Ad

திங்கள், 15 மார்ச், 2021

அண்ணாவின் அரிசி, கருணாநிதியின் கலர் டி.வி., ஜெ.,வின் மிக்ஸி - அஸ்திரங்களாக மாறிய இலவச திட்டங்கள்

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அணைகள், கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், சாலைவசதி, போக்குவரத்து வசதி எனப் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனாலும், ஆதார உணவுத் தேவையான அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திருப்பியது.

கூடவே மொழிப்பிரச்சினையைச் சரியாக கையாள தவறியது அப்போதைய பக்தவச்லம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை, காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்கள் மக்களை மறக்கடிக்கச் செய்தது.

அண்ணா

அரிசி அஸ்திரத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்

அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த அண்ணா தலைமையிலான தி.மு.க, 1967ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்சினைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரு ரூபாய்க்கு 3 படி லட்சியம், 1 படி நிச்சயம்" என்று தேர்தல் முழக்கங்களை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே தி.மு.க. பக்கம் சென்றது.

கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாக சென்றடைந்தன. “கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா”, ”பக்தவச்லம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி”, ”காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?”, ”கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்” என்பது போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள்.

இது ஒருபுறம் இருக்க, வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுகவின் அப்போதைய நட்சத்திர வேட்பாளரான நடிகர் எம்ஜிஆர், எம். ஆர்.ராதாவால் சுடப்பட்ட சம்பவமும், அவர் குண்டடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் புகைப்படத்தின் போஸ்டரும். திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது.

இவையெல்லாம் சேர்ந்துதான் அண்ணா தலைமையிலான திமுகவை ஆட்சியில் அமர்த்தியது. அந்த தேர்தலில், திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி, ஆட்சியை இழந்தது. அந்த தேர்தலுடன் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது. அப்போது முதல் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே, தங்கள் ஆட்சியில் அரிசி தட்டுப்பாடு மட்டும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொண்டன.

கலர் டிவி-யால் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி

இப்படி அரிசியை வைத்தே ஆட்சியைப் பிடித்த திமுக, அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமைக்கு மாறிய பின்னர், அதே அரிசி பிரசாரத்துடன் சேர்ந்து இலவச கலர் டிவி உள்ளிட்ட மக்களைக் கவரும் பல இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, புதிய பரிணாமம் பெற்றது. குறிப்பாக இதுபோன்ற கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளெல்லாம் 2006 தேர்தலிலிருந்துதான் வெகுவாக வெளியாகத் தொடங்கின.

கலைஞர் கலர் டி.வி

அந்த தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான், அத்தேர்தலின் கதாநாயகன் என வர்ணிக்கப்பட்டது. வழக்கம்போல் அரிசி விஷயத்தில் கவனம் செலுத்தி, ரேசன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின என்றால், ரேசன் அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு வீட்டுக்கு ஒரு கலர் டிவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி தமிழகம் தாண்டியும் மிகவும் பரபரப்பாக பேச வைத்தது.

இதுபோன்ற இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்பு குறித்து ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தாலும், பெருவாரியான மக்களிடையே அதற்கு வரவேற்பு காணப்பட்டது.

கருணாநிதி

வேறு வழியில்லாமல், அதிமுக தரப்பில் ஜெயலலிதாவும் இதேபோன்ற பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனாலும், திமுகவின் கலர் டிவி அறிவிப்புதான் மக்களை வெகுவாக ஈர்த்தது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் அதிமுக 61 தொகுதிகளை வென்றிருந்தது. அதிமுக-வை விட திமுக 35 இடங்களில் மட்டுமே கூடுதலாக வென்றிருந்தது. திமுக அறிவித்த இலவச திட்டங்களும், விஜயகாந்த் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக-வின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதும் திமுக அணிக்கு சாதகமாக அமைந்தன.

திமுக வழியில் அதிமுக

இந்த இலவச திட்டங்களின் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.விற்கு முன்னதாகவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இலவசமாக மிக்சி, ஃபேன் வழங்குவோம், திருமண உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்குவோம். முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும்" என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

இலவச அம்மா மிக்ஸி

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானதும், இப்போது போன்றே அப்போதும் அதை அ.தி.மு.க. அப்படியே காப்பி அடித்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்சி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம் பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க.வோ ஒருபடி மேலே போய் மிக்சி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

Also Read: எம்.ஜி.ஆரை எதிர்த்த ஜெய்சங்கர்... கருணாநிதியுடன் கைகோத்த டி.ஆர்... அரசியல் அப்போ அப்படி - 5

இதுவும் வாக்காளர்களைத் திரும்பி பார்க்க வைத்த நிலையில், அத்தேர்தலில் 168 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க.

மூன்றாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. 124 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க எதிர்க்கட்சியானது.

2021 அதிமுக தேர்தல் அறிக்கை
2021 திமுக தேர்தல் அறிக்கை

இதோ 1967-ல் அரிசியில் தொடங்கிய திமுகவின் தேர்தல் வாக்குறுதி, ஆவின் பால் விலை குறைப்பு, மாணவர்களுக்கு இலவச பால் என இப்போதைய 2021 தேர்தல் வரை தொடர்கிறது. எதிர்பார்த்தது போலவே திமுகவின் தேர்தல் அறிக்கை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், வழக்கம்போல் அதிமுகவும் அதிலுள்ள முக்கிய அறிவிப்புகளைப் பின்பற்றி, இன்னும் கூடுதலான திட்டங்களை அறிவித்துள்ளது.

எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களைக் கவர்ந்தது என்பதை வருகிற மே 2 ஆம் தேதி தெரிந்துவிடும்!

பகுதி 5: படிக்க க்ளிக் செய்க...



source https://www.vikatan.com/news/politics/freebies-role-in-tamilnadu-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக