Ad

வியாழன், 4 மார்ச், 2021

ஊழிக்காலம் - 7: சென்னைக்கு ஆபத்து... பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்?! - காரணம் என்ன?

1976ல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'நகர்வலம்' என்ற அறிவியல் புனைகதையில் வரும் வரிகள் இவை. சுஜாதா குறிப்பிடும் காலகட்டமான 21-ம் நூற்றாண்டின் இறுதி, அதாவது 2100க்குள், உண்மையாகவே சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்பு உண்டு.

இன்னும் சொல்லப்போனால், கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகின் பல கடலோர நகரங்கள் முழுவதுமே மூழ்கவும் சாத்தியக்கூறுகள் உண்டு.

சென்னை வெள்ளம்

"சும்மா பீதியை கிளப்புறாங்கப்பா" - என்று இதைக் கடந்து செல்லுமுன் நம் சமீபகால வரலாற்றைப் பார்க்கலாம். "டிசம்பர் மாதத்தில் ஒரு சென்னைவாசிக்குத் தேவை கார், பைக் அல்ல, படகுதான்" என்பதுபோன்ற மீம்கள் உண்மைதானே! வெள்ள பாதிப்பு/உயிர்ச்சேதம்/பொருட்சேதம் போன்றவை வருடாந்திர நிகழ்வுகளாகிவிட்டன. நாளிதழ்களில், 'இயற்கையின் கோரத் தாண்டவம்' என்பது போன்ற சிவப்பெழுத்துத் தலைப்புச் செய்திகள் அடிக்கடி வருகின்றன. புயலால் ஏற்படும் வெள்ள அபாயத்துக்கு நிகரான மற்றுமொரு ஆபத்து கடல்மட்டம் உயர்தல் (Sea level rise). காலநிலை மாற்றத்தால் சராசரிக் கடல்நீர்மட்டம் பல அடிகள் உயரும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

சென்னை உள்ளிட்ட பல கடலோரப் பெருநகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன வருடாந்திரப் புயல்கள். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மழை கொட்டும் வேகத்தைப் பார்த்தாலே, "விடிவதற்குள் முழங்கால்வரை தண்ணீர் நிற்கும்" என்பது தெரிந்துவிடுகிறது. இவைபோன்ற தாழ்வான பகுதிகள் கடல்மட்டம் உயரும்போது நிரந்தரமாகவே மூழ்கி, வசிப்பதற்குத் தகுதியில்லாமல் போகலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

உலக மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 40% பேர், கடற்கரையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கிறார்கள். கடலோர நகரங்களை நோக்கி மக்கள் புலம்பெயர்வது அதிகரித்தபடியே இருக்கிறது. பல கடலோர நகரங்களின் மக்கள்தொகை அதிகரித்தபடியே இருக்கிறது. தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை இந்த நகர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. ஆசியாவில் இதுபோன்ற கடலோரப் பெருநகரங்கள் (Coastal Megacities) நிறைய உண்டு. ஷாங்காய், ஒசாகா, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை சில உதாரணங்கள்.

ஊருக்குள் வெள்ளம்

காலநிலை மாற்றத்தால் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக உயரும்போது, 2100க்குள் சராசரி கடல்மட்டம் 6 அடி வரை உயரலாம் என்று சொல்லப்படுகிறது! கட்டுப்படுத்தப்படாத காலநிலை மாற்றத்தில், இது 8.2 அடியாக அதிகரிக்கும்! உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம் பேர், வருடாவருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது ஒரு தரவு. 90% கடலோரப் பகுதிகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படும். 2050க்குள், உலகின் 570 நகரங்களில் வசிக்கும் 80 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்படுபவர்களில் 80% பேர் தெற்கு அல்லது கிழக்காசியாவைச் சேர்ந்த மக்கள் என்பதுதான் இதில் கவலையளிக்கும் அம்சம். புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் வரும்போது, இந்தப் பாதிப்புகளின் விகிதம் அதிகரித்தபடியேதான் இருக்கிறது, குறைவதாகத் தெரியவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடலோரங்களில் வசிக்கும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம். கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம், வீடுகளையும் நிலங்களையும் இழப்பதால் வாழ்வாதார பாதிப்பு ஆகியவை மக்களை அச்சுறுத்தும். கடல்நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் விவசாயத்துக்குத் தகுதியற்ற தரிசு நிலங்களாக மாறும். கடலோரத்தில் உள்ள கட்டடங்கள் பாதிக்கப்படும். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.

2019ல், Climate Central என்கிற அமைப்பு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் சென்னை உள்ளிட்ட நகரங்கள் எப்படிப்பட்ட பாதிப்பைச் சந்திக்கும் என்பது வரைபடமாக விளக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தரவுகள் கவலையளிக்கின்றன. 2030க்குப் பிறகு காட்டுப்பள்ளி, எண்ணூர், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் அடிக்கடி வெள்ள அபாயம் ஏற்படும். 2050க்குள் கொளத்தூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கத்தில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமான வெள்ள அபாயம் ஏற்படும். பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மீனவர் குடியிருப்புகளில் பெரும்பான்மையான பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. 2050க்குள் உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரை முழுவதுமாகவே கடலில் மூழ்கலாம். சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாயம் அதிகரிக்கும்.

கடல் சீற்றம்

2100க்குள் மாலத்தீவு, சுந்தரவனக்காடுகள், ஃப்ளோரிடா கீஸ், கென்னடி விண்வெளி நிலையம், மணிலா, லண்டன் ஆகியவை முழுவதுமே கடலில் மூழ்கலாம் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். "இவ்வளவு ஏன், 2100க்குள் ஃபேஸ்புக்கின் தலைமையகம்கூட நீருக்குள் மூழ்கிவிடும்! உலகில் உள்ள பெரும்பான்மையான ஸ்மார்ட் ஃபோன்கள் சீனாவின் முத்து நதிப் படுகையில் உள்ள ஷென்சென் நகரில்தான் தயாரிக்கப்படுகின்றன. அதுவும் மூழ்கிவிடும்" என்று எச்சரிக்கிறார்கள். பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் பல சிறிய தீவு நாடுகள் (Small island nations) உண்டு. அவை கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது.

அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்காலும் கடல்மட்டம் உயர்ந்து மூழ்கும் அபாயம் இருப்பதாலும், தன் தலைநகரை ஜகார்தாவிலிருந்து கலிமந்தனுக்கு மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது இந்தோனேசிய அரசாங்கம்! இந்தியாவின் எந்தெந்த தலைநகரங்களுக்கு இதே நிலை ஏற்படும் என்று தெரியவில்லை.

"சென்னையின் பல பகுதிகள் கடலில் மூழ்கிவிட்டதால், தமிழகத்தின் புதிய தலைநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என்கிற தலைப்புச் செய்தியும் எதிர்காலத்தில் வரலாம். அந்த எதிர்காலம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

நகரத்தின் சில பகுதிகள் மூழ்குகின்றன என்றால் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும். அங்கே மரபு ஒன்று முற்றிலுமாக அழிகிறது, வேறு வழியின்றி மக்கள் வேறு இடங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நெரிசலால் தத்தளிக்கும் நகரங்களில் நிலப்பரப்புகள் மொத்தமாகக் காணாமல் போவது பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும். கடலோரங்களில் இருக்கும் மீனவத் தொல்குடிகளின் இருப்பிடம், வாழ்வாதாரம் ஆகியவை முற்றிலும் அழியும். தவிர, இதில் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் நாம் யோசிக்கவேண்டும். நகரங்களை மேலாண்மை செய்பவர்களுக்கு இது பெரிய நெருக்கடியாக இருக்கும். தொடர்ந்து பேரிடர்கள், இழப்புகள் என்று வரும்போது நிவாரணத்துக்கான நிதியோ அவகாசமோகூட இருக்காது!

இவற்றைப் படிக்கும்போது பதற்றமாக இருக்கிறதா? அந்தப் பதற்றம் நியாயமானதுதான். உண்மையில் கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய சில தரவுகளை மட்டுமே தந்திருக்கிறேன். இன்னமும் நம்மால் கணிக்கமுடியாத விளைவுகளும் சேரும்போது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பதே அறிவியலாளர்களின் கணிப்பு. அதனால்தான், "நீங்கள் பீதியடையவேண்டும். நான் எத்தனை கவலையோடு இருக்கிறேனோ அதே அளவுக்கு நீங்களும் பதற்றப்படவேண்டும்" என்கிறார் காலநிலை செயல்பாட்டாளர் க்ரெட்டா துன்பர்க்.

முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயர்கிறது கடல்மட்டம்

கடல்மட்டம் உயர்வது குறித்த எல்லா தரவுகளுமே கவலையளிப்பவைதான். அவை எதிர்காலத்தைப் பற்றிய அதீதமான அசௌகரிய உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. நாம் வசித்த வீட்டை பொருளாதாரக் காரணங்களுக்காக வேறு ஒருவரிடம் விற்றுவிட்டோம் என்பதையே நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, இதில் நம் வீடே கடலுக்குள் போய்விட்டது என்றால்?! கடற்கரையில் நின்றுகொண்டு ஏதோ ஒரு திசையில் கைகாட்டி, "ஒருகாலத்தில் இங்கதான் நம்ம வீடு இருந்தது" என்று குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியிருக்கலாம்!

காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வதோடு, வறட்சியும் வெப்பமும்கூட அதிகரிக்கும் என்கிறார்களே? அது எப்படி? அதன் பாதிப்புகள் எந்த அளவில் இருக்கும்? அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...



source https://www.vikatan.com/government-and-politics/environment/chennai-likely-to-be-submerged-due-to-alarming-rise-of-sea-level

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக