Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

மேடம் ஷகிலா 7: ஆண்மை - கலவி - குழந்தை... இவை ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?!

”தாயாகும்போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள்”, ”ஒரு பெண்ணுக்குக் குழந்தைப்பேறு கொடுப்பது ஆண் பெண்ணுக்கு செய்யும் கருணை” என்பதெல்லாம் 1960 முதல் 90-கள் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து திரைப்படங்களிலும் வசனமாகவோ, பாடலாகவோ கேட்டிருக்கலாம். குழந்தை வளர்ப்பது முழுக்க முழுக்க பெண்களின் வேலை, அப்படி செய்யாதவர்கள் குடும்பப்பெண்கள் அல்ல எனப் பேசும் வடிவேலு - கோவை சரளா நகைச்சுவை(?!!) காட்சிகள்கூட நினைவிருக்கலாம்.

தமிழ் சினிமாவின் அவ்வளவு கதாநாயகர்களும் தாய்மையைப் போற்றும் காட்சிகளில் நடித்திருக்கின்றனர். தாய்மையை, தாயை #Romanticize செய்வது பெண்களை அடிமையாக்க என்பது பெண்களுக்குத் தெரிந்திருந்தாலும்கூட அதுவரை எல்லாவற்றுக்கும் தலையில் குட்டுப்பட்டு வளர்ந்த பெண்களுக்கு திடீரென்று கிடைக்கும் பெருமிதமும், அங்கிகாரமும் தேவைப்படுகிறது, அது போலி என்றாலும்கூட.

கற்பு, தாய்மை, பிள்ளை பெறுதல் இவற்றை சுற்றியே நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு, பாரம்பர்யம் பின்னப்பட்டிருக்கிறது. சாதி ஆணவக்கொலை, ஓர் பாலின ஈர்ப்பு, திருநர்கள் காதல் முதல் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' கதை சர்ச்சையானதுவரை இங்கு எல்லாமே பெண்களின் கற்பையும்(?!), கர்ப்பப்பையையும் மையப்படுத்தி செய்யப்படும் மோசமான அரசியல். காரணம் ஒரு ஆண் தன் சாதி, மதம், இனத்தை பாதுகாக்க இன்னொரு ஆணிடம் சமர் புரிய தேர்ந்தெடுக்கும் களம் பெண்ணின் உடல்!

Pregnant woman

பூப்பெய்தல் தொடங்கி குழந்தை பெறுதல்வரை ஒரு பெண்ணுக்கு உடல் அளவில் இயற்கையாக இனவிருத்திக்காக நடக்கும் மாற்றங்களை நாம் சடங்கு, சம்பிரதாயம், கலாசாரம் எனப் புனிதப்படுத்தி வைத்திருக்கிறோம்.

தாயைத் தெய்வமாக கருதுவது, தாய்மையைப் புனிதப்படுத்தி வைத்திருப்பது, குழந்தை பிறப்பது கடவுளின் வரம் என்றெல்லாம் பெண்ணையும், அவள் இனவிருத்தி செய்வதையும் போற்றுவது உண்மையில் பெண்களை சக உயிரினமாக அல்லாமல் இனவிருத்தி செய்யும் இயந்திரமாக, அடிமையாக வைத்துக்கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்று.

குடும்பம், குழந்தை பெற்றுக் கொள்வதைவிட தன்னுடைய கனவுகள், #Passion முதலியவற்றை முக்கியமாக பெண் கருதும்போது அவள் சமூகத்திற்கு எதிரானவளாக பார்க்கப்படுகிறாள். படிப்பிற்காகத் திருமணத்தையோ அல்லது வேறு காரணங்களுக்காக திருமணம் முடிந்து குழந்தை பெறுவதையோ ஒரு பெண் தள்ளிப்போடும்போது அதை அவள் குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

திருமணத்திற்கு பிறகு குழந்தை பெறுவதை சில காலம் ஒத்தி வைக்க பல்வேறு காரணங்கள் உண்டு. வெளியூர்/ வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் பெண்கள் அந்த இடத்திற்கு ஏற்றவாறு உடல் மற்றும் மனதளவில் மாறுவதற்கு சிலகாலம் ஆகும். அதேபோல் வேலையில் இருக்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் உடனடியாக நீள்விடுப்பு எடுக்க முடியாத சூழல் இருக்கலாம். சிலர் ஏற்கெனவே வேறு மருத்துவ சிகிச்சையில் இருக்கலாம். இது எதுவும் புரிந்துகொள்ளாமல் திருமணமான இரண்டாம் மாதத்தில், "விசேஷம் உண்டா?” என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

Couple

“மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் முடிஞ்சு, குட் நியூஸ் இல்லையா?” என கேட்கும் உறவுப்பெண்ணிடம், “புது வீடு, எட்டு அவார்ட்ஸ், சொந்த கம்பெனிகூட ஆரம்பிச்சாச்சு, இதுக்குமேல என்ன குட்நியூஸ் எதிர்பார்க்கறீங்க?” என்று நித்யா மேனன் பதில் கேள்வி கேட்கும் காபி விளம்பரம் ஒன்று சமீபத்தில் வந்திருக்கிறது. போலி கலாசார அடிமைத்தனத்தை அடித்து காலி செய்யும் இதுபோன்ற விளம்பரங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நிஜ வாழ்வில் சொல்லிவிட முடியாது.

குட் நியூஸ் இல்லையா என்ற கேள்விக்கு ஒரு பெண், ”ஏன் இல்லை” என்பதற்கான காரணங்களை சொல்லி அவர்கள் அருளும் அறிவுரைகளை அமைதியாக கேட்டுக்கொள்ள வேண்டும். காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை என்றால் அவமானத்தில், குற்றவுணர்ச்சியில் அமைதியாக தலை குனிந்து நிற்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இந்தச் சமூகம் எதிர்பார்க்கும் இரண்டே ரியாக்ஷன்கள் இவைதான். மற்றபடி அந்தப் பெண்ணின் பதிலால் அவர்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அடுத்தவரின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாமல் மனிதர்கள் செய்யும் அநாகரீக செயல்களில் ஒன்று, பார்ப்பவர்களை எல்லாம் திருமணம் செய்துகொள்ளவும், பிள்ளை பெற்றுக்கொள்ளவும் சொல்லி வலியுறுத்தி அறிவுரைகளை வலிந்து திணிப்பது. வீட்டுப் பெரியவர்கள், உறவினர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்துவதால் ஆண்/ பெண் இருவருமே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மருத்துவமனைப் பரிந்துரைகள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் ஜாதகம்/ஜோசிய பரிகாரங்கள், எந்தக் கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும், விரதம் இருக்க வேண்டிய நாள்கள், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் என்று பிள்ளை இல்லாதவர்களுக்கு 'நல்லது செய்வதாக(?!)' இந்த சமூகம் செய்யும் அழிச்சாட்டியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

mother and kid

குழந்தை இல்லை என்றால் அவமானம் என்ற பொதுப்புத்தி இருக்கும் சமூகத்தில் ஒவ்வொருமுறை மருத்துவமனை செல்லும்போதும் ஒரு பெண் வாழ்வா, சாவா என்று போருக்கு செல்லும் மனநிலையுடன்தான் செல்கிறாள். “இந்தமுறை சக்சஸ் ஆகலைன்னா உயிரோடு இருக்க மாட்டேன்” என்று மூன்றாவது முறையாக #IVF சிகிச்சையில் முயற்சி செய்தபோது என்னிடம் சொன்னவர்கள் உண்டு. குழந்தை இல்லை என்றால் ஒரு பெண்ணை சாகும் எண்ணத்தில் தள்ளும் இந்த வாழ்க்கைமுறையை எப்படி கலாசாரமாக, பண்பாடாக கொள்வது. இந்த மன உணர்வுகளைக்கூட புரிந்துகொள்ள முடியாத குடும்ப அமைப்புகள் அடிமைத்தனத்தின் உச்சம் அல்லவா?

அதேபோல் ஓர் ஆண் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும்போது, ”பிள்ளையின் முகத்தைப் பார்த்து ஆறுதல் அடையவாவது பிள்ளை பெற்றுக்கொள்” என்கிறார்கள், அதே ஆண் தனது கரியரில் முன்னேறினால், “இந்த வருமானத்திற்காகவாவது பிள்ளை பெற்றுக்கொள்" என்கிறார்கள். எதைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டும், வருமானத்தை என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்தானே தீர்மானிக்க வேண்டும்.

குழந்தை இல்லாததால் ஆண்களுக்கு உண்டாகும் மன பிரச்னைகளை பெரும்பாலும் நாம் கணக்கில் கொள்வதில்லை. காலங்காலமாக ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் பெண்களை மட்டுமே காரணமாக சுட்டும் நிலை மாறி ஆண்களுக்கும் சம அளவில் பிரச்னை இருப்பதை அறிவியல் புரிய வைத்திருக்கிறது. அதற்கான சிகிச்சைகளும் வந்துவிட்டது. இது ஒருபுறம் மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் இவ்வளவு காலம் மலட்டுத்தன்மை #Infertility என்பது பெண்கள் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருந்த ஆண்களுக்குத் திடீரென்று ஆண்களுக்கான சிகிச்சைகளை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

மாறிவரும் உணவுப்பழக்கங்கள், வேலை பார்க்கும் சூழல், பருவநிலை மாற்றங்கள் என ஆண் மலட்டுத்தன்மைக்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. இன்றும் குழந்தை பிறக்க தாமதமானால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை. அதை அவமானமாக நினைத்து மனைவியிடம் சண்டையிடுபவர்களும், விவாகரத்துவரை செல்பவர்களும் உண்டு.

ஆண்கள்

இயல்பாக காதலோடு நடக்க வேண்டிய கலவி பயத்துடனும், பதற்றத்துடனும் குழந்தைக்கான எதிர்ப்பார்ப்புடனும் நடக்கிறது. திருமணமாகி இரண்டாவது ஆண்டு முதல் பத்தாண்டுகள்வரை பிள்ளை பெற்றுக்கொள்ளும் 'Process'ல் மட்டுமே நாட்கள் செலவாகின்றன. இதனால் மகிழ்ச்சியாக இல்லாமல் தங்கள் இளமைக் காலத்தை கணவனும் - மனைவியும் வீணாக்குகிறார்கள்.

ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். ஆனால், குழந்தை பெறுவதையும் ஆண்மையையும் தொடர்புபடுத்தி, ஆண்களுக்குள்ளான கேலிச்சண்டைகளில் இருந்து அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் 'ஆண்மை இருந்தால்' என்று கேட்பதுவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் சாதாரணமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஆண்மை - கலவி - குழந்தை உருவாகுவது மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது என்கிற புரிதல் இங்கே படித்தவர்களிடம் கூட இல்லை.

கணவன், மனைவி இருவரும் சமமாக சம்பாதிக்கும் நிலையில் இருக்கின்ற ஒரு குடும்பத்தில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அந்த கணவன் விரும்புகிறான். மனைவிக்கு ஒரே குழந்தை போதும் என்று உறுதியாக இருக்கிறாள். குடும்பம், பாரம்பர்யம் பல்வேறு காரணங்கள் சொல்லி, தன் விருப்பத்தை இறுதியில் அந்த கணவன் நிறைவேற்றுகிறான். அவள் தன்னுடைய வேலையில் அடுத்த கட்டத்தை எட்டும் நிலையில், வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது அந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்போது அங்கே அவள் மட்டுமல்லாமல், இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. இவ்வளவு ஆண்டுகளாக தன் அறிவாலும் உழைப்பாலும் ஓர் இடத்திற்கு வந்தபிறகு அதை எளிதாக விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் எல்லாம் பெண்கள் மேல் மட்டுமே சுமத்தப்படுகிறது. இங்கே அன்பால் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்.

Working Woman

ஆண், பெண் இரு பாலினருக்கும் பாடத்திட்டங்கள், பரீட்சைகள், மதிப்பெண்கள், வேலை வாய்ப்புக்கான தேர்வுகள், பெரும்பாலான வேலைகள், சம்பளம் என எல்லாமே சமமானவை. பள்ளி செல்லும் நாள் முதல் ஓர் ஆணைப் போலவே பெண்ணும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்கிற கனவுகளோடு வளர்கிறாள். ஆனால் திருமணம் மற்றும் பிள்ளைகள் என்று வரும்போது முதலில் தன்னுடைய கனவுகளை, வேலையை கைவிடுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். குழந்தை பெறுதல், வீட்டில் பெரியவர்களின் உந்துதல் மற்றும் சமூகத்தின் அழுத்தத்தாலும் எடுக்கப்படும் முடிவாகவே இருக்கிறது.

வீடும், குழந்தைகளும் மட்டுமே பெண்ணுக்கு முதன்மை கடமை என்று சொல்லி அவளை திருமணம் செய்து வைப்பது பத்தாண்டுகள் முன்புவரை நகரங்களில் படித்தவர்களிடையே கூட சகஜமாக நடந்த ஒன்று. ஒரு பெண்ணுக்கு பூப்பெய்திய நாளிலிருந்து பண்பாட்டின் பெயரில் அவளுக்குப் போதிக்கப்படும் அனைத்தும் குடும்ப அமைப்பு உடையாமல் இருக்க பெண் தியாகியாக வேண்டும் என்கிற ஒற்றைப்புள்ளியில் இணையும். அதில் முக்கிய கட்டம் பிள்ளைகள் பெற்று வளர்ப்பது.

குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை அல்லது குழந்தை பெறுவதை சில காலம் தள்ளிப்போடலாம் என்று ஒரு பெண் சொல்வதை மதித்து முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் சூழல் நம் குடும்பங்களில் இல்லை. அப்படி சொல்லும் பெண்களுக்கு 'குடும்பப் பெண் அல்ல' என்கிற முத்திரை குத்தப்படும். அவள் நேரடியாகவும், மறைமுகமாகவும் குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவாள்.

திருமணத்தின்போது வேலை, சம்பளம், சொத்து மதிப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசி #Verify செய்வது போல திருமணத்திற்கு பிறகு குழந்தை பெறுவதற்கு இருவருக்கும் சம்மதமா, எப்போது பெற்றுக்கொள்ளலாம் போன்ற விஷயங்களை பேசி முடிவு செய்துகொள்வதும் அவசியம்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயங்களில் #TransitionPeriod –ல் இருக்கும் 80s மற்றும் 90sKids ஆண்கள் பாரம்பர்யத்தின் பெயரில் திணிக்கப்பட்டவைகளில் இருந்து முழுவதுமாக வெளியேற முடியாமல், சம உரிமை கோரும் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளவும் தெரியாமல் தவிக்கின்றனர்.
Sad Couple

தற்காலத்தில் பிள்ளை வளர்ப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. குழந்தைகளை முழு நேர பொறுப்பாக கவனித்துக்கொள்ள மட்டுமே ஒருவர் வீட்டோடு இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இரண்டு குழந்தைகள் இருக்கும் நாற்பது வயது நடுத்தர வர்க்க குடும்பத்தினர் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு, எதிர்கால கனவுகள் குறித்து எந்த நேரமும் அச்சத்துடன் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் நிலையையும், புலம்பலையும் பார்க்கும் முப்பதுகளில் இருப்பவர்கள் இன்று குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிப்போடவோ அல்லது மொத்தமாக கைவிடும் முடிவிற்கோ வருகிறார்கள்.

2016-ல் வெளிவந்த 'அழகு குட்டி செல்லம்' என்ற திரைப்படத்தில் 18 வயது நிரம்பிய பெண் ஒருத்தி திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆகி விடுகிறாள். காதலனிடம் தெரியப்படுத்தி திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறாள். காதலன் சில மாதங்கள் அவகாசம் கேட்கிறான். அவனுக்காகக் காத்திருக்கிறாள். கர்ப்பத்தை கலைக்க முடியாத அளவு சென்றுவிட்ட பிறகு அவளது பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது. அவள் அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பதில் உறுதியாக நிற்கிறாள்.

பதினெட்டு வயது நிரம்பிய பெண் தன்னுடைய கருவை (20 வாரங்களுக்கு உட்பட்ட) கலைக்க பெற்றோர்/கணவர் அனுமதி தேவையில்லை என Medical Termination of Pregnancy Act, 1971 சொல்கிறது. அதேபோல் அந்தக் குழந்தையை வளர்க்கவும் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில், ஒன்னரை மாத கருவை கலைப்பது கொலை செய்வதற்கு சமம் என நாயகி சொல்கிறாள். மேலும் ”ஒருமுறை கருவை கலைத்தால் எப்போதும் குழந்தை பிறக்காது” என்பதால் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறாள். பல்வேறு காரணங்களினால் உண்டாகும் தேவையில்லாத கர்ப்பத்தைக் கலைப்பதை அரசு சட்டம் இயற்றி அங்கிகரிக்கின்றது. அப்படியிருக்க கருவைக் கலைப்பது கொலை செய்வதுபோல என்பதும், ”ஒருமுறை கலைத்தால் பிறகு பிறக்காது” என்பதும் எந்த ஆதாரமும் இல்லாமல் காலங்காலமாக நம் வீடுகளில் சொல்லப்படும் பிற்போக்குத்தனமான போதனைகள்.

புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு ”வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி?” என YouTube-ல் மருத்துவ குறிப்புகள் சொல்லும் கோஷ்டியை நம்பி, வீட்டில் பிரசவம் பார்க்க முயற்சி செய்து பெண்களையும், குழந்தையையும் கொல்லும் கொடூரமான செயல்களும் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற முட்டாள்தனங்களை 'தங்களுக்கு எல்லாம் தெரியும்' என்கிற நகரத்து அதிமேதாவிகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேடம் ஷகிலா

ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்கு முழு காரணமும் பெண்தான் என்று சொல்லி அவளை ஒதுக்கிவைத்து இரண்டாம் திருமணங்கள் நடப்பது எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நமது வீடுகளிலும் கூட இருபது வருடங்களுக்கு முன்புவரை பார்த்திருக்கிறோம். ஒரு வகையில் இப்போது வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் மருத்துவ வசதிகளும் 'குழந்தை இல்லை' என்கிற நிலையை கடக்கச் செய்திருக்கிறது.

அதன் மறுபக்கம் இன்று வளர்ந்து வரும் பெரிய தொழில்களில் ஒன்றாக #FertilityClinic-கள் இருக்கின்றன. சிறு நகரங்களில் இரண்டு லட்சங்களில் ஆரம்பிக்கும் டெஸ்ட் ட்யூப் மூலம் கருத்தரிக்கும் சிகிச்சைகளுக்கு பெரு நகரங்களில் பத்து லட்சம்வரை வசுல் செய்யப்படுகிறது.

இந்தக் கருத்தரிப்பு மையங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதை அடுத்த வாரம் பேசுவோம்!


source https://cinema.vikatan.com/women/madam-shakeela-series-7-the-difference-between-the-act-of-sex-and-giving-birth-to-a-child

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக