகுப்பறையில் காட்டி பாடம் நடத்தியதற்காக பள்ளி ஆசிரியர் சாமுவேல் பேட்டி (Samuel Paty) என்பவர், 18 வயது வாலிபரால் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்லாம் மதம் குறித்துப் பேசிய கருத்துகள் சர்ச்சை அலைகளை கிளப்பின. பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். அரபு நாடுகள் பிரான்ஸ் நாட்டின் பொருள்களை முற்றிலுமாகப் புறக்கணித்தன. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பிரான்ஸில் தொடர்ந்தன. இதனால் சார்லி ஹெப்டோ பத்திரிகையைத் தடை செய்யக் கோரி பல்வேறு விவாதங்கள் எழுந்தபோதிலும் அதற்கு அதிபர் மேக்ரான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்குதலுக்கு மத்தியிலும் இந்தச் சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தநிலையில், திடீர் சர்ச்சையாக வெடித்துள்ள பிரட்டன் ராஜ குடும்பத்தினரின் விவகாரத்தில் சார்லி ஹெப்டோ வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/social-affairs/international/charlie-hebdo-cartoon-on-meghan-markle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக