வேலூர் மாவட்டத்தில் இருக்கிற ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க வசமுள்ள ஒரே சட்டமன்றத் தொகுதி கே.வி.குப்பம்தான். சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் மீண்டும் சீட் கேட்டிருந்த நிலையில், கூட்டணியிலிருக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அமைச்சர் கே.சி.வீரமணிதான் என்று கொதிக்கிறது எம்.எல்.ஏ லோகநாதன் தரப்பு. தனக்கு ‘சீட்’ வழங்கப்படாத நிலையில் தலைமைமீது லோகநாதன் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ லோகநாதன், ‘‘உள்ளூர் அமைச்சர் வீரமணி செய்த வேலையால்தான் எனக்கு சீட் கிடைக்கவில்லை. குடியாத்தம் தொகுதியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், கட்சிக்குள் வந்து மூன்று மாதங்களே ஆன பரிதா என்ற பெண்ணுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் வீரமணி. சீட்டுக்காக அமைச்சருக்கு அந்த பெண் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், குடியாத்தம் தொகுதியைத் தி.மு.க கைப்பற்றியது. ஆனால், என்னுடைய கே.வி.குப்பம் தொகுதி தொடர்ந்து அ.தி.மு.க கையில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் என்னுடைய சட்டமன்றத் தொகுதியில்தான் அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. கட்சியினரும், தொகுதி மக்களும் மீண்டும் எனக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஏன், எதிர்க்கட்சியினரும் அப்படித்தான் நினைத்திருந்தனர்.
அமைச்சர் வீரமணி அந்த பெண்ணுக்குக் குடியாத்தம் தொகுதியை கொடுத்துவிட்டு என் தொகுதியைக் கூட்டணிக்குத் தாரை வார்த்துவிட்டார். அணைக்கட்டு தொகுதிக்குப் பேசக்கூடிய அமைச்சரால் கே.வி.குப்பத்தைச் சொந்தக் கட்சியினருக்குக் கொடுங்கள் என்று பேச முடியாதா? அணைக்கட்டுத் தொகுதி வேட்பாளர் வேலழகன் வீரமணியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனக்கு சப்போர்ட் இல்லை. அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியைப் பார்க்கவுள்ளேன். அ.தி.மு.க ஜெயிக்கின்ற கே.வி.குப்பம் தொகுதியில் பூந்தமல்லியிலிருந்து வேட்பாளரை இறக்கினால் கண்டிப்பாக யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள்.
ஒரு தொகுதி வேஸ்ட்டாகப் போய்விடும். ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் தேவைப்படுகிறது. புரட்சி பாரதம் கட்சி இந்த தொகுதியை கேட்கவில்லை. இவர்களாகத்தான் கொடுத்துள்ளனர். தொகுதியிலிருந்து ஏகப்பட்ட போன் கால்கள் வருகின்றன. ‘கூட்டணி வேட்பாளருக்கு என்னால் வேலை செய்ய முடியாது’ என்று கட்சியினர் கொதிக்கிறார்கள். அமைச்சர் வீரமணியைச் சந்திக்க முயன்றேன். அவர் வெளியில் போய்விட்டார் என்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் கே.வி.குப்பம் ஒன்றுதான் அ.தி.மு.க-வின் தொகுதி. அம்மா மறைவுக்குப் பின்னர் இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு ஆசாபாசத்துக்கும் ஆசைப்படாமல் இருந்தேன். அந்த உணர்வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டால் 200 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு நிச்சயம். இல்லையெனில், தொகுதி கை மாறிவிடும்’’ என்றார் கொதிப்புடன்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kvkuppam-admk-mla-loganathan-accuses-minister-kcveeramani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக